வெள்ளிப் பணம்!

ஓர் ஊரில் ஒரு மனிதன் நீண்ட தொலைவு பயணம் செய்ய வேண்டியிருந்தது. அவன் தன்னிடமிருந்த வெள்ளிப் பணத்தை எல்லாம் ஒரு பானைக்குள் வைத்து அவற்றின் மீது வெண்ணெயை நிரப்பினான்.
வெள்ளிப் பணம்!

ஓர் ஊரில் ஒரு மனிதன் நீண்ட தொலைவு பயணம் செய்ய வேண்டியிருந்தது. அவன் தன்னிடமிருந்த வெள்ளிப் பணத்தை எல்லாம் ஒரு பானைக்குள் வைத்து அவற்றின் மீது வெண்ணெயை நிரப்பினான். இப்போது பானைக்குள் வெண்ணெக்குக் கீழ் வெள்ளிப் பணம் இருப்பது யாருக்கும் தெரியாது அல்லவா?
 பிறகு பானையுடன் பக்கத்து வீட்டுக்காரனிடம் சென்றான்.
 "நான் வெளியூர்ப் பயணம் செல்கிறேன்....எனக்காக இந்த வெண்ணெய்ப் பானையை பத்திரமாக வைத்திரு. நான் திரும்பி வந்ததும் வாங்கிக் கொள்கிறேன்.
 ஆனால் வெள்ளிப் பானைக்குள் வெள்ளிப் பணம் வைத்திருப்பதைப் பற்றி அவன் எதுவும் தெரிவிக்கவில்லை.
 சில நாட்களானது.
 பக்கத்து வீட்டுக்காரன் நினைத்தான்...... ""பானைக்குள் இருக்கும் வெண்ணெய் கெட்டுப் போய்விடும் என்று அச்சமாய் இருக்கிறதே?''
 ..... பானைக்குள் இருந்த வெண்ணெய் முழுவதையும் வெளியே எடுத்தான். உள்ளே வெள்ளிப் பணம் இருப்பதைப் பார்த்தான். பணத்தை எடுத்து வைத்துக் கொண்டான். பணத்துக்குப் பதிலாக பானைக்குள் சிறு கற்களைப் போட்டு வெண்ணெயால் நிரப்பி விட்டான்.
 வெளியூர்ப் பயணம் சென்றவன் திரும்பி வந்தான். பக்கத்து வீட்டுக் காரனிடம் சென்று தான் கொடுத்த பானையைக் கேட்டான். பானையுடன் வீட்டுக்குச் சென்றான். வெண்ணெய் முழுவதையும் வெளியே எடுத்துவிட்டு வெள்ளிப் பணத்தைத் தேடினான். காணவில்லை! வெண்ணெய்க்குக் கீழே சிறு கற்கள் மட்டும்தான் இருந்தன.
 அவனுக்குக் கடுமையான கோபம் வந்தது. அப்போது அவனுடைய நண்பன் ஒருவன் அவனைப் பார்க்க வந்தான்.
 "என்னுடைய நண்பனே ஏன் கோபமாக இருக்கிறாய்?'' என்று கேட்டான்.
 நடந்தவை அனைத்தையும் நண்பனிடம் கூறினான் வெளியூர் சென்று திரும்பியவன்.
 "சரி,.....உன்னுடைய பணத்தை எப்படித் திருப்பி வாங்குவது என நான் சொல்லித் தருகிறேன்,....வா,....காட்டுக்குப் போகலாம்.
 இரண்டு பேரும் காட்டுக்குப் போனார்கள். அங்கே ஒரு குரங்கைப் பிடித்தார்கள். அதை வீட்டுக்குக் கொண்டு வந்தார்கள்.
 இப்போது நீ உன் பக்கத்து வீட்டுக்காரனிடம், "என்னுடன் சந்தைக்கு உன்னுடைய மகனை அனுப்பி வை....சந்தையிலிருந்து உணவுப் பொருட்களை வாங்கித் தூக்கிக் கொண்டு வருவதில் எனக்கு உதவியாக இருப்பான்!...'' என்று சொல்.
 அவனும் அப்படியே செய்தான். பக்கத்து வீட்டுக் காரனும் அவனுடைய மகனை அனுப்பி வைத்தான். ஆனால் அவர்கள் சந்தைக்குச் செல்லவில்லை. வீட்டுக்குச் சென்று பக்கத்து வீட்டுக்காரச் சிறுவனை தன்னுடைய வீட்டிலுள்ள ஓர் அறையில் வைத்துப் பூட்டினான்.
 பிறகு அந்த நண்பன், "இப்போது பக்கத்து வீட்டுக்காரனிடம் குரங்குடன் சென்று, "இதோ உன்னுடைய மகன்!' ....என்று சொல்!''.....என்றான்.
 அவனும் அப்படியே செய்ய பக்கத்து வீட்டுக்காரனுக்கு பயங்கரக் கோபம் வந்து விட்டது.
 "குரங்கை இங்கிருந்து கொண்டு செல்!.....என்னுடைய மகனைத் திருப்பி அழைத்து வா!...''
 "ஏன்?...இதுதான் உன் மகன்!....வெள்ளிப் பணமானது சிறு கற்களாக மாறும் என்றால், சிறுவன் குரங்காக மாறுவதில் என்ன அதிசயம்?''
 பக்கத்து வீட்டுக்காரனுக்கு எல்லாம் புரிந்து விட்டது. அவன் பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தான். இவனும் அந்தச் சிறுவனை தந்தையிடம் ஒப்படைத்தான்.
 புத்திசாலி நண்பனை வெகுவாகப் பாராட்டினான் அந்த மனிதன். நண்பனுக்கு அந்தப் பணத்திலிருந்து சிறிதளவு தரவும் முன் வந்தான். ஆனால் அவனுடைய நண்பன் வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டான்.
 "நெஸ்லிங் புக்ஸ் பப்ளிஷிங்' வெளியிட்ட "குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள்' புத்தகத்திலிருந்து...
 - எம்.பாண்டியராஜன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com