இந்த வாரம் கலாரசிகன்

கவிப்பேரரசு வைரமுத்துவின் பகுத்தாய்வில் கோதைத் தமிழ் பருக ராஜபாளையத்தில் ஜனவரி 7-ஆம் தேதி மாலை 6 மணிக்குக் கூட இருக்கிறோம் என்பதை நினைவுப்படுத்துகிறேன்.
இந்த வாரம் கலாரசிகன்

கவிப்பேரரசு வைரமுத்துவின் பகுத்தாய்வில் கோதைத் தமிழ் பருக ராஜபாளையத்தில் ஜனவரி 7-ஆம் தேதி மாலை 6 மணிக்குக் கூட இருக்கிறோம் என்பதை நினைவுப்படுத்துகிறேன். சூடிக்கொடுத்த சுடர்க்கொடி தமிழை ஆண்டாள் என்பதால் அவருக்குத் தமிழ் இலக்கியத்தில் தனித்துவம் மிக்க இடம் உண்டு. அவர் ராஜமன்னாருக்குப் பூமாலை மட்டும் தொடுக்கவில்லை; தமிழால் பாமாலையும் சேர்த்துத் தொடுத்தார்.
 இதற்கு முன்னால் "தமிழ் இலக்கிய முன்னோடிகள்' வரிசையில் கவிப்பேரரசு வைரமுத்துவின் ஒவ்வொரு கட்டுரை அரங்கேற்றத்திற்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வேடந்தாங்கலில் கூடும் பறவைகளைப் போல வந்து கூடிய தமிழ் இலக்கிய அமைப்புகளும், ஆர்வலர்களும் ஜனவரி 7-ஆம் தேதி ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த ராஜபாளையத்தில் கூட வேண்டும். உங்களைச் சந்திப்போம் என்கிற எதிர்பார்ப்புடன் அரங்கத்தில் காத்திருப்பேன்.
 இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவைக்குச் சென்றிருந்தபோது, எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்களால் நடத்தப்படும் "விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்' நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். கடந்த எட்டு ஆண்டுகளாக, ஆண்டுதோறும் ஒரு சிறந்த எழுத்தாளரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு "விஷ்ணுபுரம் விருது' வழங்கிக் கௌரவிக்கிறது அந்த அமைப்பு. இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சீ. முத்துசாமிக்கு வழங்கப்பட்டது.
 "தான் வாழ்ந்த காலத்து நிகழ்வுகளை எழுத்தாளர்கள் பதிவு செய்தால் மட்டுமே அது அடுத்த தலைமுறையைச் சென்றடையும்' என்கிற சீ. முத்துசாமியின் கருத்தையும், "புலம்பெயர்ந்தவர்களின் வலிகளையும் வேதனைகளையும் எழுத்தாளர்கள்தான் பதிவு செய்கின்றனர்' என்கிற ஜெயமோகனின் கருத்தையும் நானும் வழிமொழிகிறேன்.
 புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகளையும் அடையாளம் கண்டு அவர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது. இதேபோல சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுக்கு "கரிகாலன் விருது' வழங்குகிறது.
 மதுரையிலிருந்து இயங்கும் தமிழக அரசின் உலகத் தமிழ்ச் சங்கமும், புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை அரங்கேற்றுவதில் முனைப்புக் காட்டுகிறது. இவையெல்லாம் வரவேற்புக்குரிய முயற்சிகள்.
 முன்னணி எழுத்தாளரான ஜெயமோகன், புலம்பெயர்ந்த எழுத்தாளர்களை அடையாளம் கண்டு தாயகத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியில் முனைப்புக் காட்டுவதன் மூலம் உலகத் தமிழ் சகோதரத்துவத்துக்கு வழிகோலியிருக்கிறார். தாயகத் தமிழ் எழுத்தாளர்களை அயலகத் தமிழ் எழுத்தாளர்களும், வாசகர்களும் தெரிந்து வைத்திருப்பதுபோல, அயலகத் தமிழ் எழுத்தாளர்களையும் புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களையும் தாய்த் தமிழகம் அறிந்திருக்க வேண்டும், கௌரவிக்க வேண்டும். தமிழக அரசின் விருதுகளிலும் அவர்கள் இடம்பெற வேண்டும்.
