அளபெடை ஆக்கமும் நீக்கமும்

யாப்பிலக்கணத்தில் அளபெடைப் பயன்பாடு ஒரு விவேகமான பொருளோடு கூடிய ஒலி விளையாட்டு. குறில் நெடிலான எழுத்தொலிக்குக் கூடுதலாக அமையும் கூடுதல் ஒலியையே "அளபெடை' என்பர்.
அளபெடை ஆக்கமும் நீக்கமும்

யாப்பிலக்கணத்தில் அளபெடைப் பயன்பாடு ஒரு விவேகமான பொருளோடு கூடிய ஒலி விளையாட்டு. குறில் நெடிலான எழுத்தொலிக்குக் கூடுதலாக அமையும் கூடுதல் ஒலியையே "அளபெடை' என்பர். இது இயல்பான பொருள் தருவதோடு கூடுதல் சிறப்புப் பொருள் உணர்த்தவும் பயன்படும்.

"ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்' (653)

என்ற குறளில் கருத்துக்காக அல்லாமல் வெண்பாவுக்கான யாப்பு பிழையாமைக்காக ஓஒதல், ஆஅதும் என ஈரிடத்தும் இசை நிறையாய் அளபெடை வந்தது.

"கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை' (15)

என்ற குறளில் கெடுப்பதும் எடுப்பதும் எனக் குறிலாக நிற்பினும் அவை வருமொழிகளோடு பிழையின்றிச் சேரும். ஆயினும், குறிலை நெடிலாக்கி நெடிலை அளபெடையாக்கியதால் கெடுத்தாலும் வாழ வைத்தாலும் அளவுக்கு மீறிய அழிவையும் ஆக்கத்தையும் கொடுக்கும் என்பதைக் குறிப்பதற்காகவே குறிலை நெடிலாக்கியதோடு நெடிலை அளபெடையாக்கிக் கூறப்பட்டது. இது, கூடுதல் பொருட்பயன் பற்றியதற்காகக் கூறப்பட்டதொரு யாப்பு உத்தி.
இங்ஙனம் இசை நிறையாக, சொல்லிசையாகத் தனித்தனிப் பாடலில் அளபெடை அமைதலை மாற்றி, அளபெடைக் கூறியதால் பயனின்றி அவ்வளபெடையை நீக்கி உணரும் விதத்தால் பொருளை உணர வைக்கும் புலமை வித்தகத்தைச் செய்யும் அளபெடைப் புதுமையையும் புலவர்கள் செய்து காட்டியதற்கு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் ஒன்றைக் காணலாம்.
பண்டொரு நாள் இராவணன் கயிலையைப் பெயர்த்தான். சிவபெருமான் தன் கால் பெருவிரலால் அழுத்த, அவன் மலையின் கீழே அகப்பட்டுத் திண்டாடினான். தப்பிக்க வழியறியாதபோது கயிலையை வலம் வந்த வாகீச முனிவர் என்பார், இராவணன்பால் இரக்கமுற்று, ""இறைவன் மேல் சாமகானம் பாடினால் அவர் மகிழ்ந்து விடுவிப்பார்'' என உபாயம் கூறினார்.
இராவணனும் அவ்வாறே செய்தபோது, கீழ்வரும் சாமகானப் பாடலைப் பாடியதாகக் கரையேறவிட்ட நகர்ப் புராணத்தில் அதன் ஆசிரியர் க.ரா. சிவசிதம்பரர் கூறுகிறார். பாடல் முழுவதும் உள்ள நெட்டெழுத்துகள் அளபெடையால் ஆனவை.

"ஓஒமாஅ தேஎவாஅ ஊஉமாஅ தேஎசாஅ
சீஇமாஅ தாஅவாஅர் தேஎகாஅ வேஎகாஅ
ஆஅமாஅ நாஅயேஎ னாஅவீஇ போஒமாஅ
காஅமாஅ ரீஇநீஇ காஅவாஅ சாஅமீஇ'

இப்பாடலில் 32 நெட்டெழுத்துகள் உள்ளன. அவை தத்தமக்குரிய குறில் எழுத்துகளுடன்
அளபெடைகளாக உள்ளன. இந்நிலையில் இதற்குரிய பொருள் விளக்கத்தை அளபெடைகளை நீக்கிக் கீழ்வருமாறு பாடலை அமைத்துக் கொள்ளும் போதுதான் பொருளை உணர முடிகிறது.

"ஓமா தேவா ஊமா தேசா
சீமா தாவார் தேகா வேகா
ஆமா நாயே னாவீ போமா
காமா ரீநீ காவா சாமீ'

ஓ மகாதேவனே! ஊர் உலகைக் காப்பவனே! திருமகள் போன்ற பெண்ணைத் தேகத்தில் உடையவனே! என் மீது வேகப்படாதே! இழிந்த நாயேனின் ஆவியைப் போமாறு செய்துவிடாமல் மழைபோல் கருணையால் நீ என்னைக் காப்பாய்! தலைவனே! என்பது பாடலின் கருத்தாகும். இப் பொருளை உணர ஒவ்வோர் எழுத்தாகப் பிரித்தும், சிலவற்றைச் சேர்த்தும் அறிய வேண்டும்.
1. ஓ - வியப்புக்குரியவனே! மா தேவா - மகா தேவனே! ஊ - ஊரையும், மா - பெரிய, தேசா - தேசத்தையும் காப்பவனே!
2. சீ - திருமகள் போன்ற, மாது - பெண்ணை, ஆவார் - இணைத்துக் கொண்ட, தேகா - தேகத்தை உடையனே! வேகா - என் மீது வேகப்படாதே!
3. ஆ - இழிந்த, மா - மிகவும் இழிந்த, நாயேன் - நாய் போன்ற எனது, ஆ - உயிரை, வீ - அழிந்து, போமா - போகாமல்!
4. கா - காப்பாயாக! மாரீ - கருணை மழையானவனே! நீ - நீயல்லவா! கா - உன்னையன்றி யார் காப்பார்? வா - ஆதலால் வந்தருள் செய், சாமீ - தலைவனே!
இந்த அளபெடை விளையாட்டை என்னென்பது! அளபெடை சேர்த்துப் பொருள் காணுதற்கு நேர்மாறாக அளபெடையைச் சேர்த்துப் பிறகு நீக்கிப் பொருளை உணரச் செய்யும் சித்து விளையாட்டன்றோ! இது!
இதனைக் கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்த கரையேறவிட்ட நகர்ப்புராணத்தில் க.ரா. சிவசிதம்பரர் பதிவு செய்துள்ளார். 1892-ஆம் ஆண்டில் வெளிவந்த நூல்.
அப்பர், பல்லவ மன்னனால் கல்லில் கட்டிக் கடலில் கிடத்தியபோது ""கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே'' எனப் பதிகம் பாடிக் கடலினின்றும் கரையேறிய ஊர்தான் - கரையேறவிட்ட நகராகும்.
யாப்பிலக்கண மரபில் அளபெடை நீக்கத்தாலாகும் ஆக்கப்பாடலை புது வரவாகவும் காலத்தில் மலர்ந்த கவிக் கொடையாகவும் கருதலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com