இந்த வார கலாரசிகன்

அடுத்த திங்கள்கிழமை, டிசம்பர் 11-ஆம் தேதி, எட்டயபுரத்தில் பாரதியாருக்கு மரியாதை செலுத்த, இந்த ஆண்டும் நான் கலந்துகொள்ள இருக்கிறேன்; இந்த ஆண்டில் மட்டும் அல்ல ஆண்டுதோறும் கலந்துகொள்ள வேண்டும் என்று
இந்த வார கலாரசிகன்

அடுத்த திங்கள்கிழமை, டிசம்பர் 11-ஆம் தேதி, எட்டயபுரத்தில் பாரதியாருக்கு மரியாதை செலுத்த, இந்த ஆண்டும் நான் கலந்துகொள்ள இருக்கிறேன்; இந்த ஆண்டில் மட்டும் அல்ல ஆண்டுதோறும் கலந்துகொள்ள வேண்டும் என்று சென்ற ஆண்டே முடிவெடுத்து விட்டேன்.
அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம், தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் மட்டுமல்லாமல், தமிழகமெங்கும் உள்ள இலக்கிய அமைப்புகளின் சார்பிலும் ஆண்டுதோறும் யாராவது சிலர் பாரதியின் பிறந்த நாள் அன்று எட்டயபுரத்துக்குச் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.
தங்களது தொழில் போட்டியை ஒதுக்கிவைத்துவிட்டு, அத்தனை கர்நாடக இசைக் கலைஞர்களும் நட்புறவுடன் ஆண்டுதோறும் தியாகராஜ ஆராதனைக்குத் திருவையாறில் கூடுகிறார்கள். அதேபோல, தமிழை நேசிக்கும் நாமெல்லாம் எட்டயபுரத்தில் கூட வேண்டாமா? பாரதியாரின் இல்லத்திலிருந்து, நினைவுமண்டபத்துக்கு ஊர்வலமாகச் செல்ல வேண்டாமா? உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல அமைப்புகள் தங்கள் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் செல்லும்போது, அதைப் பார்த்து உலகம் வியப்பது இருக்கட்டும். தமிழர்களை இணைக்கிறோம் என்று மகாகவி பாரதி பூரித்துப் போவானே, அதற்காகவாவது நாம் கூட வேண்டாமா?
""பாரதி ஒரு ஜாதிக்கு, ஒரு மதத்துக்கு உரியவனல்ல. அவன் சர்வ சமரசவாதி. பாரதியாரைக் கொண்டாடாதவர்கள் தமிழர் என்று சொல்லிக்கொள்ள அருகதை இல்லை'' என்பார் கவியரசு கண்ணதாசன். அதனால்தான் சொல்கிறேன், டிசம்பர் 11-ஆம் தேதியை தமிழர் தினமாகக் கருதி நாம் அனைவரும் எட்டயபுரம் பாரதியார் இல்லத்தில் கூட வேண்டும் என்று!

