"துயிலெடை நிலை'யில் மணிவாசகர் செய்த புரட்சி!

திருவாசகத்தின் 20ஆவது பதிகமான திருப்பள்ளியெழுச்சியில் உள்ள பத்துப் பாடல்களின் மூலம் இயற்கையின் அழகு, இறைவனின் இயல்பு
"துயிலெடை நிலை'யில் மணிவாசகர் செய்த புரட்சி!

திருவாசகத்தின் 20ஆவது பதிகமான திருப்பள்ளியெழுச்சியில் உள்ள பத்துப் பாடல்களின் மூலம் இயற்கையின் அழகு, இறைவனின் இயல்பு, திரோதான சத்தியின் இயல்பு, இறைவன் குடிகொண்டிருக்கும் இடம், அம்மையின் அருள்திறம், அடியார் இலக்கணம், திருப்பெருந்துறையின் சிறப்பு, அடியார்களை ஆற்றுப்படுத்துதல், மெய்யியல் கருத்துகள், யோகத் தத்துவம், சைவ சித்தாந்தம், உவமைகள் எனப் பல்வேறு புரட்சிகளை அருளிச் செய்துள்ளார் மணிவாசகர்.


திருப்பள்ளியெழுச்சி:

"திரு' என்னும் சொல் சிறப்புப் பொருளையும், "பள்ளி' என்னும் சொல் படுக்கையையும், "எழுச்சி' என்னும் சொல் எழுந்திருப்பதையும் சுட்டும். இறைவனை எழுப்புவதால் "திரு'ப்பள்ளியெழுச்சி ஆயிற்று. இறைவனுடைய ஐந்தொழில்களுள் (பஞ்ச கிருத்யங்களுள்) ஒன்று திரோதானம். இதை சைவ சித்தாந்தம் "மறைப்பாற்றல்' எனக்கூறும். திருப்பள்ளியெழுச்சியை "திரோதான சுத்தி' என்கிறது பதிகக் குறிப்பு. அதாவது, மறைப்பாற்றலின் வலி மடங்குதல், இறைவனைத் துயிலுணர்த்தப் பாடிப் பணிவிடை கேட்டு அன்பு செய்தல் என்பர்.
தமோ குணத்திற்கு அடிமையாகி உறங்கிக் கொண்டிருக்கின்ற மனிதனை அவ்வுறக்கத்தினின்றும் எழுந்திருக்கச் செய்து, அவன் உள்ளத்தில் செயலற்றுக் கிடக்கின்ற ஆன்மிக உணர்வை எழுச்சி பெறச் செய்வதுதான் திருப்பள்ளியெழுச்சியாகும்.

திரோதான சுத்தி:

"திரோதான சுத்தி' என்பது மறைவு, நீக்கம். நம்முள் மறைந்திருக்கும் ஈசனை நாம் தெரிந்து கொள்ளச் செய்வது. விழுமிய முழுமுதற் சிவன் உலகு உயிர்களை நடப்பாற்றலின்கண் ஒடுக்கி, அந்நடப்பாற்றலினைத் தன் திருவடிக்கண் ஒடுக்கியருளும் திருக்குறிப்பே திருப்பள்ளியெழுச்சியாகும். உயிருக்கு மறைப்பினைச் செய்து வினைப்பயனைத் துய்க்குமாறு பக்குவம் செய்த திரோதான சத்தி, அருட் சத்தியாக வெளிப்பட்டு அருளும் காலம் திருப்பள்ளியெழுச்சியாகும்.

திருப்பள்ளியெழுச்சியின் முந்தைய வடிவம்:

சங்க காலத்தில் மன்னரை அதிகாலையில் துயில் எழுப்புவதற்குப் பாடப்பெறும் இசைப்பாட்டு
"துயிலெடை நிலை' எனப்பட்டது. இதனைத் தொல்காப்பியர்,
""தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச்
சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்'' (1037)

