இந்த வார கலாரசிகன்

ஆளுமைகள் ஒன்றன்பின் ஒன்றாக சரிந்து கொண்டிருக்கின்றன. இரா. செழியனும் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்.
இந்த வார கலாரசிகன்

ஆளுமைகள் ஒன்றன்பின் ஒன்றாக சரிந்து கொண்டிருக்கின்றன. இரா. செழியனும் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அவரது இறுதிச்சடங்கிற்கு வேலூர் சென்றிருந்தேன். அவரைப் போல, அவரது வாழ்க்கையைப் போல, அவரது இறுதி முடிவும் எளிமையாகவே கழிந்தது.
இரண்டு ஆளுமைகளை ஆவணப்படுத்த வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன். ஒருவர் அருட்செல்வர் நா. மகாலிங்கம். இன்னொருவர் இரா. செழியன். தமிழகத்தின் தேசிய, திராவிட அரசியல் நிகழ்வுகள் அனைத்தையும் நேரில் பார்த்த, கலந்து கொண்ட ஆளுமைகள் இருவரும். இரா. செழியன் குறித்த ஆவணப் படம் எடுக்க வேண்டும் என்கிற எனது யோசனைக்கு முழு ஆதரவும் தெரிவித்திருந்தார் வி.ஐ.டி. செல்வம். அப்படி இருந்தும் அதை செயல்படுத்த முடியாமல் போய்விட்டது.
இப்போதும்கூட, அவரது வாழ்க்கையை, அவரது ஆளுமையை, அவரது பங்களிப்புகளை ஆவணப்படுத்துவது ஒன்றும் சிரமமில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன். பொது வாழ்க்கையில் எளிமை, நேர்மை, தூய்மை ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்ந்த அரசியல் ஞானி இரா. செழியனுக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலி அதுவாகத்தான் இருக்கும்.


தோழர் ஜீவானந்தம் குறித்து எத்தனை எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அவற்றிலிருந்து சற்று வேறுபட்டு, தோழர் ஜீவாவுக்கும், செட்டிநாட்டிற்கும் இடையே உள்ள தொடர்புகளை ஆவணப்படுத்துவதாக அமைந்திருக்கிறது சேதுபதி எழுதியிருக்கும் "காரைக்குடியில் ஜீவா' என்கிற புத்தகம்.
நாஞ்சில் நாட்டு பூதப்பாண்டியில் பிறந்து, சென்னை பொது மருத்துவமனையில் முடிந்த தோழர் ஜீவானந்தத்தின் வாழ்க்கையில், அவர் செட்டிநாட்டில் கழித்த நாள்கள் மிகவும் முக்கியமானவை. வரலாற்றுச் சிறப்புமிக்கவை. காரைக்குடியை அடுத்த சிராவயலில் காந்தி பெயரில் அவர் தொடங்கி நடத்திய ஆசிரமத்துக்கு அவரைத் தேடி அண்ணல் காந்தியடிகளே நேரில் வந்து, "நீங்கள்தான் இந்த நாட்டின் சொத்து' என்று பாராட்டினார் என்றால், அந்த மனிதரின் பெருமையை என்னென்றுரைப்பது?
பள்ளி ஆசிரியராக செட்டிநாட்டுக்கு வந்த தோழர் ஜீவாவின் வாழ்க்கை, தடம் மாறியதும் அங்கேதான். காந்தியவாதியாகவும், சுயமரியாதைக்காரராகவும் இருந்த ஜீவாவை கம்யூனிஸ்ட்டாக மாற்றிய பெருமையும் செட்டிநாட்டைத்தான் சேரும். செட்டிநாடு அவரை கம்யூனிஸ்ட்டாக மட்டும் மாற்றவில்லை. காரைக்குடி கம்பன் கழகம் அவரை ஓர் இலக்கியவாதியாகவும் அடையாளம் காட்டி உலவவிட்டது. தமிழகத்தின் காற்று மண்டலமெங்கும் கலந்து நிறைகிறது ஜீவாவின் கம்பீரத் தமிழ்.
பராசக்தி திரைப்படம் மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நேரம். திரையுலகத்தைச் சேர்ந்த தோழர்கள் சிலர், பல ஆண்டுகளுக்கு முன்னால் ஜீவா எழுதிய சிறுகதை ஒன்றை அவரிடம் காட்டுகிறார்கள். பெயர்கள்தான் மாறியிருக்கிறதே தவிர, ஏறத்தாழ கதை ஒன்றுதான். அதை வைத்து வழக்குப் போடலாம் என்கிறார்கள் வந்தவர்கள். சிறிது நேர மெüனத்திற்குப் பிறகு ஜீவா கூறுகிறார்:
""25 ஆண்டுகளுக்கு முன்னால் பெரியார் வீட்டில் தங்கியிருந்து சமதர்ம, பகுத்தறிவுப் பிரசாரம் செய்த காலத்தில் எழுதிய இந்தக் கதை எனக்கே மறந்து போய்விட்டது. மக்கள் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை எழுதினேன். அப்போது சில நூறு பேர் இதைப் படித்திருக்கலாம். இப்போது, அதை வேறு யாரோ ஒருவர் தேடிப் பிடித்து, தூசு தட்டி, புதுப்பித்து, பல லட்சம் பேர் பார்க்கிறாற்போல், படமாக்கிவிட்டிருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு மாலையல்லவா போட வேண்டும். விட்டு விடுங்கள்''.
என்னவொரு தெளிந்த நேர்மையான சிந்தனை. இதுபோன்ற பல சம்பவங்களைத் தேடிப் பிடித்து "காரைக்குடியில் ஜீவா' புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார் சேதுபதி. அதுமட்டுமல்ல, தோழர் ஜீவா காரைக்குடி பகுதியில் ஆற்றிய உரைகளையும் இணைத்திருக்கிறார். தோழர் ஜீவா என்கிற இமாலய ஆளுமையை 273 பக்கங்களுக்குள் சுருக்கும் வித்தகத்தை சேதுபதி எங்கிருந்து கற்றார் என்கிற வியப்பு மேலிடுகிறது!

