இந்த வார கலாரசிகன்

நண்பர் அலைஓசை சம்பத்தின் மரணத்தில் இந்தப் பிறவியில் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த நண்பர் ஒருவரை இழந்திருக்கிறேன்.

நண்பர் அலைஓசை சம்பத்தின் மரணத்தில் இந்தப் பிறவியில் எனக்குக் கிடைத்த மிகச் சிறந்த நண்பர் ஒருவரை இழந்திருக்கிறேன். ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் சாவி வார இதழில் நாங்கள் இணைந்து பணியாற்றிய அந்த நாள்களின் நினைவுகள் என் வாழ்க்கையின் மறக்க முடியாத அத்தியாயங்களில் ஒன்று.
சம்பத் என்றால் செல்வம். பெயரில்தான் சம்பத் இருந்ததே தவிர அவர் சம்பாதித்தது நல்ல நட்பு வட்டத்தைத்தானே தவிர, சொத்து சுகங்களை அல்ல. ஒருபோதும் அதுகுறித்து விசனப்பட்டோ மனம் குமுறியோ நான் கண்டதில்லை. சம்பத் இருக்குமிடம் எப்போதுமே கலகலப்பாக இருக்கும். ஒரு வினாடி கூட சம்பத் சோர்வாய் இருந்து நான் பார்த்ததில்லை.
சாவி வார இதழில் அவர் பிழை திருத்துபவராகத்தான் பணியாற்றினார். பெயர்தான் பிழை திருத்துபவரே தவிர, அவர் உதவியாசிரியராகச் செயல்பட்டார் என்பதுதான் உண்மை. அவரது நீண்ட பத்திரிகை உலக அனுபவம் எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய வழிகாட்டியாக இருந்தது. அலைஓசை நாளிதழ் ஆரணி எஸ். சம்பத்தை வெளியீட்டாளராகக் கொண்டுதான் வெளிவந்தது. அதற்குக் காரணம், அவருக்கும் அலைஓசையை நடத்திய வேலூர் நாராயணனுக்கும் இடையேயான நெருக்கம்.
மிக அற்புதமான சிறுகதை எழுத்தாளர் அவர். துணுக்குகள் எழுதுவதில் வல்லவர். வாரத்துக்குக் குறைந்தது ஐந்தாறு துணுக்குகளையாவது அவர் தந்துவிடுவார். அந்தத் துணுக்குகள் அந்த வார சாவி வார இதழில் பரவலாக வாசகர்களால் பேசப்படும் தகவல்களாக இருக்கும். அதேபோலத்தான் அவருடைய சிறுகதைகளும். தான் சிறுகதை எழுதுவது மட்டுமல்லாமல், புதிதாக யாராவது சிறுகதை அனுப்பியிருந்தால் அதை வெட்டித் திருத்தி, மெருகேற்றி அவர் செப்பனிடும் நேர்த்தியே தனி. ஒரு பத்திரிகையாசிரியருக்குள்ள எல்லாத் தகுதிகளும் ஆரணி எஸ். சம்பத்துக்கு இருந்தும்கூட அவர் பிழை திருத்துபவர் என்கிற வட்டத்திலிருந்து வெளியில் வர முடியாமல் போனது தமிழ் பத்திரிகை உலகின் துரதிருஷ்டம்.
சம்பத்துக்கு பேனாக்களை சேகரிக்கும் மோகம் இருந்தது. ஒருமுறை தினமணி அலுவலகத்துக்கு என்னைச் சந்திக்க வந்தார். அவரிடம் "சம்பத் உங்களுக்கு என்ன வேண்டும்' என்று நான் கேட்டபோது, அவர் பதிலளிக்கவில்லை. மேஜையிலிருந்த என்னுடைய பேனாவை எடுத்துத் தனது பையில் வைத்துக் கொண்டார். அப்போது அவரது முகத்தில் தோன்றிய பிரகாசத்தின் பின்னால் இருந்த நட்பும் பெருமிதமும் என்னை நெகிழ வைத்தது.
நக்கீரன் கோபாலுக்கு பத்திரிகையாளர்கள் நன்றி கூறக் கடமைப்பட்டவர்கள். எழுத்தாளர் சின்ன குத்தூசியையும் சரி, நண்பர் சம்பத்தையும் சரி, அவர்களுக்குத் தரப்பட வேண்டிய மரியாதையுடன் பாதுகாத்த பெருமை நக்கீரன் கோபாலைத்தான் சாரும். நக்கீரன் அலுவலகத்தில் சம்பத்துக்குத் தரப்பட்ட மரியாதை அலாதியானது. அவரை சம்பத் ஐயா என்றுதான் அழைப்பார்கள். தன்னுடைய எழுத்துலக வாழ்க்கையில் ஏறத்தாழ 22 ஆண்டுகளை சம்பத் நக்கீரனில்தான் கழித்தார். என் நண்பர் சம்பத்தை ஒரு தமையனின் இடத்தில் வைத்துப் போற்றிய நக்கீரன் கோபாலுக்குத் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.