எனும் நூற்பாவில் சுட்டியுள்ளார். இந்நூற்பாவிற்கு, "குற்றமற்ற நற்புகழைக் கருதியபடி உறங்கும் மன்னர்களை எழுப்புவதற்குச் சூதர்கள் பாடும் துயிலெடை நிலை' என்று விளக்கமளிப்பார் தமிழண்ணல். பின் இது "பள்ளியெழுச்சி' எனப்பட்டது. இத்துயிலெடை நிலை பற்றி பன்னிரு பாட்டியலும் ("கண்படை மன்னவா முன்னர்த் தண்பத') மன்னனின் துயிலெடை நிலைக்கு இலக்கணம் வகுத்துக் கூறியுள்ளது. இவ்வாறு ஒரு காலத்தில் மன்னர்களைப் பாடிய இலக்கிய வகைமையானது பின்னர் இறைவனின் புகழையும், பெருமையையும் போற்றும் விதமாகவும்; அவனைத் துயிலினின்றும் எழுப்பும் விதமாகவும் பெயர் மாற்றம் பெற்று "திருப்பள்ளியெழுச்சி' ஆயிற்று.

திருப்பள்ளியெழுச்சின் இரு நிலைகள்:

திருப்பள்ளியெழுச்சியில் இரு நிலைகள் உள்ளன. முதல் நிலை நம் சிரநடுவில் இருக்கும் இறைவனை உணர்ந்து அவரை எழுப்பிக் கொள்வது. இம்
முதல் நிலையை மாணிக்கவாசகர் போன்ற ஞானிகள் பெற்று அனுபவித்துள்ளனர். அவர்கள் தூல உடம்பில் இருந்த வரையில் இந்த இறை இன்பத்தை அனுபவித்து வந்திருக்கிறார்கள். அவர் தூல உடம்பு மறைந்தவுடன் அவர்கள் பெற்றிருந்த இறை இன்பமும் அவர்கள் தூல உடம்போடு போய்விடுகிறது.
இரண்டாவது நிலை, நம் சிரநடுவில் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சிரநடுவில் இருந்து வெளிப்பட்டு, அனகமாக விரிந்து நிலைத்த இன்பத்தைத் தருவது. இதை மிக விரிவாக விளக்கியுள்ளார் சுவாமி சரவணானந்தா (திருப்பள்ளியெழுச்சி உரை).

மணிவாசகரின் மெய்யியல் யோக சாதனை:

திருப்பள்ளியெழுச்சி மூலம் மணிவாசகர் நிகழ்த்திய யோக சாதனை குறித்த சுவாமி சரவணானந்தாவின் விளக்கம் வருமாறு:
""ஒவ்வொரு மனிதனின் சிரநடுவிலும் இறைவன் ஒளி வடிவமாய் இருக்கிறான். அங்கு இறைவன் இருந்து அந்த மனிதனை இயக்கி வருகிறார் என்ற உண்மையை மனிதன் உணராமல் செயல்பட்டு வருகிறான். இதனால் மனிதனின் சிரநடுவில் இறைவன் இருந்தாலும், அவனால் உணரப்படாமல் இருப்பதால் இறைவனின் அருட்செயல் வெளிப்படாமலேயே, அவன் சிரநடுவிலேயே அடைபட்டுக்கிடக்கிறது. சிரநடுவில் அடைபட்டு இருக்கும் இறைவனை எழுப்பி அவன் அருளைப் பெறுவதற்காகவே, மாணிக்கவாசகரும் திருஅருட் பிரகாச வள்ளலாரும் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். மாணிக்கவாசகர் தம் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களின் மூலமாகத் தம் சிரநடுவில் இருக்கும் இறைவனை எழுப்பி, அவன் அருளைப் பெற்று அவனுடனேயே கலந்துவிடுகிறார்''.
 இதுவே மணிவாசகர் செய்த முதல் தெய்வீகப் புரட்சியாகும். இத்தகைய யோகத் தத்துவத்தை- நுட்பத்தை இப்பள்ளியெழுச்சியில் மணிவாசகர் அருளிச் செய்துள்ளார்.

அருள் அகவிழிப்பும் அனுபவமும்:

மணிவாசகரின் அகவிழிப்பு குறித்த சுவாமி சரவணானந்தாவின் விளக்கம் வருமாறு: ""வெளியே நாம் காண்பது பூத ஆகாயம். நம் சிரநடுவில் இருப்பது பரம ஆகாயம். இங்குள்ள திருச்சிற்றம்பலத்தின் அருள் அகநிலை அனுபவத்தை மாணிக்கவாசகர் சொல்கிறார். இந்த அருள் வாசகமே திருவாசகம்.

