அறம் செய்ய விரும்பு

தொடக்கப் பள்ளியிலேயே சொல்லித்தரும் பாடம் ஒளவையின் ஆத்திசூடி. தளிர்க் குழந்தைகளால் எளிதில் உச்சரிக்கக் கூடியதாகவும் மனத்தில் பசுமையாகப் பதியக் கூடியதாகவும்
அறம் செய்ய விரும்பு

தொடக்கப் பள்ளியிலேயே சொல்லித்தரும் பாடம் ஒளவையின் ஆத்திசூடி. தளிர்க் குழந்தைகளால் எளிதில் உச்சரிக்கக் கூடியதாகவும் மனத்தில் பசுமையாகப் பதியக் கூடியதாகவும் அமைந்த பழங்கால அறநூல் அது. அதில் வரும் 'அறம் செய்ய விரும்பு' என்ற முதல் நெறி தெளிவாக இருந்தாலும் சில எதிர்வினைகளும் எழுகின்றன.
மேரி ஷெல்லியின் 'பிரேத மனிதன்' என்ற நூலை, புதுமைப்பித்தன் மொழிபெயர்த்து 1943 டிசம்பர் மாதத்தில் வெளியிட்டார். அந்த நூலை 'யாழ்ப்பாண ஈழகேசரி' என்ற வார இதழின் ஆசிரியர் அரியரத்தினத்திற்கு அன்பளிப்பாக வழங்கினார். அப்படி வழங்கும்போது, அந்நூலின் வெண்பகுதியில் 'அறம் செய்ய விரும்பு. ஆனால் செய்யாதே' என்றெழுதித் தந்தார். இந்த விவரம் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ஒரு கட்டுரையில் காணப்பட்டது. உண்மைப்பொருள் அறியாதவரல்லர் புதுமைப்பித்தன். நகைச்சுவைக்காக அவ்வாறு எழுதியிருக்கிறார். ஆனால், அதுபோல் சிலர் மேடைகளில் பேசி, பலரையும் சிரிக்க வைக்கின்றனர்.
ஒளவையார் 'அறம் செய்க' என்றுதானே சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லாமல் 'அறம் செய்ய விரும்பு' என்று ஏன் சொன்னார்? ஆத்திசூடியின் அந்த முதல்வரியே தவறாக இருக்க முடியுமா?
ஒரு செயலுக்கு முந்திய நிலை, செய்வதற்கான விருப்பம் ஆகும். விரும்பாதபோது அங்கு இயல்பான செயல் நிகழாது. ஒன்றை விரும்பிச் செய்யும் போதுதான் அச்செயல் நிறைவானதாக இருக்கும். தொடர்ந்து நிகழ்வதாக இருக்கும். அறம் செய்ய விரும்பினால், அந்த அறத்தை நாம் விரும்பிச் செய்வோம். அறத்தை விருப்பத்தோடு செய்ய வேண்டும் என்பதும் உள்ளார்ந்த பொருளாகும். மேலும், 'செய்ய' என்ற சொல்லைக் கவனியுங்கள். செய்வதற்காகத்தான் விரும்ப வேண்டும் என்ற பொருளையும் அச்சொல் உணர்த்தும். செயலை ஊக்குவிக்கும் வகையில்தான் 'அறம் செய்ய விரும்பு' என்று சொல்லியிருக்கிறார்.
கொடை கொடுக்க விருப்பம் இல்லாமலே கொடுப்பதுதான் தற்போதைய நடைமுறையாக உள்ளது. விருப்பம் இல்லாமல் செய்வது எல்லாம் அறம் ஆகாது. விரும்பிச் செய்கிற அறம் மட்டுமே, அன்பு மிகுந்ததாகவும், அருள் ஊட்டுவதாகவும் அமையும். தொடர்ந்து அறம் செய்யத் தூண்டுவதாக இருக்கும். அத்தகைய அறச் செயல்கள்தாம் கடைசிவரை கூடவரும். அதனால்தான் 'அறம் செய்ய விரும்பு' என்றார்.
ஒளவையார் காலத்திலும் வறுமை தாண்டவம் ஆடியிருக்கிறது. அதனால்தான் புலவர்கள், மன்னர்களிடம் கொடை பெற (புகழ்ந்து பாடி) ஓடியிருக்கிறார்கள். அரசர்களும் பரிசளித்து அவர்களுக்கு வாழ்வளித்திருக்கிறார்கள். ஒளவையாரும் பாடிப் பரிசில் பெறும் புலவராக இருந்திருப்பார். அதனால்தான் 'அறம் செய்ய விரும்பு' என்று தன் தேவையை உணர்ந்து அறிவுறுத்தி இருப்பார். பொதுநல உணர்வோடு வாழ்முறைக்கு இலக்கணமாக ஆத்திசூடியைப் படைக்கும்போது ஒளவையாருக்கு அவ்வாறு தன்னலம் இருக்க முடியாது.
இன்னொரு பார்வையும் இருக்கிறது. செல்வந்தர்கள் அறம் செய்ய முடியும். ஏழைகள், ஏதும் அற்றவர்கள் எப்படி அறம் செய்ய முடியும்? பிறருக்குக் கொடுத்து உதவ என்னிடம் பொருளில்லையே என்று ஏழைகள் குறுக வேண்டியதில்லை. அவர்கள் அவ்வாறு அறம் செய்ய விரும்பினாலே போதும் என்றாகிறது. பொருளாகக் கொடுப்பதுதான் அறம் என்றில்லை. சொல்லாலும் செயலாலும் மனத்தாலும் உதவுவதும் அறம்தான். சுருக்கமாகச் சொன்னால், எதுவெல்லாம் நல்லதோ அதுவெல்லாம் அறம் என்று கூறலாம். அதனால்தான் 'ஈவது விலக்கேல்' என்று தனியாகக் குறிப்பிட்டுள்ளார்.
'அறம் செய்க' என்பது செயல் சார்ந்தது. 'அறம் செய்ய விரும்புவது' மனம் சார்ந்தது. அறம் செய்யும் எண்ணத்தை மக்கள் மனங்களில் விதைக்கத்தான் 'அறம் செய்ய விரும்பு' என்று ஒளவையார் சொல்லியிருக்கிறார். அவ்வாறு அறம்செய்யும் மனப்பான்மை மக்களிடத்தில் இருந்தால் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க முடியும். யாருக்கும் தீங்கு இழைக்காத நிலை உருவாகும். அறம் செய்ய விரும்புகிறபோதே மனமாசு அகன்றோடும். சமுதாயத்தில் அறம் ஓங்கி 'உயர்ந்து' தழைக்கும். அறம் தழைக்கும்போது நீதியான சமூகம் மலரும். நல்ல மனப்பான்மையை விதைத்துவிட்டால் நல்ல செயல்கள் தாமாகவே விளையும். எனவே, அறம் செய்ய விரும்பினாலே அறம் செய்தல் நிகழும். அனைத்தும் அறிந்தே ஒளவையார் 'அறம் செய்ய விரும்பு' என்று கூறியுள்ளார்.
-கோ. மன்றவாணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com