 அன்றைய நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஜெயமோகன் ஆற்றிய உரை, சமீப காலத்தில் நான் கேட்ட மிகச்சிறந்த உரைகளில் ஒன்று. ஓர் இலக்கியவாதியின் எண்ணச் சிதறலாக இல்லாமல், ஒரு தமிழ்ப் படைப்பாளியின் ஆக்கப்பூர்வமான தொலைநோக்குச் சிந்தனையாக அமைந்திருந்தது அந்த உரை.
 நான் எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்தைப் படித்திருக்கிறேன். அன்றுதான் முதன்முதலாக அவரது உரையைக் கேட்கும் வாய்ப்பும் பெற்றேன்.
 சைவம், சட்டம், இலக்கியம் என்று தம் காலம் முழுவதும் இயங்கி வந்தவர் பரவலாக கா.சு.பிள்ளை என்றழைக்கப்படும் கா. சுப்பிரமணிய பிள்ளை. திரு.வி.க.வால் "கல்விக்கடல்' என்று போற்றப்பட்டவர். சட்டக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தபோதும், தமிழ் உணர்வால் தன்னை இலக்கியப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர்.
 இவர் தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகப் போற்றியவர். நூற்றுக்கு மேற்பட்ட சான்றுகளை எடுத்துக்காட்டி
 "சிவஞானபோதம்' வடமொழி மூலம்
 உடையதன்று என்று நிறுவியவர்.
 இவரது இலக்கிய ஆய்வுகள், உரைகள் பல இருந்தாலும் இவர் எழுதிய "தமிழ் இலக்கிய வரலாறு' தனித்துவம் பெற்றது. "எழுதிக் குவித்திருக்கிறார்' என்பதற்கு இவர்தான் சரியான எடுத்துக்காட்டு. இவருடைய படைப்புகளில் வித்தியாசமான படைப்பு "உலகப் பெருமக்கள்' என்கிற புத்தகம்.
 ஆங்கிலப் புலமைமிக்க கா.சு.பிள்ளை, அறிவாலும், ஆற்றலாலும் உலக நாடுகளில் உள்ள சிறந்த 15 பெரும் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறுகளைச் சுருக்கமாகத் தொகுத்து வெளிக்கொணர்ந்த புத்தகம்தான் உலகப் பெருமக்கள். "உலகத்துள்ள பன்னாட்டுப் பெருமக்களுள் தலைசிறந்த 15 பெருமக்கள் வரலாறு' என்பதுதான் இந்தத் தொகுப்புக்கு அவர் வழங்கியிருந்த தலைப்பு.
 இன்றைய தலைமுறை அறிந்திராத, ஆனால் உலக வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய 15 ஆளுமைகளை இந்நூலில் அடையாளம் காட்டி, அவர்கள் குறித்த பதிவைச் செய்திருக்கிறார் கா.சு.பிள்ளை.
 பள்ளி இறுதி வகுப்பை முடிப்பதற்கு முன்னால் ஒவ்வொரு மாணவ-மாணவியரும் கட்டாயம் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய பல வரலாற்று உண்மைகள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. தமிழகத்திலுள்ள அனைத்து நூலகங்களிலும் கட்டாயம் இடம்பெற வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.
 தனது 60-ஆம் ஆண்டு நிறைவு விழாவினை (மணிவிழா)யொட்டி பாவலர் சொல்லினியன் என்கிற சொ.சேகர் வெளியிட்டிருக்கும் கவிதைத் தொகுப்பு "இனிப்பு சுற்றிய காகிதம்'. இது அவரது ஆறாவது நூல் என்று தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அத்தனையும் ஹைக்கூக்கள். அதிலிருந்து இந்த வாரத்துக்குப் பொருத்தமான ஒரு கவிதையைப் புத்தாண்டு வாழ்த்துகளுடன் பதிவு செய்கிறேன்.
 
 மீண்டும் பிறந்தது
 பழைய வருடம்
 புதிய நாட்காட்டியோடு!
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com