"திருவாய்மொழி'க்குப் பெண் எழுதிய விளக்கவுரை!

திருவாய்மொழி வாசகமாலை எனும் விவரண சதகம்' என்ற ஏட்டு நூலைத் தந்தவர் ஒரு பெண்மணி. அவர் திருக்கோனேரி தாஸ்யை ஆவார்.
"திருவாய்மொழி'க்குப் பெண் எழுதிய விளக்கவுரை!

திருவாய்மொழி வாசகமாலை எனும் விவரண சதகம்' என்ற ஏட்டு நூலைத் தந்தவர் ஒரு பெண்மணி. அவர் திருக்கோனேரி தாஸ்யை ஆவார். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் எழுதிய திருவாய்மொழி 1102 பாடல்களை உடையது. திருக்கோனேரி தாஸ்யை ஒவ்வொரு பதிகத்திலும் முதல் பாட்டு அல்லது முதற்பாட்டும் அடுத்த மற்றொரு பாட்டுமாக இரண்டு பாடல்கள் வீதம் விளக்க உரை தந்துள்ளார். கிடைக்காத பாடல்கள் போக எஞ்சிய 164 பாசுரங்களுக்கு உரை தந்துள்ளார்.

""உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழுஎன் மனனே''
(2635)

மேற்கண்ட இப்பாடலோடு பொருத்தி விளக்குகிறார். இப்பாசுரத்தின் பொருளே திருவாய்மொழிப் பாசுரங்கள் அனைத்திலும் அமையப்பெற்றுள்ளது என்கிறார். பதிகத்தின் முதல் பாட்டை எடுத்து, சிறு விளக்கம் தந்து விட்டு உடனே மற்றொரு பாட்டையும் எழுதி அதற்கு விரிவாக உரை எழுதுவது இவரின் உரைப்போக்கு. ஒரு பாசுரத்திற்கு ஐந்து பக்கங்கள் வரை மணிப்பிரவாள நடையில் விளக்கம் தந்துள்ளார். சில இடங்களில் ஒரு பாடல் மட்டும் விளக்கம் பெறும். விரிவுரைக்கு ஒரு சான்று:

""ஆரா வமுதே அடியேன் உடலம்
நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற
நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த்
திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய்
கண்டேன் எம்மானே'' (3194)

ஆரா அமுதே என்பதற்கும் அடியேன் என்பதற்கும் விரிவான மணிப்பிரவாள நடையில் ஆசிரியர் கூறுகிறார். (அதைத் தமிழ்ப்படுத்திக் கட்டுரை ஆசிரியரால் இணைக்கப்பட்டுள்ளது) இதில் ஆரா அமுதே என்பதற்குத் திருக்கோனேரி தாஸ்யை தரும் விளக்கம்:
""க்ரமப்ராப்தி பற்றாத விஷயத்தைப் பிரிந்தார் எங்ஙனே ஆறியிருக்கும்படி முற்பட தர்சனமாய், அனந்தரத்திலே யணுகிப் பின்னை ஸ்பாசமாய்ப் படியிறே அனுபவப்ரகாரங்கள். அத்தனைக்ரமம் பார்த்திருக்க வொண்ணாதபடியாயிருக்கை.
(இறைவனை உணராமல் நின்றவன் மனம் அமைதியாக இருக்க முதலில் கண்ணால் காட்சி கொண்டு பிறகு அவன் அணுக்கத்தில் சென்று அதன்பின் அவனைத் தொட்டு இவ்வாறு படிப்படியாக உணரும் நிலையிலே இருப்பவனே இறைவன் என்று ஆரா அமுதே என்பதற்கு மட்டும் விளக்கம் தருகிறார் - கட்டுரை ஆசிரியர் விளக்கம்).
அடியேன் என்பதற்கு ""ச்ருதிப்ரசித்தமான திவ்யாத்ம ஸ்வரூபனாய், அபர்யாப்தாம்ருதானந்த ஸ்வரூபனானவனுக்கு அடியேன் - சேஷத்வாம்ருத வாச்யனான அடியேன் (கேள்விச் செல்வமான தத்துவன், ஆனந்தமே வடிவு எடுத்தால் போன்ற முடிவற்றவன்; அழிவு அற்றவன்; அளவு அற்றவன்; பேரின்ப உருவைக் கொண்டவன். அத்தகையனுக்கு அடியவன் - கட்டுரை ஆசிரியர் விளக்கம்)

