அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை

காசி மற்றும் பிற தலங்களுக்குக் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தஞ்சையிலிருந்து ரயிலில் கிளம்பினோம்.
அலகாபாத் முதல் ரிஷிகேஷ் வரை
Published on
Updated on
3 min read

காசி மற்றும் பிற தலங்களுக்குக் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக தஞ்சையிலிருந்து ரயிலில் கிளம்பினோம்.
 8.10.2014 அன்று விடியற்காலை அலகாபாத் வந்து, திரிவேணி சங்கமத்தில் நீராடச் சென்றோம். கங்கா, யமுனா மற்றும் கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதி சங்கமிக்கும் இடத்திற்குப் படகில் சென்று புனித நீராடிவிட்டுத் திரும்பினோம். மூன்று ஆறுகளும் சேரும் அவ்விடத்திலிருந்து சூரிய உதயம் பார்த்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தொடர்ந்து ஆனந்த பவனம்.
 கயா: 9.10.2014 காலை கயா வந்தடைந்தோம். காலையில் விஷ்ணுதத் கோயில் சென்றோம். அங்கு ஒரு நபருக்கு ரூ.270 வீதம் எங்கள் குழுவில் பலர் இறந்தவர்களுக்குத் திதி கொடுத்தனர். தொடர்ந்து மங்களகெüரி கோயிலுக்கும் சக்திபீடத்திற்கும் சென்றோம்.
 புத்தகயா: மதியம் புத்தகயா. அங்கிருந்த புத்தர் கோயிலான மகாபோதி கோயில் சென்றோம். அழகான புத்தரைப் பார்த்தோம். கோயில் வளாகத்தில் புத்தர் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் புகழ் பெற்ற போதி மரத்தினைப் பார்த்தோம். மரத்தின் அருகில் யாரும் செல்லாமல் இருப்பதற்காக மரத்தைச் சுற்றிலும் பாதுகாப்புச் சுவர் இருந்தது. போதி மரத்தருகே புகைப்படம் எடுத்துக் கொண்டோம். கோயிலைச் சுற்றியும் காணப்பட்ட அமைதியான சூழல் மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. தொடர்ந்து தாய்லாந்து புத்தர் கோயிலைப் பார்த்தோம். அதற்குப் பின்னர் அமர்ந்த நிலையில் பார்க்க கம்பீரமாக இருந்த புத்தர் சிலையில் என்னவொரு சோகம்?
 காசி: 10.10.2014 காலை நாங்கள் ஆவலோடு எதிர்பார்த்த காசி மண்ணில் காலடி வைத்தோம். கங்கையில் நாங்கள் இருவரும், எங்கள் குழுவினருடன் புனித நீராடினோம். காலையில் காமகோடீஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். பின்னர் கேதாரநாதர் கோயிலுக்குச் சென்றோம். இக்கோயிலின் பின்புறம் கங்கை ஓடுவதைப் பார்க்க அழகாக இருந்தது. அடுத்தபடியாக காசி விசுவநாதர் கோயிலுக்கு நுழைவாயிலின் வழியாகச் சென்றோம். கூட்டம் அதிகமாக இருந்தது. பலத்த பாதுகாப்பு இடப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் சோதனையிடப்பட்டே அனுப்பப்பட்டோம். பேனா, கேமரா, செல்பேசி என எதையும் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. வலப்புறத்தில் அமைந்துள்ள அன்னபூரணி அம்மன் கோயிலுக்குச் சென்றோம். தங்க அன்னபூரணியைக் கண்குளிரக் கண்டோம். அவர் அருகில் வெள்ளியால் ஆன சிவனை பிச்சாண்டவர் கோலத்தில் கண்டோம். அன்னபூரணி சிவனுக்கு அன்னம் இடுவதாக வரலாறு கூறினர். வரிசையில் தொடர்ந்து சென்று காசி விசுவநாதர் கோயிலை அடைந்தோம். கோயிலுக்குள் போகும்போது பக்தர்கள் பூ, பால், நீர் போன்ற ஏதாவது ஒன்றைக் கொண்டு செல்வதைக் காணமுடிந்தது. அதை வைத்து அவர்களே லிங்கத் திருமேனிக்கு அபிஷேகம் செய்கிறார்கள். நம்மூர் கோயில்களில் கருவறைக்குள் பக்தர்களை அனுமதிப்பதில்லை. இங்கு அவரவர் செய்வதால் இறைவனையே நேரில் சென்று அடைந்தது போன்ற ஓர் பேரின்பத்தை பக்தர்கள் மனதார
 அடைகிறார்கள்.
 கங்கை: மாலை கங்கையாற்றில் படகிலிருந்தபடியே 64 கங்கைக்கரைகளில் மன்மந்திர் காட், அகில்பாய் காட், முன்ஷி காட், நாரதர் காட், மணிகர்ணீஸ்வரர் காட், அரிச்சந்திரா காட் உள்ளிட்ட சில கரைகளைப் பார்த்தோம். இவற்றில் மணிகர்ணீஸ்வரர் காட் மற்றும் அரிச்சந்திரா காட் என்ற இரு இடங்களிலும் சடலங்கள் எரியூட்டப்படுவதைக் கண்டோம். சடலங்கள் எரியும்போது எவ்வித துர்நாற்றமும் வீசாது என்று கூறினர். அதை நேரிலும் உணர்ந்தோம்.
