இலக்கணக் கல்வியும் இன்றைய தேவையும்

காலந்தோறும் மொழிப் பயன்பாடானது மொழியின் பொதுவான மரபிலிருந்து மாறுபட்டு, சிதைவுற்று அமையாத வகையில் இருக்குமாறு மொழியின் அமைப்பு, இலக்கண வரம்புகளை இலக்கண ஆசிரியர்கள் வகுத்து வருகின்றனர்.
இலக்கணக் கல்வியும் இன்றைய தேவையும்

காலந்தோறும் மொழிப் பயன்பாடானது மொழியின் பொதுவான மரபிலிருந்து மாறுபட்டு, சிதைவுற்று அமையாத வகையில் இருக்குமாறு மொழியின் அமைப்பு, இலக்கண வரம்புகளை இலக்கண ஆசிரியர்கள் வகுத்து வருகின்றனர். பெரும்பான்மையாக மேற்கண்ட நோக்கத்திற்காகவே இலக்கண நூல்கள் மிகவும் அரிதாக ஆங்காங்கே முளைத்து வருகின்றன. இன்னொரு வகையில் மொழியறியாதார் மொழியினை எளிமையாகக் கற்றுக்கொள்ளும் நோக்கிலும் இலக்கண நூல்கள் இயற்றப்படுவதுண்டு.
இவ்வகையில் இயற்றப்படுகின்ற இலக்கண நூல்கள் மொழியின் எல்லாக் கூறுகளையும் கொண்டிருப்பதில்லை. மேலும், மேனாட்டு அறிஞர்கள் மொழியினைக் கற்றுக்கொண்ட பின்னர் அவர்கள் கற்றுக்கொண்ட மொழியின் இலக்கணத்தினை எழுதிச் செல்வதுமுண்டு. அவ்வகையில் எழுதப்பட்ட இலக்கண நூல்களே தமிழினைத் தாய்மொழியாகக் கொண்டோர் எழுதிய இலக்கண நூல்களைக் காட்டிலும் மிகுதியானவை எனலாம்.
பெஸ்கி என்னும் வீரமாமுனிவர் இயற்றிய தொன்னூல் விளக்கம் என்னும் நூல் தமிழ் மரபிலக்கணங்களின் வரிசையில் இடம்பெற்றுள்ளது மிகவும் சிறப்பிற்குரியதாகும். தமிழ் மரபிலக்கணங்களுக்குப் பின்னர் தமிழ் மொழிக்கான இலக்கணங்கள் தமிழினைத் தாய்மொழியாகக் கொண்டவர்களால் எழுதப்பட்டவை மிகவும் குறைவே! கல்வி நிலையங்கள் சில இவற்றை இலக்கணக் கல்விப் பகுதிக்கான பாடப்பகுதியில் சேர்த்துள்ளன. இலக்கியங்களுக்காகப் பல்வேறு நிலைகளில் நூல்கள் எழுந்தவை போல இலக்கணங்களுக்கான நூல்கள் எழவில்லை.
மொழிப்பயன்பாடு மொழிக்குரிய பொருத்தப் பாடுகளிலிருந்து விலகாமல் செல்லும்போது இலக்கண நூல்களின் தேவை இல்லாமல் போகின்றது. ஆனால், மேற்கண்ட நிலையில் பொருத்தப்பாடுகளுடன் மொழிப்பயன்பாடு அமைவதில்லை. மொழி தவறாகவே பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தவறான மொழிப்பயன்பாடு படிக்காத மக்களிடம் இருப்பது இயல்பானது. இது படித்த மக்களிடம் காணப்படுவதுதான் விரும்பத்தகாததாக அமைகிறது. மேலும், இது தமிழ் படித்த மாணவர்களிடமும் காணப்படுகிறது. இன்னும் ஒருபடி மேலே சொன்னால் இது தமிழ்
ஆசிரியர்களிடமும் நீங்கா இடம்பிடித்திருக்கிறது!
