தமிழ்ச் செல்வங்கள்: தாள்-1

இந்நாள் ஊடகங்கள் உலகக் கண்ணாடியாக விளங்குகின்றன. இவற்றுள் தலைப்பட்டதும் முற்பட்டதும் "செய்தித்தாள்' என்னும் ஊடகமே!
தமிழ்ச் செல்வங்கள்: தாள்-1

இந்நாள் ஊடகங்கள் உலகக் கண்ணாடியாக விளங்குகின்றன. இவற்றுள் தலைப்பட்டதும் முற்பட்டதும் "செய்தித்தாள்' என்னும் ஊடகமே! விடிந்தும் விடியாமலும் கண் செய்தித் தாளை நாடுகின்றது. ஒரு நாள் செய்தித்தாளைப் பார்க்கவில்லை என்றால் ஏதோ ஓர் இழப்பாகவே தோன்றுகின்றது. அச் செய்தித்தாள் என்பதிலுள்ள "தாள்' எப்படி வந்தது? செய்தி எப்படி வந்தது? தாள் என்பது பற்றி அறிவோம்; தாள் என்பதன் விரிவாக்கமும் அறிவோம்.
புல், நெல், வரகு, தினை, சாமை முதலிய நிலைத் திணைகளின் "அடி', நெல் தாள், புல் தாள், வரகந் தாள் என வழங்கப்பட்டன. தாள் என்பதற்கு "அடி' என்பதுடன் ஊன்றுதல், நிற்றல் ஆகிய பொருள்களும் உண்டாயின. தாள் வளர வளரத் தட்டை எனவும் பட்டது. அந்நிலையில் "தாள் தட்டை' என இணைச் சொல் பிறந்தது.
பயிராகிய தாள் வளர்ந்து கருக்கொண்டு கதிராகி மணி பிடித்தபின் அறுவடை செய்யப்பட்டது. அறுவடை செய்யப்பட்ட பயிரின் வேர் தூர்களை உழாமல், வெட்டி எறியாமல் விட்டால் அவற்றில் மீளவும் பயிர்கள் கிளர்ந்தன; வளர்ந்தன; ஓரளவால் பயனும் தந்தன. அப் பயிரைத் "தாளடி' என்றனர். முன்னைத் தாளின் அடியாக வளர்ந்தமையால் அப்பெயர் இட்டனர்.
இன்னொரு வகையிலும் "தாளடி' உண்டாயது; பயிர் விளைந்து அறுவடை செய்த பின் இடைவெளிக் காலம் விடாமல் தொடர்ந்து அவ்விடத்தில் பயிரிடலும் உண்டு. அதுவும் தாளடியே! "இருபோகம்', "முப்போகம்' எனப் பயிரிடலும் நீர்வளம் உண்டாயின் செய்வது வேளாண் வழக்கம்.
"தாளடி' மீமிசைச் சொல். ஏனெனில், "தாளும் அடியும்' ஒரு பொருள் தருவனவே. ஆதலால், "மீ' என்றாலும் மேல்; "மிசை' என்றாலும் மேல்; அச் சொல்லே அவ்வகைச் சொல்லின் குறியீடாக விளங்குவதாயிற்று. மழை தொலைவில் பெய்வது கால் ஊன்றிய தோற்றம் தரும். மழை, "கால் ஊன்றியுள்ளது', "தாள் ஊன்றி உள்ளது' என்பது மக்கள் வழக்கு. நிலத்தில் ஊன்றி நின்ற தாள், கால் நடை, மக்கள் காலின் பெயர்கள் ஆயின; உருவிலியாம் இறைக்கும் திருக்குறள் முதலதிகாரத்தில் வாலறிவன் நற்றாள் (2), தனக்குவமை இல்லாதான் தாள் (7), அறவாழி அந்தணன் தாள் (8), எண் குணத்தான் தாள் (9) என நான்கு பாடல்களில் தாளும், மலர்மிசை ஏகினான் மாணடி (3), வேண்டுதல் வேண்டாமை இலான் அடி (4), இறைவன் அடி (10) என அடி மூன்று பாடல்களிலும் இடம்பெற்றன. தாளும் அடியும் ஒத்த பொருள் என்பதைப் புலப்படுத்தியவை இவை.
தாள் இல்லாமல் அல்லது அடியில்லாமல் நடப்பது, ஓடுவது, ஊன்றிச் செயல் புரிவது எப்படி? செயற்கை எனினும் அதுவும் "தாள்' தானே! தாள் இல்லாமல் தாள் ஆளுமை - தாளாண்மை - உண்டாகுமா? தாளாண்மை என்பது என்ன? "தாளாண்மையே ஓரான் பிறவியின் பேறும் பெருமிதமுமாம்' என்பது பொய்யா மொழியார் முடிவு. "ஆள்வினை உடைமை' என்றோர் அதிகாரம் படைத்து,

""தாளாண்மை என்னும் தகைமைக் கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு'' (613)

வேளாண்மை என்பது பிறர் நலம் நாடிச் செய்வன செய்தலாம் பெருமிதமாகும். வேளாண்மை என்பது உழவுத் தொழில் மட்டுமன்று. உலக உயிரோம்பும் உதவியாவதுமாம். அதனால்தான்,

""தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு'' (212)

என்றார். ""தாளாண்மை இல்லையேல், வேளாண்மையே இல்லை'' என்றும் தெளிவிப்பார் (614).

- தொடர்வோம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com