கடந்த ஞாயிற்றுக்கிழமை "கற்கக் கசடற' அமைப்பின் சார்பில் நடந்த இலங்கை ஜெயராஜின் "உயர் வள்ளுவம்' குறுந்தகடு வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பியதும் நான் செய்த முதல் வேலை எனது நூலகத்திலிருந்த "அதிர்வுகள்' புத்தகத்தை எடுத்ததுதான். இரவு முழுவதும் அந்தப் புத்தகத்தை மீண்டும் 
ஒருமுறை படித்த பிறகுதான் படுத்துறங்கினேன்.
கொழும்பிலிருந்து வெளிவரும் "வீரகேசரி' நாளிதழில், "கம்பவாரிதி' இலங்கை ஜெயராஜ் எழுதிய தொடர்கட்டுரைகளின் தொகுப்புதான் "அதிர்வுகள்'. இப்போது அது புத்தக வடிவம் பெற்றிருக்
கிறது.
""இக்கட்டுரைகள் எல்லாம், எங்கள் யாழ்ப்பாணத்து பாஷையிலேயே பெரும்பாலும் எழுதப்பட்டுள்ளன. ஈழத்தமிழர்களின் உணர்வை உள்வாங்கி நிற்கும் தமிழ்நாட்டவர், எங்கள் மொழியையும் உள்வாங்க இந்நூல் ஒரு வழியாய் அமையட்டுமே! என்கிற இலங்கை ஜெயராஜின் தன்னடக்கத்துடன்கூடிய முன்னுரை வரிகளில் எனக்கும் உடன்பாடு உண்டு. நெல்லைத் தமிழையும், கொங்கு மண்டலத் தமிழையும், குமரி மண்டலத் தமிழையும், சென்னைத் தமிழையும்போல நாம் ஈழத் தமிழையும் உள்வாங்காமல் இருப்பது தவறாகப்படுகிறது.
மொத்தம் 27 கட்டுரைகளை உள்ளடக்கியது "அதிர்வுகள்' என்கிற தொகுப்பு. பழமொழியை அடிப்படையாக வைத்து, சம்பவங்களின் மூலம் தனது கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கும் இலங்கை ஜெயராஜின் எழுத்து உத்தி, அவரது உரையாடல் போலவே செறிவும், ஈர்ப்பும் மிகுந்தது. வள்ளுவனையும், கம்பனையும், பாரதியையும் ஆங்காங்கே பாயசத்தில் முந்திரி, திராட்சை, பாதாம் தூவுவதுபோலக் கலந்துவிட்டிருப்பது சுவைக்கு சுவை சேர்க்
கிறது.
"முற்பகல் செய்யின்..' கட்டுரையில் வரும் புண்ணியமூர்த்தி மாமா மனதிலிருந்து அகல மறுக்கிறார். இப்போதெல்லாம் பிழை செய்ய மிகப்பயமாய் இருக்கிறது' என்று இலங்கை ஜெயராஜ் முடிக்கும்போது, நமது மனதும் அதேபோல உச்சரித்து அடங்குகிறது.
"அன்னையைப் போல் ஒரு...' கட்டுரையை இந்தத் தொகுப்பில் உள்ள மிகச்சிறந்த கட்டுரையாக நான் கருதுகிறேன். பத்து தடவைக்குமேல் படித்து விட்டேன். ஒவ்வொரு முறை படித்து முடிக்கும்போதும், விழியோரம் எட்டிப்பார்க்கும் கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறேன். ""விலங்கு, மனிதர் என்ற பேதமில்லாமல், தாயினம் முழுவதும் பிள்ளைக்குக் கருணை செய்வதில், ஒன்றாய்த்தான் இருக்கிறது. தாயைக் கண்ட பிறகும், சில முட்டாள்கள், உலகத்தில் கடவுள் இல்லை என்று சொல்லித் திரிகிறார்கள்!'' என்று அந்தக் கட்டுரை முடிகிறது.
"கிராமம்' என்கிற கட்டுரை, கட்டாயம் பள்ளிப் பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும். ""அன்றைய கிராமத்தில் மரம் உறவாய்க் கருதப்பட்டது. பறவை உறவாய்க் கருதப்பட்டது. மிருகம் உறவாய்க் கருதப்பட்டது. உறவும், அன்பும் அவற்றுக்குக் கிடைத்தன. இன்றைய உலகத்தில், மனிதருக்கு மனிதரேகூட "உறவில்லை' என்று கூறும் இலங்கை ஜெயராஜ் மேலும் எழுது
கிறார்: 
""கிராமம் என்ற சொற்பிரயோகம், சிறிய இடப்பரப்பு எனும் அர்த்தத்தை மட்டும் கொண்டதல்ல. கூடிவாழ்தல், அக்கறை, நேசிப்பு எனப் பல விடயங்களையும் அச்சொல் உட்கொண்டு நிற்கிறது. விஞ்ஞானத்தால் சுருங்கிவிட்ட இன்றைய உலகத்தைக் கிராமமாய் உரைக்கின்றார்கள். அவர்கள் சொல்லும் கிராமம் எனும் சொல்லுக்குள், மேற்பொருள்கள் அடங்கியிருப்பதில்லை.'' அந்தக் கட்டுரையை ""சொல்லொக்கும் பொருள் ஒவ்வாது!'' என்று முடிக்கிறார்.
புத்தகத்தைப் படித்துவிட்டு, இலங்கை ஜெயராஜ் இருக்கும் திசையை நோக்கித் தண்டனிட்டு வணங்கத் தோன்றியது. "அதிர்வுகள்' என்னில் ஏற்படுத்தும் அதிர்வுகளை வார்த்தையில் விளக்க முடியாது!

தமிழுக்கு ஹைக்கூவை 1916-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார் மகாகவி பாரதியார். "சுதேச மித்திரன்' இதழில் ஜப்பானிய ஹைக்கூ குறித்து அவர் கட்டுரை எழுதியிருக்கிறார். அதனடிப்படையில் பார்த்தால், தமிழுக்கு "ஹைக்கூ' அறிமுகமாகி நூறு ஆண்டுகளாகி விட்டன. அதைக் குறிக்கும் விதத்தில் கவிஞர் பிருந்தா சாரதி வெளிக்கொணர்ந்திருக்கும் "ஹைக்கூ' கவிதைத் தொகுப்பு "மீன்கள் உறங்கும் குளம்'. அதிலிருந்து ஒரு கவிதை -

பூக்கிறது காய்க்கிறது
கனிகிறது
மயானத்து மரமும்!

அடுத்த வாரம் சந்திப்போம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com