தமிழ்ச் செல்வங்கள்: தாள்-2

சீர்த்தனை எனப்பட்ட கீர்த்தனை பாடுகிறார்கள்! அவற்றின் உச்சியில் "அராகம்' எனப்பட்ட இராகமும் தாளமும் அச்சிட்ட நூல்களில் காண வாய்க்கும்.
தமிழ்ச் செல்வங்கள்: தாள்-2

சீர்த்தனை எனப்பட்ட கீர்த்தனை பாடுகிறார்கள்! அவற்றின் உச்சியில் "அராகம்' எனப்பட்ட இராகமும் தாளமும் அச்சிட்ட நூல்களில் காண வாய்க்கும். அந்தத் தாளம் எப்படித் தோன்றியது? தாளில் - காலடியில் இருந்து தோன்றியதால் தாள், தாளம் எனப்பட்டது. தாள் + அம் = தாளம்! படிக்கட்டில் நடை போட்டாலே இசைத் தாளம் வெளிப்படும்.
குடந்தைத் தாராபு(சு)ரம் இல்லையா? தாளின் வழியாகத் தோன்றிய தாளம் பின்னே "கைத் தாளம்' ஆயது. கைக்கு வலியுண்டாகாமல் தாளம் எழுப்பத் தாளக் கட்டைகள், தாளத் தாலங்கள் உண்டாயின! ஞானசம்பந்தப் பிள்ளையார் கை நோவாமல் தாளம் போடப் பொற்றாளம் வழங்கப்பட்ட செய்தியும் உண்டு. குயில் பாட்டிலே பாரதியார் பாடுகிறார்:

காதல் காதல் காதல்
காதல் போயிற் காதல் போயிற்
சாதல் சாதல் சாதல். - காதல்!
அதிலே நான்காம் கண்ணி:

தாளம் தாளம் தாளம்
தாளத் திற்கோர் தடையுண் டாயின்
கூளம் கூளம் கூளம் - காதல்!

தாளம் பண்ணோடு பொருந்த வேண்டும் அல்லவா! அதனால்,

பண்ணே பண்ணே பண்ணே
பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்
மண்ணே மண்ணே மண்ணே!

என்றார். உறுப்புப் பெயர், ஓசைப் பெயராய், இசைச் சிறப்பாய் அமையவில்லையா? குழந்தைகள் "முரண்டு' பிடித்தால் குழந்தை இயலறியாப் பெற்றோர் ""உனக்கு இரண்டு அத்தாளம் கொடுத்தால்தான் சரிப்படும்'' என்பர். அவர்கள் "முரட்டு'த் தனத்தில் மொழிக் கேட்டை அறியவா செய்வர்? அல் தாலம் = அற்றாலம்; இரவு உணவு அல் தாலமாம்! அதுவே அத் தாளமாய் மாறி தாளத்தைக் கெடுத்து மொழியையும் கெடுப்பது இரட்டைக் கேடாம்! அல்லும் பகலும் அறியாச் சொற்களா? தாலம் } தட்டம், உண்கலம்.
நம் செம்மொழிச் செல்வமாம் நூல்கள், பிள்ளை நூல்கள் ஏன், இப்பொழுது நாம் பயன்படுத்தும் "தாள்' இங்கு வருவதற்கு முன் தாலத்தில் தானே எழுதியும் - படியெடுத்தும் காக்கப்பட்டன. அத் "தாலம்' தானே மகளிர் மங்கல நாணாக விளங்கியது! விளங்கவில்லையா? தாலம் என்பது பனை! பனை ஓலை! நறுக்கு ஏடு, சுவடி, ஓலை, கிள்ளாக்கு என்பவை எல்லாம் அத் தாலக் கொடைதானே!
வறிய புலவர் பரணைகளிலே கிடந்து இயற்கைக் கேட்டாலும், செயற்கைக் கேட்டாலும் அழிந்தவை போக எஞ்சியவையே நம் தமிழ் வளமாம்! தாலமாம் பனை "தாளம்' எனவும் வழங்கியது; தாளிப்பனை என ஒரு பனை மரமும் உண்டு. அதன் ஓலையும் எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. இவை தமிழ் வழியே வாய்த்தது "தாள்' என்பதன் சான்றுகளாம்.
மேலும் பயிர்களின் தாள்கள் இலை, தழை ஆயவற்றால் செய்யப்பட்ட - கூழாக்கிச் செய்யப்பட்ட - "பேபரைசு' என்பதன் வழிவந்த "பேப்பர்' என்பதும் அதன் மூலப்பொருள் படியும் "தாள்' என்னும் பெயர்க்குத் தகுதியுடையதாம். நாள் தாள் மட்டுமா? கிழமைத் தாள், மாதத் தாள் (மாதிகை) முத்திங்கள் இதழ் எனவும், சிற்றிதழ் பேரிதழ் எனவும், ஆண்டு மலர், பொங்கல் மலர் எனவும் இதழும் மலருமாகத் "தாள்' மணம் பரப்புகின்றது.
""பத்து வகைக் கறியுடனே தாளிட்டு'' என்று ஒரு புலவர் தனிப்பாடல் பாடுகிறாரே! கட்டித் தயிரைப் பிசைந்து குய்ப்புகை கமழத் தீம் புளிப் பாகு ஆக்கிப் படைக்கக் கணவன் "இனிது' என்று பாராட்டும் தாளித மணம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மணம் பரப்பி வருகிறதே (குறுந்தொகை 167)! தாள் மணம் தாளிகை மணம் அல்லவோ!

- தொடர்வோம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com