புத்தக விமர்சனத்துக்குக் "கேட்டதும் கிடைத்ததும்' என்கிற புத்தகம் வந்திருந்தது. அதை பார்த்த நொடியில் ஏதோ புதையல் கிடைத்தது போல இருந்தது. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் படித்திருந்த ஆனால் பாதுகாத்து வைக்க மறந்துவிட்ட புத்தகம் மீண்டும் பார்வையில் பட்டபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
தமிழகத்தின் "பதின்கவனகர்' (தசாதவதானி) திருக்குறள் பெ. இராமையா, தமிழ்நாடு அரசின் அரசவைக் கலைஞராய் விளங்கியவர். விடுதலைப் போராட்ட வீரர். ஒரு காலக்கட்டத்தில் கண் பார்வை மங்கத் தொடங்கியது. பார்வை இழந்த நிலையிலும் தனது மன உறுதியை இழக்காமல் "பதின்கவனகம்' (தசாதவதானம்) என்னும் நினைவாற்றல் கலையின் மூலம் தமிழுக்கும் திருக்குறளுக்கும் அவர் ஆற்றிய தொண்டு சொல்லி முடியாது. 20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற நடமாடும் திருக்குறளாய் உலவியவர் பதின்கவனகரான இராமையா.
இவரது தமிழ்ப் பணியின் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால், பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் மத்தியில் தனது வினா-விடை வாயிலாகத் திருக்குறளுக்கு விளக்கம் தர முற்பட்டது. மாணவர்கள் எழுப்பும் குறள் குறித்த கேள்விகளுக்குச் சற்றும் தயங்காமல் அவர் தரும் பதில்கள், பல இளம் உள்ளங்களைக் குறள்பால் ஈர்த்தன.
கொம்புக் குறி இடம் பெறாத குறள்கள், கால் இல்லாத குறள்கள், நீட்டல் அளவை, நிறுத்தல் அளவைக்கு ஒரு குறள், விதையில்லா பழம் உள்ள குறள், ஐந்து உவமைகள் இடம்பெறும் குறள், ஒரேயெழுத்தை கடைசி சீராகக் கொண்டு முடியும் குறள், தொடங்கிய சொல்லைக் கொண்டே முடியும் குறள், சொல்லும்போது உதடுகள் ஒட்டாத முறையில் எழுதப்பட்ட குறட்பாக்கள் என்று எது குறித்து கேட்டாலும் அவை குறித்தெல்லாம் உடனுக்குடன் பதில் அளிக்கும் ஆற்றலைப் பதின்கவனகர் இராமையா பெற்றிருந்தார் என்றால், அவர் திருக்குறளில் எந்த அளவுக்கு ஆழங்காற்பட்டிருந்தார் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
தன் தந்தையின் வழியில் அந்த நுண்கலையைப் பேணி வருகிறார் அவருடைய மைந்தர் திருக்குறள் இராம. கனகசுப்புரத்தினம். பெ. இராமையா பதின்கவனகராக இருந்தார் என்றால் கனகசுப்புரத்தினமோ பதினாறு கவனகர். தந்தையைப் போலவே இவரும் நினைவாற்றல் கலை மூலம் குறள் பணியாற்றி வருகிறார்.
பதின்கவனகர் பெ. இராமையாவிடம் பல்வேறு நிகழ்ச்சிகளில் குறள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் தொகுக்கப்பட்டு "கேட்டதும் கிடைத்ததும்' என்கிற புத்தகமாக அவரால் வெளியிடப்பட்டிருந்தது. அந்தப் புத்தகத்தின் மறுமதிப்பை வெளியிட்டு மிகப்பெரிய தொண்டாற்றியிருக்கிறார் பதினாறு கவனகர் திருக்குறள் இராம. கனக சுப்புரத்தினம். "கேட்டதும் கிடைத்ததும்' என்பது நான் முதலில் குறிப்பிட்டதுபோல ஓர் அரிய திருக்குறள் புதையல் நூல்.


சென்னை வள்ளியம்மாள் மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றுபவர் முனைவர்
ப. பானுமதி. இவர் "ஆதிரா முல்லை' என்கிற புனைபெயரில் எழுதிய "சக்கரம்' என்கிற கவிதை என் கவனத்தைக் கவர்ந்தது. அந்தக் கவிதை இதோ:

""அனுபவச் சக்கரத்தில்
குயவனின் கைப்பட்ட
களிமண்ணாய்
குழைந்து
வளைந்து
நெளிந்து
சுற்றிச் சுற்றி
முழுவதுமாக
உருப்பட எத்தனிக்கையில்
முடிந்தே விடுகிறது
வாழ்க்கை''!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com