இந்த வார கலாரசிகன்

முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடனான "தமிழ்த் தாத்தா' உ.வே.சா.
இந்த வார கலாரசிகன்

முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் சார்பில் தொடங்கப்பட்டிருக்கும் ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடனான "தமிழ்த் தாத்தா' உ.வே.சா. விருது இந்த ஆண்டு முனைவர் வேலூர் நாராயணனுக்குத் தரப்பட்டிருக்கிறது என்று கவிஞர் வைரமுத்துவின் உ.வே.சா. குறித்த "மொழிகாத்தான் சாமி' நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தேன். அடுத்த ஞாயிற்றுக்கிழமை சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி. நகரிலுள்ள கவிக்கோ மன்றத்தில் இந்த விருது வழங்கப்பட இருக்கிறது.
முனைவர் வேலூர் ம.நாராயணனுக்கு இந்த விருதை வழங்க "சிலம்பொலி' செல்லப்பன் ஐயாவைவிடத் தகுதியானவர் வேறு யார் இருக்க முடியும்? தமிழகத்தில் சிலம்பொலியாரைப்போல 15,000-க்கும் அதிகமான இலக்கிய மேடைகளில் முழங்கியவரும் கிடையாது, அவர் அளவுக்கு அணிந்துரைகளை எழுதியவரும் கிடையாது. சங்க இலக்கியங்கள், காப்பியங்களில் தொடங்கி பாரதி, பாரதிதாசன் வரை ஆழங்காற்பட்ட புலமை உள்ளவர்களும் கிடையாது.
நேற்று கோவையில் டாக்டர் நல்ல பழனிசாமியைத் தலைவராகக் கொண்ட "உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம்' சிலம்பொலி செல்லப்பனாருக்கு "தமிழ்த் தாத்தா' உ.வே.சா. தமிழறிஞர் விருது வழங்கிக் கௌரவித்திருக்கிறது. உ.வே.சா. விருது பெற்றவரே அடுத்த வாரம் உ.வே.சா. விருது வழங்கும் தனிச்சிறப்பு அடுத்த ஞாயிறன்று அரங்கேற இருக்கிறது.


கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம், "தமிழ்த் தாத்தா' உ.வே.சா. தமிழறிஞர் விருது மட்டுமல்லாமல், இன்னும் இரண்டு விருதுகளையும் வழங்கியிருக்கிறது. "பெரியசாமிதூரன் தமிழ்ப் படைப்பாளர் விருது' எழுத்தாளர் வண்ணநிலவனுக்கும், "டாக்டர் நல்லபழனிசாமி பிற துறை தமிழ்த்தொண்டர் விருது' பேராசிரியர் முனைவர் க.மணிக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
இப்படியொரு விழா கோவையில் நடைபெறுகிறது என்பது தெரிந்தும் கோவையிலிருக்கும் நான், அந்த விழாவுக்குப் போகாமல் எப்படி இருக்க முடியும்? அதிலும் வண்ணநிலவனுக்கு விருது எனும்போது அவரது ரசிகனான எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. டாக்டர் எல்.பி. தங்கவேலுவையும் அழைத்துக்கொண்டு அந்த நிகழ்ச்சிக்குச் சென்று விட்டேன்.
எழுத்தாளர் வண்ணநிலவன் தமிழுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம். தமிழ் படைப்பிலக்கியவாதிகளில் தனக்கென சிறப்பானதோர் இடத்தைப் பிடித்திருப்பவர். கதை சொல்லும் வித்தகத்தில் தனக்கென்று தனிப்பாதை இட்டு வெற்றி கண்டவர். அவரது கடல்புரத்தில், காலம், கம்பாநதி, உள்ளும் புறமும் ஆகிய நாவல்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த படைப்புகளில் சில.
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துரை வழங்கும்போது மதுரை ச.வெ.நா. கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராக இருந்து பணிநிறைவு பெற்ற பேராசிரியர் த.ராஜாராம் எழுத்தாளர் வண்ணநிலவனின் மண்வாசனைமிக்க மூன்று சிறுகதைகளைத் தனது உரையில் மேற்கோள் காட்டினார். சிறு
கதைகளாகட்டும், நாவல்களாகட்டும் வண்ணநிலவனின் தனித்துவம் பளிச்சிடும்.
வண்ணநிலவன் என்கிற ராமச்சந்திரன் ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாக ஓர் எழுத்து ஆளுமையாக வலம் வருகிறார். இவருக்கு இன்னும் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்படாமல் இருப்பது பரவலான அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. வண்ணநிலவனுக்கு விருது வழங்கி, சாகித்திய அகாதெமி எப்போது தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்ளப் போகிறது?