தமிழ் ஆசிரியர் மட்டுமின்றி ஏனைய மொழியாசிரியர்களிடமும் அம்மொழி பற்றிய இலக்கண அறிவு மிகவும் அருகிய நிலையில் ஒருசிலரிடம் மட்டுமே காணப்படுகிறது. ஆனால் தமிழாசிரியர்களைப் போல பிறமொழியாசிரியர்கள் அவர்களின் மொழியறிவில் குறைந்தவர்களாக இருக்கவில்லை. இதற்குப் பாடத்திட்டம்தான் காரணம் என்று கூறிவிட முடியாது. தமிழ் மொழியினைத் தவறாகப் பயன்படுத்துவதனால் எந்தப் பாதிப்பும் வந்துவிடப் போவதில்லை என்ற எண்ணமும் அதைத் தவறாகப் பயன்படுத்தும்போது இடித்துரையாதார் இல்லாமையுமே காரணமாகும்.
மொழியாசிரியரின் இன்றியமையாத பொதுமைத் தகுதியே மொழியின் பொதுவான அமைப்பியல்பினைத் தெரிந்து வைத்திருப்பதுதான். இந்த நிலையே பிறரிடமிருந்து (படைப்பாளிகள், பொதுமக்கள், பிற ஆசிரியர்கள்) மொழியாசிரியரை வேறுபடுத்தும். இலக்கிய அறிவோடு இலக்கண அறிவுதான் மொழியாசிரியர்க்குத் தேவையானது. ஆனால், இன்றுள்ள தமிழாசிரியர்கள் இலக்கியத்தில் மட்டும்தான் ஆர்வம் காட்டுகின்றனர்.
மொழியின் அமைப்பு அல்லது இலக்கண அறிவு இல்லாமல் எவ்வாறு ஒரு மொழியினைப் பயிற்றுவிக்க, பயில, புரிந்துகொள்ள முடியும் என்பது தெரியவில்லை. பாடத்திட்டத்தில் மொழியறிவு பற்றிய விழிப்புணர்வுப் பகுதிகள் பெரும்பாலும் இல்லை. ஒருசில இடங்களைத் தவிர இன்று பெரும்பாலான பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மொழி, இலக்கணக் கல்வி பற்றிய பகுதிகள் ஓரளவு சேர்க்கப்பட்டிருந்தாலும் அவை சரியாக நடத்தப்படுவதில்லை. பள்ளிகளைக் காட்டிலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இந்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.
தமிழ் படிக்கின்ற மாணவர் (கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும்) ஒருவருக்குத் தாய்மொழியில் இரண்டு வரிகள் சரியாக எழுதத் தெரியவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பாவது? அதற்கு ஆசிரியரின் அக்கறையின்மையும், மொழிப்பற்றின்மையும், பாடத்திட்டமும்தாம் காரணங்களாகும். இன்னும் சொல்லப்போனால் தமிழ் மாணவர்களைக் காட்டிலும் பிற பாடங்களைப் படிக்கின்ற (இயற்பியல், வேதியியல்) மாணவர்களின் மொழிப்பயன்பாடு சிலநேரங்களில் சரியாய் அமைவதுமுண்டு. மொழியினைக் காலத்திற்கேற்ப விளக்குவதற்கு எவ்வுளவுதான் மிகுதியான இலக்கண நூல்கள் தோன்றினாலும் அவற்றைப் பயன்படுத்தாதபோது அவை பயனற்றனவாகவே அமையும். இந்த நிலைக்குத் தமிழ் மாணவர்களும் சிறிது பொறுப்பேற்றுதான் ஆகவேண்டும்.
சங்க மொழியினைப் புரிந்து கொள்வதற்குத் தொல்காப்பியத்தின் அறிவு மிகவும் இன்றியமையாதது. ஆனால், எந்தெந்தக் கல்லூரிகளில், பாடத்திட்டத்தில் தொல்காப்பியம் உள்ளது என்றால் விடை கூற முடியாது. சிலவிடங்களில் சேர்க்கப்பட்டிருந்தாலும் அது சரிவர நடத்தப்படாதபோது அதனால் என்ன பயன்? இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ்க்கல்வி எங்கே சென்று கொண்டிருக்கின்றது? இன்று ஏராளமான கல்வி நிலையங்களில் இலக்கியங்கள் குறித்த பகுதிகளே பாடத்திட்டத்தில் மிகுதியாக உள்ளன. இந்த இலக்கியத்தினைப் படைக்கவும் படிக்கவும் பெரும்பாலோராலும் முடிகின்ற நிலையில், மொழியமைப்புப் பற்றிய அறிவினை எடுத்துச் சொல்லதான் ஆள் இல்லை.
