தேம்பாவணியில் இறையியல் நுட்பம்

வீரமாமுனிவர் இயற்றிய "தேம்பாவணி' எனும் நூல், இயேசு கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையான புனித யோசேப்பு (சூசையப்பர்) மீது இயற்றப்பட்ட நூலாகும்.

வீரமாமுனிவர் இயற்றிய "தேம்பாவணி' எனும் நூல், இயேசு கிறிஸ்துவின் வளர்ப்புத் தந்தையான புனித யோசேப்பு (சூசையப்பர்) மீது இயற்றப்பட்ட நூலாகும்.
இந்நூல் இறைவன் திருவடியை, "தூய வேரிய கமலபாதம்' (பாயிரம்:1) , "செழுந்தூய் துகிர் சேயடி', "தாமரைக் கழல், நாண்மலர்க் கழல்' என்றெல்லாம் சிறப்பிக்கிறது.
எகிப்து நாட்டு இரவிமாபுரத்தில் வளன் இறைவன் திருவடியில் விழுந்து வணங்கியதை வீரமாமுனிவர், ""தேன் முகத்து அலர்த்தாள், சூசை சென்னி பூண்டு இறைஞ்சினானே'' (22:16) என்கிறார். அரேபியா, பெருசியா, சபதே ஆகிய நாடுகளின் வேந்தர்கள் மூவரும் இறைமகன் இயேசுவின் திருவடியில் வீழ்ந்து வணங்கியதை,

""மொம்மு அணியிற் பெரு(கு)
இன்பப் புணரியினுள்;
மூவர் அங்கண் பொலிய மூழ்கி
இம்மணியில் தொழத் தொழ வீழ்ந்து
எழுந்தெழுந்து கோவேந்தை
இறைஞ்சிட்டாரே (11:11)

திருவடி தொழுதல், நிலந்தோய மண்ணில் விழுந்து வணங்குதல், கை கூப்பி வணங்குதல், தலைத் தாழ்த்தி வணங்குதல் என்றெல்லாம் இறைவனை வணங்கும் முறைகள் தேம்பாவணியில் கூறப்பட்டுள்ளன. வளனுக்கும், மரியாளுக்கும் நடந்த திருமணத்தில் எல்லோரும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்ததாகக் காப்பியம் கூறுகிறது.
புகழ் முழக்கமும், குருக்கள்மார் செய்த வழிபாட்டு முழக்கமும், தூபம், மலர் ஆகியவற்றின் மணமும் தேவாலயம் எங்கும் நிறைந்திருந்தன என்பதனை,

""ஓசையெழு புகழ்ஓதல் எழுகடல்
ஓதல் எழுமென, வேதியார்
பூசையெழு துதிதூபம் எழுபுகை
போதும் எழும் வெறி போழ்திலா'' (5:123)

என்று தேம்பாவணி விரித்துரைக்கிறது.
திருக்கோயில் விளக்குகள் மாணிக்கத்தாலும், மரகதத்தாலும், நீல மணியாலும், பசும் பொன்னாலும், வைர மணியாலும் அமைந்திருப்பதை "பசும்பொன் நிலை விளக்கு' திருவிளக்காம் குத்துவிளக்காக அமைந்துள்ளது என்கிறது தேம்பாவணி.
வீரமாமுனிவர் கிறிஸ்தவ இறையியல் கொள்கைகளை விளக்க, தமிழில் பல கலைச்சொற்களையும் உருவாக்கியிருப்பது நோக்கத்தக்கது. தூய ஆவியாரைத் தேவநேயன் எனவும், சென்மப்பாவம் என்பதனை
கருமாசு எனவும், ஆன்மாவை "கருத்துயிர்' எனவும் பற்பல புதுச் சொற்களால் குறித்துள்ளார்.
தமிழ் தழீஇய சாயலுடன் கிறிஸ்தவ சமயக் கோட்பாடுகள் தேம்பாவணியில் நுட்பமாகக் கூறப்பட்டுள்ளன. நல்லூர் ஞானப்பிரகாசர் வீரமாமுனிவரை "கத்தோலிக்கத் தமிழ்ப் புலவர் கோ' எனக் குறிப்பிட்டுள்ளது சிந்தனைக்குரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com