சகோதரி நிவேதிதா சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகப் புதல்வி; மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் ஆன்மிக குரு. பிறப்பால் மேலைநாட்டுப் பெண்ணாக இருந்தும், பாரத நாட்டைத் தாய்நாடாக ஏற்றுக்கொண்டவர். அவர் அளவுக்குப் பாரதத்தை நேசித்தவர் கிடையாது என்று அவர் காலத்தில் வாழ்ந்த பாரத தலைவர்களால் கொண்டாடப்பட்டவர். அவரது வரலாற்றைப் படிப்பது என்பது பாரதத் திருநாட்டின் அரசியல் வரலாற்றையும் ஆன்மிக வரலாற்றையும் ஒருசேரப் படித்ததாக அமையும்.
1867-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் நாள் "மார்கரெட் எலிசபெத் நோபிள்' என்கிற இயற்பெயருடைய சகோதரி நிவேதிதை மான்செஸ்டரில் பிறந்தார். அவரது 150-ஆவது பிறந்த ஆண்டு தொடங்கியிருக்கிறது.
இந்தியாவுக்கு முதன்முதலில் தேசியக்கொடியை வடிவமைத்த பெருமை சகோதரி நிவேதிதைக்கு உண்டு. நிவேதிதையின் மாணவிகள் துணியில் சித்திரத் தையல் வேலைப்பாட்டின் மூலம் இந்தக் கொடியை வடிவமைத்தனர். இதனை 1906-இல் நடந்த கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் கண்காட்சியாக அவர் வைத்தார். ஜகதீஷ் சந்திரபோஸ் முதலான பல பிரமுகர்கள் அதையே தேசியக்கொடியாக ஏற்றுக்கொண்டு, பயன்படுத்தத் தொடங்கினர் என்பது வரலாறு.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வாழ்வில் சகோதரி நிவேதிதை ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. மூன்று முறை மட்டுமே சகோதரி நிவேதிதையை பாரதியார் சந்தித்திருக்கிறார். முதல் சந்திப்பின்போது அவர் 23 வயது இளைஞர். தொடர்ந்து 1906-இல் கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றபோதும், 1907-இல் இமயமலையிலுள்ள அல்மோராவிலும் சந்தித்ததாகத் தெரிகிறது. பாரதியைப் பார்த்த மாத்திரத்திலேயே "ஜாதி, மதம், குலம், கோத்திரம் போன்ற அநாகரிகமான வித்தியாசங்களை விடு. அன்பிற்கு மட்டுமே உன் உள்ளத்தில் இடங்கொடு. நாளை நீ ஒரு தீரனாக, சரித்திரப் பிரசித்தி பெற்றவனாகப் போகிறவன்' என்று சகோதரி நிவேதிதை கூறியதைக் கேட்டு ஆடிப் போய்விட்டார் பாரதியார்.
நிவேதிதையைச் சந்தித்து உபதேசம் பெற்ற பிறகு பாரதியார் ஆங்கிலத்தில் "பாலபாரதி' என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அதற்கு நிவேதிதை அவ்வப்போது கட்டுரைகளும் வழங்கினார். தமது நூல்கள் எதையும் வேறு எந்தத் தனிநபருக்கும் சமர்ப்பணம் செய்யாத மகாகவி பாரதி, தனது நான்கு நூல்களை நிவேதிதைக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார் என்பதிலிருந்து எந்த அளவுக்கு நிவேதிதையின் மீது அவருக்கு பக்தி இருந்தது என்பது தெரிகிறது.
சுவாமி ஆசுதோஷானந்தர் எழுதிய சகோதரி நிவேதிதை - விரிவான வாழ்க்கை வரலாறு புத்தகத்தை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் பாரதியைப் போலவே நமக்கும் சகோதரி நிவேதிதை குருமாமணியாகக் காட்சியளிக்கிறார்.

கோவையில் இருக்கும்போது என்னால் விஜயா பதிப்பகத்திற்கு விஜயம் செய்யாமல் இருக்க முடியாது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டாம். விஜயா பதிப்பகத்தின் முதல் மாடியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கவிதைத் தொகுப்புகளில் கவிஞர் ஆன்மனின் "லெமூரியக் கண்டத்து மீன்கள்' என்கிற கவிதைத் தொகுப்பு கண்ணில் பட்டது. ஒன்றிரண்டல்ல, அதிலுள்ள பல கவிதைகள் கருத்தைக் கவர்ந்தன. கவிஞர் ஆன்மன் குறித்து அந்தத் தொகுப்பில் எந்தவிதக் குறிப்பும் இல்லாமல் இருப்பது வேதனையளித்தது. அந்தக் கவிஞருடைய புகைப்படம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவரது தன்விவரக் குறிப்பையாவது இணைக்க வேண்டாமா?
இடைத்தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவரது "தெரிவு' கவிதையைப் பதிவு செய்கிறேன்.

நீங்கள்
எங்களுக்கானவர்கள் அல்ல
நாங்கள்
உங்களுக்கானவர்கள் அல்ல.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
அறிந்தே
அழுத்துகிறோம்
பொத்தான்களை! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com