தமிழ் வளர்ச்சிப் போக்கில் தவறான செயற்பாடுகள்

மொழியியல்படி உலகில் எந்த மொழியும் உயர்ந்தது என்றோ, தாழ்ந்தது என்றோ கிடையாது. எந்த மொழி உலகச் செய்திகளைத் தன் மக்களுக்குத் தடையின்றிக் கொண்டு சேர்ப்பதும்
தமிழ் வளர்ச்சிப் போக்கில் தவறான செயற்பாடுகள்

மொழியியல்படி உலகில் எந்த மொழியும் உயர்ந்தது என்றோ, தாழ்ந்தது என்றோ கிடையாது. எந்த மொழி உலகச் செய்திகளைத் தன் மக்களுக்குத் தடையின்றிக் கொண்டு சேர்ப்பதும், அந்த மக்களின் செய்திகளை முழுமையாக வெளிப்படுத்தக் கூடியதுமான ஆற்றலைப் பெற்றுள்ளதோ அந்த மொழியே அந்த மொழி பேசும் மக்களுக்கு உயர்ந்த மொழி. ஒவ்வொரு மொழியும் தனக்குத் தேவையான எழுத்து அட்டவணை அமைப்பைப் பெற்றுள்ளது.
வளர்ச்சி பெற்று உயர் நிலைக்குச் சென்றுள்ள நிலையிலும் ஆங்கிலம் 26 எழுத்துகளுக்கு மேல் ஓரெழுத்தைக்கூட தன் எழுத்து அட்டவணையில் சேர்க்கவோ நீக்கவோ அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு மொழியிலும் அமைந்துள்ள அட்டவணைக்கு மேல் அந்த மொழிக்கு எழுத்துகள் தேவைப்படுவதில்லை என்பதுதான் மொழியியல் கோட்பாடு.
உலகில் எந்தவொரு மொழியிலும் அதன் எழுத்தமைப்பில் இல்லாத ஓர் ஒலிக்குப் புதிய எழுத்து வடிவத்தைச் சேர்க்கும் வழக்கமில்லை. உலகில் உள்ள அனைத்து மொழிகளின் ஒலிகளுக்கும் தமிழில் வரிவடிவங்களை உருவாக்கத் தேவையில்லை. அப்படிச் சேர்த்தால்தான் தமிழ் வளரும் என்பதெல்லாம் மொழியியலுக்குப் புறம்பான அறியார் கூற்று. அறிவியல் காலத்தில் அனைத்துக் கலைச் சொற்களையும் மொழி மாற்றம் செய்து மக்கள் வழக்குக்குக் கொண்டுவர அம்மொழியைப் பயன்படுத்தும் மக்களின் உழைப்புதான் தேவை.
இன்றும் ஆங்கிலத்தை ஆங்கிலேயர்கள் வளர்க்கவில்லை. உலகில் உள்ள சிறு நாடுகள் உள்பட ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சிறு இனத்தைச் சார்ந்த ஆய்வாளனும் தன் ஆய்வைத் தன் தாய்மொழியில் மட்டும் வெளிப் படுத்துவதைக் காட்டிலும், தன் ஆய்வு உலகம் முழுவதும் பரவுவதற்காக ஆங்கிலத்திலும் வெளியிடுகின்றனர். அவ்வாறு வெளியிடும்போது ஆய்வும் வளர்ந்தது; ஆங்கிலமும் வளர்ந்தது. இன்றும் உலக அளவில் ஆங்கிலம் வளர துணை செய்தவர்கள் பிறமொழி மக்களே தவிர ஆங்கிலேயர்கள் அல்லர். அவர்கள் அதை வைத்து இன்றும் அதிகாரம் செய்யத்தான் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், உலகின் மற்ற மொழிகளை அதனைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தாம் வளர்த்தாக வேண்டும். தமிழை எடுத்துக் கொண்டால், கடைகோடித் தமிழனுக்கும் உலகச் செய்திகளையும் கொண்டு சேர்க்கும் வண்ணம் தமிழை ஆற்றல் சார்ந்த மொழியாக உருவாக்க வேண்டும்.