 அடுத்த இரு நாள்கள் காசியிலுள்ள பிற முக்கியமான கோயில்களுக்குச் சென்றோம். காசிப் பயண நிறைவாக இந்தியாவின் புகழ் பெற்ற காசி இந்து பல்கலைக்கழகம் சென்றோம். பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த காசிவிசுவநாதர் கோயிலுக்குச் சென்று அவரை
 வணங்கினோம்.
 மிர்சாபூர்: 13.10.2014 அன்று மிர்சாபூரிலுள்ள முதல் சக்தி பீடம் என அழைக்கப்படும் பிந்திவாசினி கோயில் சென்றோம். அம்மனின் பல் விழுந்த வகையில் அவ்விடம் முக்கியத்துவம் பெற்றதாகக் கூறினர். மதியம் சீதாமடி சென்றோம். ரம்மியமான சூழலில் சுவரில் சீதையின் சிற்பத்தைக் காணமுடிந்தது.
 ஹரித்வார்: 14.10.2014 அன்று புறப்பட்டு 15.10.2014 அன்று ஹரித்வார் வந்தடைந்தோம். அங்கு காயத்ரி யாகசாலை, ஆனந்தமாயி ஆசிரமம், சீதளமாதா கோயில், சிவசக்தி பீடம், லட்சுமிநாராயணா கோயில், தட்சேஸ்வர மகாதேவ் கோயில், தட்சண் யாககுண்டம், வைஷ்ணவதேவி எனப்படும் மாதாலால் தேவி கோயில், பூமாநிகேதன் கோயில், படிக லிங்கம், ருட்திராட்ச மரம், மரண பயம் நீக்குபவர் எனப்படும் மிருத்துஞ்சேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களுக்குச் சென்றோம். ஒரு நாள் முழுவதும் பல கோயில்களைக் காணும் வாய்ப்பைப் பெற்றோம். வைஷ்ணவதேவி எனப்படும் மாதாலால் தேவி கோயில் மற்றும் பூமாநிகேதன் கோயில் இருந்த இடத்தில் ஒரே தெருவில் அதிக எண்ணிக்கையிலான கோயில்
 களைக் காணமுடிந்தது.
 ரிஷிகேஷ்: 6.10.2014 அன்று ரிஷிகேஷுக்கு ரோப் காரில் சென்றோம். ராவணனைக் கொன்ற தோஷம் நீங்கிய லட்சுமண் கோயில், லட்சுமணன் ஜுலா எனப்படும் பெரிய தொங்கு பாலம், பத்ரிநாத் கோயில், பெரிய லிங்க பானத்தைக் கொண்ட அகிலேஸ்வர் கோயில், துர்கா கோயில், திரயம்பகேஸ்வரர் கோயில், ராமன் ஜுலா எனப்படும் மற்றொரு பெரிய தொங்கு பாலம், பத்ரி நாராயணன் என்கிற சத்ருகனன் கோயில் ஆகியவற்றுக்குச் சென்றோம். இவை அனைத்தும் ரிஷிகேஷில் மலைமீது இருந்தன. அனைத்துக் கோயில்களையும் பார்த்துவிட்டு ஹரித்வார் திரும்பினோம்.
 இவ்வளவு கோயில்களைப் பார்த்த எங்களுக்கு நம்மூர்க் கோயில்களைப் பார்த்ததுபோன்ற உணர்வு இல்லை. இங்கே எல்லா சுவாமிகளும் மார்பிளில் இருக்கின்றன. நந்தி, லிங்கம் ஒழுங்கின்றி பக்கம் மாறி பல இடங்களில் இருந்தன. விபூதியோ, குங்குமமோ தரப்படவில்லை.
 காசியிலும் பிற இடங்களிலும் ஜிலேபி சூடாகப் போட்டுத் தருவது அப்பகுதியின் சிறப்பாக இருந்தது. இரு நாள்கள்கூட தாங்காது என்று கூறினர். அடுப்பிலிருந்து அவ்வப்போது போட்டு எடுத்து சாப்பிடும்போது மிகவும் ருசியாக இருந்தது. இங்கே பெரும்பாலும் கடுகு எண்ணெயில்தான் சமையல். நாங்கள் தங்கியிருந்த பகுதிகளில் சத்திரத்தில் தமிழக உணவு வகைகளை உண்ணும் வாய்ப்பு கிடைத்தது. மக்களின் வித்தியாசமான பழக்க வழக்கங்களையும், ஆடை அணியும் முறைகளையும் காணமுடிந்தது. காசியில் தினமணி வாங்கிப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் செய்தித்தாளைப் பார்க்க எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. எங்களது இந்த அனுபவம் வாழ்நாளில் மறக்கமுடியாததாக அமைந்தது.
 - ஜ.பாக்கியவதி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com