தமிழ்ச் செல்வங்கள்: செய்தி

செய் - செய்தி. செய்தி என்பதன் மூலம் செயல் என்பது விளங்கவில்லையா! மிகப் பண்படுத்தம் செய்யப்பட்டது ஆகிய நிலம் நன்செய், ஓரளவு பண்படுத்தினாலும் விளையும் பயிர் நிலம் புன்செய்!
தமிழ்ச் செல்வங்கள்: செய்தி

செய் - செய்தி. செய்தி என்பதன் மூலம் செயல் என்பது விளங்கவில்லையா! மிகப் பண்படுத்தம் செய்யப்பட்டது ஆகிய நிலம் நன்செய், ஓரளவு பண்படுத்தினாலும் விளையும் பயிர் நிலம் புன்செய்!
பரம்பரை பரம்பரையாகத் தொழில் செய்து அவ்வுழைப்பின் வருவாய் கொண்டு பிறர்க்கும் உதவி, தாமும் உண்டு வாழ்வு நடத்துபவர், ""கை செய்து ஊண் மாலையவர்'' எனப்பட்டனர் (திருக்குறள்: 1035) செம்மையாகச் செய்வது எதுவோ, அதுவே செயல். செம்மையற்றது செயலாகாது. செய்யன், செவ்வியன், செங்கோல், செந்நா (பொய், புரட்டு, புறம் கூறாத நாவு) என்பவை எண்ணத் தக்கவை.

""எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு'' (110)

என்னும் குறளை எண்ண வேண்டும். நல்லதாக எண்ணி நாம் செய்வன எல்லாம் நல்லவை அல்ல; அந் நல்லவை செய்யும் விளைவு, அதனைப் பயன்படுத்துவாரைப் பொறுத்ததே - நல்லதும் அல்லதும் ஆவது. அதனால்,

""நன்றாற்ற லுள்ளும் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை'' (469)

என்றார் வள்ளுவர். "செய்நன்றி' என்னாமல் "செய்ந்நன்றி' என்றாரே ஏன்? செய்யும் நல்லுதவி செம்மை வாய்ந்ததாய் அமைந்தால்தான் செய்ந்நன்றியாம்! செய்தவை எல்லாம் நன்றி ஆகிவிடாது. இக்குறளை ஆலத்தூர் கிழார் என்பார் ஆழ்ந்து நோக்கினார். இதனை விளக்குவார் போலப் பாடி,

""ஒருவன், செய்தி கொன்றோர்க் குய்தி இல்லென
அறம்பா டிற்றே'' (புறநா.34)

என்றார். செய்தி என்பது செய்யப்பட்ட செம்மையான உதவி என்னும் பொருளிலே பயன்படுத்துகிறார். ஆதலால் அந்நாளில் "செய்தி' என்னும் சொல்லுக்குக் கொண்ட பொருளுக்கும், இந்நாளில் "செய்தித்தாள்' என்பதிலுள்ள "செய்தி' என்பதன் பொருளுக்கும் உள்ள வேறுபாடு தெளிவாக விளங்கும். பழஞ் சொற்கள் சொல் நிலை மாறாமல், பொருள் நிலை மாற்றம் அடைவது உண்டு. அவற்றைக் காலநிலைக்கு ஏற்பப் பயன்படுத்த வேண்டும் என்பது முறையானதாம்.
நானில (அ) நான்கு திசைக்கண் இருந்தும் அறியப் பெறும் நிகழ்வுகளை வெளிப்படுத்துவதே செய்தி என்பதற்காகவே வடக்கு (ச), கிழக்கு (உ),
மேற்கு (ர), தெற்கு (ந) என்றும் திசைப் பெயர்கள் கொண்டு (சஉரந) அமைத்தனர் என்பர். அவர்களுக்கு அப்பெயர் தகவாக இருக்கலாம். ஆனால்,
நம் செய்தி என்னும் சொல்லோ செம்மை அல்லது நடுவுநிலைமையை உயிராக - உணர்வு ஓட்டமாகக் கொள்ள வேண்டும் என்பதாம்.
எம்மொழி இதழாயினும் அம்மொழி மக்களை - அம்மொழி வழங்கும் நாட்டை மேம்படுத்தவும், மேன்மைப்படுத்தவும் ஆகிய சால்பொடு, மொழி நலம் காப்பதாகவும் அமைதலே "செய்தித்தாள்' என்பதன் சால்பியல் அறமாம். பாரதிதாசனார் பாடிய தமிழியக்கப் பாடல் காண்க:

""ஏற்றமுறச் செய்வதுவும் மாற்றமுற
வைப்பதுவும் ஏடே யாகும்!
தோற்றுபுது நிலையுணர்ந்து தோன்றாத
வழிகூறித் துணைபுரிந்து
சேற்றிலுயர் தாமரைபோல் திருநாட்டின்
உளங்கவர்ந்து தீந்த மிழ்த் தொண்(டு)
ஆற்றுந்தாள் அங்கங்கே அழகழகாய்
அறிஞர்களால் அமைத்தல் வேண்டும்!

நல்ல செய்தித் தாள்களைப் பாராட்டல் - பயன்படுத்தல் - பரப்பல் வேண்டும் அல்லவா!

- தொடர்வோம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com