அற்புதம் மட்டுமா?

அருளாளர்கள், மக்கள் நலம்பெறும் பொருட்டு அற்புதங்கள் பல நிகழ்த்துவதுண்டு. பொதுவாக, நலம் தருவனவாக அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. சில நேரங்களில் அற்புதத்தால் பேருண்மையும் உணர்த்தப்படும்.
அற்புதம் மட்டுமா?

அருளாளர்கள், மக்கள் நலம்பெறும் பொருட்டு அற்புதங்கள் பல நிகழ்த்துவதுண்டு. பொதுவாக, நலம் தருவனவாக அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. சில நேரங்களில் அற்புதத்தால் பேருண்மையும் உணர்த்தப்படும். பேருண்மை ஒன்றை, சொல்லாமல் சொல்லும் ஓர் அற்புத நிகழ்ச்சியைக் காண்போம்.
சிவஞானபோதம் அருளிய மெய்கண்டாரிடம் உபதேசம் பெற்றார் அருணந்தி சிவாசாரியார்; அருணநந்தி சிவாசாரியாரிடம் உபதேசம் பெற்றார் மறைஞான சம்பந்தர்; மறைஞான சம்பந்தரால் ஆட்கொள்ளப்பட்டு, உபதேசம் பெற்றார் உமாபதி சிவாசாரியார்.
உமாபதி சிவாசாரியார், சிதம்பரத்தில், அம்பலவாணனைத் தொட்டு வழிபடும் அந்தணர் குலத்தில் பிறந்த திருவருட் செல்வர். "சித்தாந்த அட்டகம்' என்று போற்றப்படும் எட்டு அரிய நூல்களையும், சிதம்பர தலபுராணமான கோயில் புராணத்தையும் இயற்றிய அவர்,
"குஞ்சிதாங்கிரி ஸ்தவம்' என்னும் அற்புதமான வடமொழி நூலையும் இயற்றியுள்ளார்.
மாபெரும் தத்துவ ஞானியாகவும், சிறந்த கவிஞராகவும் திகழ்ந்த அவர், சிதம்பரத்துக்குக் கிழக்கே உள்ள "கொற்றவன்குடி' என்னும் இடத்தில் தங்கி, மடம் ஒன்றையும் உருவாக்கி, சிற்றம்பலநாதனை மனத்துள் வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தார்.
அக்காலத்தில், பெற்றான் சாம்பான் என்ற சிவனடியார் ஒருவர் இருந்தார். தில்லைத் திருக்கோயில் மடைப்பள்ளிக்கு, நாள்தோறும் விறகு கொடுக்கும் திருப்பணியை மேற்கொண்டிருந்தார். பற்றற்று, பலன் ஏதும் கருதாமல், சிவபரம்பொருளை சிந்தித்துப் பணிபுரிந்த அவர்தம் பக்குவ நிலையின் காரணமாக ஈசன் அவர்தம் கனவில் எழுந்தருளி,

""அடியார்க் கெளியன்சிற் ற்றம்பலவன் கொற்றங்
குடியார்க் கெழுதியகைச் சீட்டு - படியின்மிசைப்
பெற்றான்சாம் பானுக்குப் பேதமறத் தீக்கை செய்து
முத்தி கொடுக்க முறை''

என்ற வெண்பாவைத் திருமுகமாகத் தந்து, உமாபதியாரிடம் கொடுக்கும் வண்ணம் பணித்தார். கனவில் கண்டபடி, திருமுக ஓலை 
பெற்றான் சாம்பானின் கையில் இருந்தது.
உமாபதி சிவாசாரியாரை நேரில் காண்பது அரிதாக இருந்தமையால், அவர்தம் திருமடத்திற்கும் விறகு கொடுக்கும் பணியை மேற்கொண்டார் பெற்றான் சாம்பான். 
ஒருநாள் மழையின் காரணமாக விறகு கொடுக்கும் பணி தாமதமாயிற்று. திருமடத்து உணவும் தாமதமாயிற்று. காரணம் கேட்ட உமாபதியார்க்குப் பணியாளர்கள் விவரம் கூறினர். மறுநாள் பெற்றான் சாம்பானை தம்மிடம் அழைத்து வருமாறு உமாபதியார் கூறினார்.
மறுநாள் வந்த பெற்றான் சாம்பானைத் திருமடத்துப் பணியாளர்கள், உமாபதியாரிடம் அழைத்துப் போய் விட்டனர். சைவ சித்தாந்தச் செம்மலைக் கண்டவுடன் பெற்றான் சாம்பான், சிற்றம்பலவன் தந்தருளிய திருமுகத்தைப் பணிவுடன் தந்து வணங்கி நின்றார். தம் வழிபடு தெய்வமாகிய ஆடலரசன் அனுப்பிய திருமுகத்தைப் படித்த உமாபதியார், பெற்றான் சாம்பானுக்கு, "சத்தியோ நிர்வாண' தீட்சையை செய்து முத்தியளித்தார். பெற்றான் சாம்பான் உடலோடு முத்தி பெற்றார்.
பெற்றான் சாம்பான் முத்தி பெற்றதை உணர முடியாத சாம்பானின் மனைவி, உமாபதியார், ஏதோ மந்திரத்தால், தம் கணவனை எரித்துவிட்டதாக மன்னனிடம் முறையிட்டார். மன்னனும் உமாபதியார் மடத்துக்கு வந்து விசாரித்தான். சிவபரம்பொருளின் அடியவரான உமாபதியாரும் உண்மையைக் கூறி விளக்கினார். வேந்தன் உணர்ந்தபோதும், பெற்றான் சாம்பான் மனைவியும் பிறரும் கண்டுணரும் வண்ணம் மற்றொரு முறை அவ்வற்புதத்தைச் செய்தருள வேண்டும் என்றான் மன்னன்.
அதற்கு உடன்பட்ட உமாபதி சிவாசாரியார், அப்போது, அவ்விடத்தில் முத்திப்பேறு அடையும் பக்குவமுடையவர் எவரும் இல்லாத காரணத்தால், தாம், நாள்தோறும் சிவனார்க்குப் பூசை செய்யும்போது விழும் திருமஞ்சன நீரால், புண்ணியம்மிக்கு வளர்ந்திருந்த முள்ளிச் செடியைக் காட்டி, அதற்கு முத்தியளிப்பதாகக் கூறி, அம் முள்ளிச் செடிக்கு தீட்சையளித்தார். முள்ளிச் செடியும் பேரொளியோடு முத்தி பெற்றது. அவ்வற்புதத்தை வேந்தனும் பிறரும் கண்டு வியந்தனர்; போற்றினர்.
பேரொளிப் பிழம்பாய் மாறி முள்ளிச் செடி முத்தி எய்திய அற்புதம் மட்டுமா இந்நிகழ்ச்சியில் உள்ளது? இறையருளாலும், இறைவன் அருள்நிதியைப் பெற்ற சித்தர்களாலும் முத்தி பெறுவது உயிரே யன்றோ! அங்ஙனமாயின் முள்ளிச் செடி உயிர் உள்ளது என்பதன்றோ முக்கியம்!
19-ஆம் நூற்றாண்டில்தான் தாவரத்துக்கு உயிருண்டு என்று அறிவியல் அறிஞர் கண்டறிந்தனர்! ஆனால், மேற்கூறிய அற்புத நிகழ்ச்சியோ 14-ஆம் நூற்றாண்டில் நடைபெற்றது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னரே உயிர் உள்ளது தாவரம் என்று நம்மவர் உணர்ந்திருந்தனர் என்பது சிந்திக்கத் தக்கது; போற்றத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com