தமிழ்ச் செல்வங்கள்: அளவு-1 எண்ணல் அளவு

எண்ணல் அளவை, எடுத்தல் அளவை, முகத்தல் அளவை, நீட்டல் அளவை என அளவை வகையை நான்காகப் பகுப்பர்.
தமிழ்ச் செல்வங்கள்: அளவு-1 எண்ணல் அளவு

எண்ணல் அளவை, எடுத்தல் அளவை, முகத்தல் அளவை, நீட்டல் அளவை என அளவை வகையை நான்காகப் பகுப்பர். ஒன்று, இரண்டு என எண்ணல் எப்படி உண்டாயது? அவ் எண்ணலுக்கு மூலமாம் கருவி எது? எனின், திகைப்பே ஏற்படும்! உடனே சொல்லத் தோன்றாது. ஊன்றி எண்ணின், தோன்றாமல் போகாது!
"எண்ணல் அளவை மூலம் நம் உடலே' எனின், வியப்பே தோன்றும். ""ஒன்று யாவர்க்கும் தலை ஒன்று, இரண்டு யாவர்க்கும் கண் இரண்டு'' என்பது யான் என் படிப்புத் தொடங்கிய நாளிலேயே, கேட்ட - பள்ளியில் முழங்கிய பாட்டு!
எல்லாப் பொறி புலன்களின் மூல வைப்பகமும், ஒப்பற்ற தலையேயாம். அத் தலையின் தலைமையே, "ஒன்று' என்று எண்ண வைத்தது. ""கண்ணிற் சிறந்த உறுப்பில்லை'' என்பது பழமொழி! கொஞ்சி மகிழ்வதும் "கண்ணே' என்பதுவே! ""கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாக் கண்!'' ""கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை'', ""கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம்'' அதனால், இரண்டு எனப் பிற உறுப்புகள் இருப்பினும், அதுவே முந்திக் கொண்டு இரண்டைத் தந்தது!
கண்ணில் தொடங்கிக் கீழே முக்கோண வடிவில் இறங்கும் உறுப்பு மூக்கு! இயற்கை முக்கோணம் மூக்கு! செயற்கை முக்கோணம் முப்பட்டைக் கண்ணாடி! "மூன்று' என்னும் எண்ணுக்கு அடி மூலம் மூக்கு! மூக்குக்குக் கீழே உள்ள உறுப்பு வாய்! அதன் உள்ளே இருக்கும் பொறி "நா' (அ) நாக்கு! மேலே ஏறும்; கீழே இறங்கும்; வலமும் ஆகும்; இடமும் ஆகும். முறத்தில் நாவுதல் போலவும், இக்கரைக்கும் அக்கரைக்கும் நாவாய் போவது போலவும் ஆகும் "நா' நான்கை வழங்கியது.
"செய்' "செய்' என்னும் கையை நோக்கினான்; விரிந்தும் சுருங்கியும் மடக்கியும் நீட்டியும் செயல்படும் விரல்களை எண்ணினான். ஐந்து ஆயது. இன்னும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து எனச் சிறுவர் மட்டுமல்லர்; வளர்ந்த பெரியரும் எண்ணக் காணலாம்! பழமையில் எண்ணிய எண் வழக்கின் எச்சமாக இன்றும் விளங்குவதும், விளக்குவதும் அது. உயிரிகள் ஓரறிவு முதலாக ஆறறிவு வரை வளர்நிலை உடையவை என்பதைப் பண்டே கண்டனர். மற்றை உயிரிகளுக்கு இல்லாத மன அறிவு மாந்தர்க்கே இருந்த சிறப்பை அறிந்து, "ஆறு' என்னும் எண்ணைக் கண்டனர்; கொண்டனர். மாந்தர்க்குரிய பருவங்களின் வளர்வைக் கண்டனர்.
தாயின் மணி வயிற்றில் இருந்து பிளந்து வந்தது அல்லது பிரிந்து வந்தது பிள்ளை. தவழத் தொடங்கியது குழந்தை. மேலே வளர்ந்து திரண்டது, குமரன் குமரி; மேலும் வலுவும் பொலிவும் பெற்றது, காளை கன்னி; மன அறத் தூய்மையராய் மண அறம் பூண்டது, வாலியம் (வாலியன், வாலை).
மேல் வளர்ந்தமை அல்லது மூத்தமை, முதுமை (முதியன், முதியள்). அதன் மேலும் மூப்படைதல், மூதாளர் (பெரு மூதாளன், பெரு மூதாட்டி). ஏழ் பருவம் எழுச்சி காட்டி ஏழ் (ஏழு) எனத் தந்தது!
உடலின் அடி முதல் முடிவரை, அவர் அகல நீட்டிய கைவிரலாம் சாண் அளவில் எட்டு இருந்தமை, "எட்டு' என்னும் எண் தந்தது. ""எண் சாண் உடம்புக்குத் தலையே தலைமை'', ""எறும்பும் தன் கையால் எண் சாண்'' என்பவை பழமொழிகள்! பின்னது புலமை வழக்கும் ஆயிற்று!
ஒன்பது என்னும் எண், பண்டை நாளில் "தொண்டு' எனப்பட்டது. தொண்டு என்னும் இடத்தை "ஒன்பது' கொண்டது. தொண்டும் ஒன்பதும் தொல்காப்பியத்தில் இடம் பெற்றன; பரிபாடலிலும் தொண்டு உண்டு! தொண்டாவது, துளை. "ஒன்பான் ஓட்டை' உடல் என்பது பொது வழக்கும், புலமை வழக்கும் ஆகும்.
கண், காது, மூக்கு, வெளியேற்று வாய் ஆயவை இரண்டு இரண்டாய் எட்டு; உள் வாங்கு வாய் ஒன்று; ஆகத் தொண்டால் (துளையால்) தொண்டு பிறந்தது!
ஒரு கை விரல் ஐந்து, இரு கை விரலாய் எண்ணி இணைக்கப் பத்தாயது. இன்னும் சீரிய வகை காட்டின் சிந்தனைச் சிறப்பே! கண் அளவாததைக் கை அளக்குமா என்பதும்,
விண்ணை நோக்கிக் கணிப்பார் கணியர் என்பதும் எண்ணத் தக்கவை.
- தொடர்வோம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com