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து பணிநிறைவு பெற்றவர் முனைவர் அரங்க இராமலிங்கம். அவரைப் பற்றியும் அவரது நூல் பற்றியும் முன்பே ஓரிரு முறை பதிவு செய்திருக்கிறேன் என நினைவு. அவர், சங்க இலக்கியத்தில் மட்டுமல்ல, பக்தி இலக்கியங்களிலும் மிகவும் ஆழங்காற்பட்டவர்.
கடந்த 28 ஆண்டுகளாக தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருமந்திரம் முதலிய பக்திப் பாமாலைகள் குறித்து தொடர் சொற்பொழிவுகளும் நிகழ்த்தி வருகிறார். "ஒரே இடத்தில், அதே பார்வையாளர்களிடம் 108 நாள்கள் சொற்பொழிவு நிகழ்த்துவது என்பது எல்லோருக்கும் சாத்தியப்படாது. அவருக்கும் அலுத்துவிடும்; கேட்பவர்களுக்கும் அலுத்துவிடும். சொற்பொழிவில் அந்த அளவுக்குக் கருத்தாழமும், புதிய பல தகவல்களும், சுவாரஸ்யமாகப் பதிவு செய்யும் நயமும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில், கே.கே.நகர் விநாயகர் கோயில், புரசை கங்காதரேஸ்வரர் கோயில் என்று இதுவரை ஒன்பது 108 (9ல108) சொற்பொழிவுகளை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார். பத்தாவது 108ஐ மீண்டும் புரசை கங்காதரேஸ்வரர் கோயிலில் நிகழ்த்த இருக்கிறார்.
சமீபத்தில் சென்னை, புரசைவாக்கம் கங்காதரேஸ்வரர் கோயிலில் அவர் திங்கள் கிழமைதோறும் 108 நாள்கள் நிகழ்த்திய திருவாசகத் தொடர் பொற்பொழிவின் நிறைவு நாளுக்கு என்னை அழைத்திருந்தார். எதற்கும் கொடுப்பினை வேண்டும் என்று சொல்வார்கள். இந்தமுறை எனக்குக் கொடுத்து வைக்கவில்லை!

இரண்டாவது உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டுக்குச் சென்றிருந்தபோது, "கிழக்கு வாசல் உதயம்' இதழின் ஆசிரியர் உத்தம சோழன் கடந்த இரண்டு மூன்று மாத இதழ்களை என்னிடம் தந்தார். அதில் "நர்மதா' என்பவர் எழுதியிருந்த கவிதை என்னைச் சிந்திக்க வைத்தது.
ஆங்காங்கே சிறுத்தைகள் ஊருக்குள் நுழைந்துவிடுவதும், யானைகள் ரயில் தண்டவாளங்களிலும், மின் வேலிகளிலும் மடிவதும், கிராமங்களில் நுழைந்து மனிதர்களைத் தாக்குவதும் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம், ஏனைய உயிரினங்களின் வாழ்வாதாரங்களை மனிதன் அழித்துக் கொண்டிருப்பதுதான். அதை வெளிப்படுத்திய அந்தக் கவிதை இது:

இயற்கையை ரசிப்பதில்
ஏதும் தடையில்லை
அடுத்தவர் பங்கை
திருடவும் பதுக்கவும்
தொடங்கும்போதுதான்
தொலைகிறது மனிதம்.
இந்த பூமி யாருக்குச் சொந்தம்?
சுற்றுலா வந்துவிட்டு
சொந்தம் கொண்டாடல்
என்ன நியாயம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com