திருவாசகத்தின் பொருள் ஒவ்வொருவரும் அவரவர் பெறுகின்ற அருள் அக அனுபவத்துக்கு ஏற்ப விளங்குகிறது. அருள் அகவிழிப்பை உண்டுபண்ணுவதான் மாணிக்கவாசகரின் திருப்பள்ளியெழுச்சி.
திருப்பள்ளியெழுச்சி பாடிய இடம் திருப்பெருந்துறை. இப்போது இது ஆவுடையார்கோயில் எனப்படுகிறது. இங்குதான் ஆளுடைய அடிகளான திருவாதவூரர் குருந்த மரத்தடியில் குருவாகத் தோன்றி இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். இது புற உலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி. திருப்பெருந்துறையும் அந்தக் குருந்த மரத்தடியில் குருவாக வந்த இறைவனிடம் தீட்சை பெற்ற திருவாதவூரரும், அவர் பாடிய திருப்பள்ளியெழுச்சியும் அருள் அக அனுபவத்திற்கு ஆக்கம் தருபவை. இந்த அருள் அக அனுபவத்தையே ""நாடும் பெருந்துறை நான் கண்டு கொண்டபின் கூடும் சிவனது கொய் மலர் சேவடி'' எனக் குறிப்பிட்டுள்ளார் திருமூலர்.
திருப்பெருந்துறை என்பது நம் சிரநடுவில் இருக்கும் கடவுட்ஜோதி நிலையம். இதைப் பிரமரந்திரப் பெருவெளி என்று ஞான யோகிகள் சொல்வார்கள். இங்குள்ள ஆன்ம பீடத்தில் உருவத்துடன் கூடிய பூதலிங்கம் இல்லை. ஆன்ம நாதரே அருவமாக இருக்கிறார். இந்த உண்மையைக் குறிக்கவே, ஆவுடையார் கோயிலில் லிங்கத்தின் பீடமான ஆவுடை மட்டுமே அமைத்திருக்கின்றனர். அதன் மீது லிங்கம் அமைக்கப்படவில்லை. திருப்பெருந்துறையில் பாடப்படும் திருப்பள்ளியெழுச்சி எல்லோருக்கும் அகவிழிப்பை உண்டு பண்ணும்; அருள் ஆற்றலை அடைந்திடச் செய்யும்''
இவ்வாறு திருப்பள்ளியெழுச்சிப் பாடி இறைவனை வழிபடுவதன் மூலம் மக்கள், கடவுள் பண்பைப் பெறுகின்றனர்.மனிதப் பிறவியின் குறிக்கோளே எல்லா உயிர்களுக்கும் தொண்டு செய்து வாழ்வதும் இறைவனைக் கண்டு அனுபவிப்பதுமாகும். இறைவன் காட்டும் உண்மைகளை உணர்ந்து அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதுதான் திருப்பள்ளியெழுச்சிப் பாடிப் பரவுவதின் குறிக்கோளாகும்.
தம் சிரநடுவில் இருக்கும் இறைவனை ஞான மார்க்கத்தின் மூலமாகக் கண்டு அனுபவித்தவர் "அறிவாற் சிவமான' மாணிக்கவாசகர். சங்க காலத்தில் அரண்மனையில் மன்னர்களுக்காகப் பாடப்பட்ட "துயிலெடை நிலை' என்னும் "பள்ளியெழுச்சியை' முதன் முதலாக இறைவனுக்கான "திரு'ப்பள்ளியெழுச்சியாகப் பாடிப் புரட்சி செய்தவர் மணிவாசகர் ஒருவரே! இவரின் திருப்பள்ளியெழுச்சி இலக்கியத்தை அடியொற்றியே பிற்காலத்தில் பல பள்ளியெழுச்சிகள் உருவாயின. அவ்வகையில், மணிவாசகரே முதல்வராகவும் முன்னோடியாகவும் திகழ்கிறார்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com