சம்பந்தர் அருந்தமிழ்!

தலைவன் - தலைவி இணை பிரியாதவர்கள். ஒருநாள் தலைவன் கல்வியின் பொருட்டு வெளியூர் செல்ல விரும்பினான். தலைவன் பொருள்தேட வெளியூர் செல்ல விரும்பினால், தலைவி அனுமதி தரமாட்டாள்.
சம்பந்தர் அருந்தமிழ்!

தலைவன் - தலைவி இணை பிரியாதவர்கள். ஒருநாள் தலைவன் கல்வியின் பொருட்டு வெளியூர் செல்ல விரும்பினான். தலைவன் பொருள்தேட வெளியூர் செல்ல விரும்பினால், தலைவி அனுமதி தரமாட்டாள். ஆனால், கல்வி மிக உயர்ந்தது; அதைப் பயில தன் கணவன் விரும்புகிறான் என்று உணர்ந்து, அவள் அனுமதி தந்து, தன் அருமைத் தலைவனுக்கு ஒரு வேண்டுகோளும் விடுத்தாள்:
""எல்லோரும் விரும்பும் கல்வி மேல் உங்களுக்கு உண்மையாகவே ஆசை இருந்தால், தாங்கள் கல்வி கற்று உரைநடையில் ஏதும் சொல்ல வேண்டாம். கவிதை பாடக் கற்று வாருங்கள்; அதுவும் திருஞானசம்பந்தரைப் போல் கவிதை பாட வேண்டும்'' என்றாள். இதைக் கேட்ட தலைவன் சற்றே சிந்திக்கத்
தொடங்கினான்.
என்றுமே தன்னைச் சிறிதும் பிரிய விரும்பாத அன்புத் தலைவி இப்படிச் சொல்வதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று யூகித்தான். ஆம்... தலைவன் வெளியூர் சென்றுவிட்டால், தலைவி உயிர் தரித்திருக்கமாட்டாள். அவள் சாம்பல்தான் இருக்கும். அதனால், தலைவன் திருஞானசம்பந்தர் போல் கவிதை பாடக் கற்றுக்கொண்டு வந்தால், சம்பந்தர் வெந்த சாம்பலை, சுந்தர நங்கை பூம்பாவையை, ஆரா அமுதத் தமிழ் பாடி, வாரா உயிரை வருவித்ததைப் போல், தலைவனும் சம்பந்தரின் அருந்தமிழ் பாடி, இறந்த தலைவியின் உயிரை மீட்டு எழுப்பிவிடுவான் அன்றோ! பிறகு என்ன கவலை? முன்போல் இருவரும் இணைந்து வாழலாம் அல்லவா? எனவேதான் "சம்பந்தரைப் போல் கவிதை பாடக் கற்று வாருங்கள்' என வேண்டினாள் என்று அறிந்து மகிழ்ந்தான். பெண் மதியின் நுண்மதி கண்டு பேரானந்தம் உற்றான். அந்தத் தலைவன், "அண்ணா நாடு' என்று அழைக்கப்படும் திரு அண்ணாமலை சார்ந்த நாட்டை ஆளும் குறுநில மன்னன்.
தலைவியின் வேண்டுகோள் ஓர் அற்புதக் கவிதையாகவே மலர்ந்துள்ளது. அந்த நாளில் திருஞானசம்பந்தர் தேவாரம் நாடெங்கும் நனி பரந்திருந்தது எனவும் தெரிகிறது.

""ஆரும் விரும்பிய கல்விமேல்
ஆசை உமக்கு உளதாயின்
பாருற என்பு ஒரு பாவையாய்ப்
பாடிய பாவலர் போலவே
நீரும் அருந்தமிழ் செப்பிடும்
நீர்மை அறிந்து இவண் ஏகுவீர்
மேரு நெடுஞ்சிலை அத்தனார்
வீறு அருணாபுரி வெற்பரே''
(சைவ எல்லப்ப நாவலர்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com