நூல்:
இந்நூல் சுமார் 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகலாம். (அறிஞர் மு.அருணாசலம்) ஏட்டினின்று மறுபிரதி செய்யப் பெற்ற ஏட்டைப் பதிப்பித்துள்ளார். நாவல்பாக்கம் ஸ்ரீ தேவநாதாச்சாரியர். இவர் சரசுவதி மகாலில் ஓலைச்சுவடி கண்டுபிடிக்கப்பட்டு அச்சாக்கப்பெற்று விரிவான முன்னுரையையும் எழுதியுள்ளார்.நூலின் முதல் 15 ஏடுகள் கிடைக்கவில்லை. கிடைத்துள்ள ஏட்டுப்பகுதியில் முதல் பத்து 6ஆம் திருவாய்மொழி விளக்கம் பாதியிலிருந்து தொடங்குகிறது. பிறகு 7ஆம் திருவாய்மொழி முடிந்ததும் 8ஆம் திருவாய்மொழி, 9ஆம் திருவாய்மொழி விளக்கவுரை ஏடு இல்லை. ஆக முதல் 15 ஏடுகள் கிட்டாமல் போயின. விளக்கவுரை மணிப்பிரவாள நடையில் உள்ளது.

நூலாசிரியர் ஒரு பெண்மணி:
ஆங்கீரஸ வருஷம் மார்கழி மாஸம், 26ஆம் தேதி உயர்வற உயர்நலமுடையவன், என்கிற முதல் பாட்டின் விவரண சதகம் என்று திருநாமமான வாசகமாலையை அபர்யாப்தன் திருவடிகளிலே ஸந்தர்ப்பமான மாலையைச் செய்து அடிமை செய்தாள் திருக்கோனேரி தாஸ்யை; ஆசிரியரின் பெயர், தாய், தந்தை பெயர் என்று எதுவும் கிடைக்கவில்லை. வைணவ முறைப்படி வங்கிபுரத்து ஆச்சி, திருக்கோளூர் பெண் பிள்ளை போன்றோருடைய பெயர்கள் ஊர்ப்பெயரைச் சாத்தி அழைக்கப்பெறுவதைப் போல திருக்கோனேரி தாஸ்யை என்று ஊர்ப்பெயர் சேர்க்கப்பெற்று அழைக்கப்பெறுகிறது. வைணவ முறைப்படி தங்கள் பெயரை வெளிப்படையாகக் கூறாமல் "அடிமை செய்தாள் திருக்கோனேரி தாஸ்யை' என்று நூலில் அமைகிறது. கரக்குதம்பதாதம் ஷந்துமர்ஹந்தி ஸந்த; ஹி; ஓம் சுபமஸ்து. (அடியேன் கையினால் இந்த நூலை எழுதுவதன் மூலம் செய்யப்பட்ட தவறைப் பெரியோர் பொறுத்தருள வேண்டும்.)
இவர் காலம் கி.மு. 1370க்கு முன்பு கி.மு. 1270க்குப் பின்பு இருக்கலாம் என்று நாவல்பாக்கம் ஸ்ரீ தேவநாதச்சாரியர் 1952இல் இந்நூலின் பதிப்பில் சுட்டுகிறார். இவ்வாசிரியர் ஏனைய பாசுரங்களுக்கு விளக்கவுரை எழுதியதாகத் திருப்பாவை நூல் குறிப்பிலிருந்து ஊகிக்கிறார் அறிஞர் மு. அருணாசலம் (இலக்கிய வரலாறு, ப.285).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com