தமிழ்நாட்டு ஊடகங்கள் தமிழைப் பெருமளவில் கெடுக்கின்றன. இலக்கிய வளமும் சொல்வளமுமிக்க மொழியான தொன்மையான தமிழ் மொழியை அனைத்துத் துறைக்குமான பயன்படுத்து மொழியாக வளர்த்தெடுத்து, அடுத்தத் தலைமுறையையும் உயர்த்தும் கடமையிலிருந்தும் வாய்ப்பிலிருந்தும் வழுவுதல் நம் பொறுப்பைத் தட்டிக் கழிப்பதேயாகும். அதைவிடுத்து, உலக மொழிகளிலெல்லாம் வன்கவர்பு செய்தும், கடன் வாங்கியும் செயற்கை வளர்ச்சி பெற்ற மொழியோடு தமிழ் மொழியை ஒப்பிட்டுப் பார்க்கத் தேவையில்லை.
மொழி அமைப்போடு இனத்தின் வரலாறும் அதில் அடங்கியுள்ளது. அதை நாம் இழக்கச் செய்து விடுகிறோம். அந்த வரலாற்றை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுபோக விடாமல் தடுத்தும் விடுகிறோம். மொழியை வைத்து அதைப் பயன்படுத்தும் இனத்தின் வரலாற்றை, பண்பாட்டை, வாழ்முறையை ஆராயும் மொழி அகழ்வாய்வு (கண்ய்ஞ்ன்ண்ள்ற்ண்ஸ்ரீ
அழ்ஸ்ரீட்ங்ர்ப்ர்ஞ்ஹ்) என்ற புதிய துறையே உருவாகியுள்ளது.
தொழில் - தொல்லுதல் - தோண்டுதல் - தொல்லில் - தொழில் - மண்ணைத் தோண்டுதல் தொடர்பான பணி.
உழைத்தல் - உழுதல் உழவு தொடர்பான பணி
வளர்ச்சி - பயிர் வளர்த்தல் தொடர்பான பணி
விளைவு - விளைவித்தல் தொடர்பான பணி
இந்த இனம் மண்ணைப் பயன்படுத்தி உழவு செய்த வேளாண்மை இனம் என்பதற்கான வரலாற்றுச் சான்றுகளைத்தான் இந்தச் சொற்கள் தாங்கி நிற்கின்றன. இது இந்த இனத்தின் வாழ்முறை வரலாறு. இதை மறக்கச் செய்துவிட்டு போலி மதிப்புக்காகப் பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதால் தாய்மொழிச் சொற்களை இழப்பதோடு மரபு வரலாற்றையும் இழக்க நேரிடும்.
தமிழ் ஒட்டுநிலை மொழியாதலால் எந்தவொரு கருத்துக்கும் கலைச் சொற்களை ஏராளமாகப் படைத்து அமைத்துக் கொள்ளும் உருவாக்கு திறன் மிகுந்தது. எழுத்து வடிவங்களைக் கடன் வாங்குவதாலேயோ, எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் மொழியைக் குழப்பிக் கொண்டிருப்பதாலேயோ இருக்கும் சொற்கள் கிடப்பில் போட்டுவிட்டு, வேறொரு மொழிச் சொல்லை இரவல் வாங்குவதாலேயோ தமிழ் வளர்ந்துவிடாது.
மொழி என்பது மக்களின் விளைபொருள். மரம், செடி, கொடி வளர நிலம் எப்படி இன்றியமையாததோ, அதுபோல் மொழி வளர அதன் மக்கள் இன்றியமையாதவர். மக்களிடைதான் மொழி வளர வேண்டுமேயொழிய மொழி தனியாக ஓரிடத்தில் வளர முடியாது. அன்றாட வழக்கில் வழங்கும் மொழியாகவும், கல்வி மொழியாகவும் மக்கள் பயன்பாட்டில் இருந்தாலேயே மக்கள் அந்த மொழியை வளர்த்து
விடுவர். அதுதான் உண்மையான மொழி வளர்ச்சியாகவும் மொழி மேம்படுத்தமாகவும் இருக்க முடியும். இன்றைய நிலையில் மொழியைக் கெடுக்காமல் இருந்தால் அதுவே தமிழ் வளர்ச்சிக்கு ஊடகங்கள் ஆற்றும் பெரும் பணியாகும்.
 

பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com