பெரும்பாலும் தமிழ் இளங்கலையில் "நன்னூல்' என்ற இலக்கண நூல் பாடமாக இருக்கும். ஆனால் அதுவும் சரியாக நடத்தப்படுவதில்லை. இளங்கலை முடித்த பின்னர் முதுகலையில் அடிப்படையான தொல்காப்பியத் தொடர்புடைய நன்னூல் கருத்துகள் மாணவர்களுக்குத் தெரிவதில்லை. சிலர் நன்னூல் தொல்காப்பியத்தினைப் போல சரியான இலக்கண நூல் கிடையாது என்பதால் அதை நடத்தாமல் விட்டுவிடுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. நன்னூலை நன்றாகப் படித்தாலே மொழி பற்றிய நல்ல இலக்கண அறிவினைப் பெறமுடியும்.
இப்போது மாணவர்களிடம் காணப்படுகின்ற மலிவான மொழிப்பிழைகள் உடனே தீர்க்க முடியாதவை. அவற்றைப் பல பயிற்சிகளின் மூலமே தீர்க்க முடியும். மொழியைச் சரியாக; பயன்படுத்துதல் பற்றிச் சில நூல்கள் இன்றளவில் வெளிவந்திருப்பினும் அவை மாணவர்களிடையே பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. அவற்றினைப் படிப்பதற்கு அவர்களுக்கு ஆர்வமின்மையாலும், படிப்பதற்கு உரிய நிர்ப்பந்தம் இன்மையாலும் எழுத்துப்பிழை, சொற்பிழை, தொடர்ப்பிழை போன்றவை இன்று மாணவர்களிடையே மலிந்து காணப்படுகின்றன. இன்று இலக்கணக் கல்வியானது மாணவர்களால் வெறுப்பாகவே பார்க்கப்படுகிறது. இவ்வெறுப்புத் தொடருமானால் மொழிச்
சிதைவினை மிகு விரைவிலேயே சந்திக்க நேரிடும்.
இந்த நிலையெல்லாம் மாற வேண்டுமானால் பாடத்திட்டம் மறுசீராய்வு செய்யப்பட வேண்டும். மொழியாசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இன்றியமையாத மொழியமைப்புப் பற்றிய இலக்கணக்கல்வி ஊக்குவிக்கப்பட்டுத் தரமாகப் பாடத்தை நடத்தும் நிலை ஏற்பட வேண்டும். எழுத்தும் சில சொற்களுக்கான பொருளும் தெரிந்திருந்தால் அகராதியின் துணையோடு எந்த இலக்கியத்தினையும் படித்துவிடலாம். இதற்குப் பாடம் நடத்திதான் கற்பிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இந்த நிலைதான் இன்று தமிழில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இலக்கணக் கல்வியை ஊக்குவிக்கவில்லை என்றால், மொழியானது பேச்சு நிலையிலும் எழுத்து நிலையிலும் தன்னுடைய பொதுவான கட்டமைப்பினை இழந்து சிதைந்து போய்விடும். இந்நிலையினைக் கல்வியாளர்களால் மட்டுமே சரிசெய்ய முடியும். ஒரு மொழியின் கட்டுக்கோப்பினை நிலைநிறுத்தும் இலக்கண நிலை இழக்கப்படுமானால் அம்மொழியின் பொதுத்தன்மை இழக்கப்பட்டு, தாறுமாறாகப் பயன்படுத்தப்படும். தன் தாய்மொழியில் நல்ல இலக்கண அறிவு உடையவர் ஒருவரால் மட்டுமே இன்னொரு மொழியினை எளிமையாகக் கற்றுக்கொள்ளவும் முடியும். அதனால், முனைவர் பட்டம் (பிஎச்.டி.) முடித்த மாணவர்களாவது இனிமேல் மொழிப்பயன்பாட்டில் தவறு செய்வதைக் குறைத்துக் கொள்ளுமாறு வழிவகை செய்வதே இன்றைய இன்றியமையாத் தேவையாகும்!

-முனைவர். சு. சரவணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com