இந்த வார  கலாரசிகன்

கோவையில் கவிஞர் வைரமுத்து, வள்ளலார் குறித்து "வெள்ளை வெளிச்சம்' என்கிற பெயரில் கொடீசியா அரங்கில் கட்டுரையாற்றியது முதல், தமிழ் இலக்கிய அமைப்புகளிடமிருந்தும்
இந்த வார  கலாரசிகன்

கோவையில் கவிஞர் வைரமுத்து, வள்ளலார் குறித்து "வெள்ளை வெளிச்சம்' என்கிற பெயரில் கொடீசியா அரங்கில் கட்டுரையாற்றியது முதல், தமிழ் இலக்கிய அமைப்புகளிடமிருந்தும், வாசகர்களிடமிருந்தும் "அடுத்து யாரைப் பற்றி எழுதப் போகிறார், எங்கே அந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறீர்கள்?' என்றெல்லாம் கேள்விகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
கவிஞர் வைரமுத்துவைப் பற்றி இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும். எதிலும் ஒரு துல்லியம், நேர்த்தி, முழுமை இருக்க வேண்டும் என்கிற பிடிவாதக்காரர் அவர். அது சினிமாவுக்குப் பாட்டு எழுதுவதாக இருந்தாலும் சரி, கட்டுரை எழுதுவதாக இருந்தாலும் சரி, அதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறையும் முனைப்பும் வியப்பில் ஆழ்த்துகிறது. வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி வைரமுத்துவின் முத்திரைப் பதிவு காணப்பட வேண்டும் என்கிற அவரது பொறுப்புணர்வு என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.
"தினமணி' நாளிதழின் நடுப்பக்கத்துக்கு அவர் கட்டுரை எழுதுகிறார் என்றால், அதற்காக அவர் படிக்கின்ற புத்தகங்கள், சேகரிக்கின்ற தரவுகள், சிந்திப்பதற்காக செலவழிக்கும் நாள்கள் என்பதை எல்லாம் பார்த்தால், முனைவர் பட்ட ஆய்வு செய்பவர்கள்கூட இந்த அளவுக்குப் பிரயத்தனப்படுவார்களா என்பது சந்தேகம்தான். எதிலும் முழுமையும், புதுமையும், ஆழமும் இருக்க வேண்டும் என்கிற அவரது உள்ளார்ந்த முனைப்புதான், அவரை இமாலய உயரத்துக்கு உயர்த்தி இருக்கிறது.
அடுத்த கட்டுரை தயாராகிக் கொண்டிருக்கிறது என்கிற தகவல் கவிஞரிடமிருந்து வந்துவிட்டது. அதை எங்கே அரங்கேற்றுவது என்பதும் முடிவாகிவிட்டது. இலக்கிய முன்னோடிகள் வரிசையில் அடுத்ததாக வர இருப்பவர், தமிழ்க் காப்பியமாம் சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகள். அரங்கேற இருப்பது தஞ்சையில். அரங்கேறும் நாள் ஜூலை 7 வெள்ளிக்கிழமை. இடம், தமிழ் அரசி மண்டபம்.
இப்போதே தேதியைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். தஞ்சையில் கூடுவோம்!


தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் நிறுவனம் அற்புதமான புதியதொரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. தமிழினத்தின் அடையாளமான தெய்வப் புலவர் திருவள்ளுவரின் ஐம்பொன் சிலைகளை ணீ, 1, 1ணீ, 2 அடிகளில் சலுகை விலையில் விற்பனை செய்ய முற்பட்டிருக்கிறது.
பூம்புகார் நிறுவனத்தைத் திருவள்ளுவர் சிலை செய்து விற்பனைக்குக் கொண்டு வருவது குறித்து சிந்திக்க வைத்ததில் "தினமணி' நாளிதழுக்கும் பங்கு உண்டு. மதுரையில் கவிஞர் வைரமுத்துவின் "வள்ளுவர் முதற்றே அறிவு' நிகழ்ச்சியின்போது அவருக்குத் திருவள்ளுவர் சிலையொன்றை அன்பளிப்பாக அளிக்க வேண்டும் என்று நாங்கள் ஏறி இறங்காத இடம் இல்லை. சென்னை, திருச்சி, தஞ்சை, மதுரையிலுள்ள பூம்புகார் விற்பனை நிலையங்களில்கூட அன்பளிப்பாகத் தருவதற்கேற்ற வள்ளுவர் சிலைகள் கிடைக்கவில்லை. எங்களது தேடல்தான் பூம்புகார் நிறுவனத்தை சிந்திக்க வைத்ததோ என்னவோ?
பூம்புகாரின் விற்பனை நிர்வாகச் செயல் அலுவலர் சுகி. இராஜேந்திரன், "இல்லம்தோறும் வள்ளுவர்' என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்த விழைவதாகக் கூறியபோது நானடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தமிழின், தமிழரின் அடையாளம் வள்ளுவப் பேராசான். ஒவ்வொரு வீட்டிலும் சுவாமி படங்களையும், வரவேற்பறை காட்சிப் பெட்டகத்தில் அலங்கார பொம்மைகளையும் வைத்திருப்பதுபோல, வள்ளுவப் பேராசானின் ஐம்பொன் சிலை ஒன்று கட்டாயம் இடம்பெற வேண்டும். அந்தச் சிலையைப் பார்க்கும்போது குழந்தைகளுக்குத் திருக்குறள் படிக்க ஆர்வம் ஏற்படும். வீடுகளில் மட்டுமல்ல, அலுவலகங்களில், பள்ளிக்கூடங்களில், வியாபார நிறுவனங்களில் என்று எங்கு பார்த்தாலும் வள்ளுவப் பேராசானின் சிலை காணப்பட வேண்டும்.
இதனால் வள்ளுவரும் திருக்குறளும் பரவும் என்பது மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான கைவினைக் கலைஞர்களின் வாழ்வும் மேம்படும். பூம்புகாரின் முயற்சி வெற்றிபெற வேண்டும். "இல்லம் தோறும் வள்ளுவர்' என்பது இயக்கமாக மாற வேண்டும்!


திங்கள்கிழமை சிலம்புச் செல்வரின் பிறந்தநாள். மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்பதுதான் சுருக்கமாக ம.பொ.சி. ஆனது. வறுமையில் உழன்ற குடும்பத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, முறையாகக் கல்வி கற்க வாய்ப்பில்லாமல், அச்சுக் கோக்கும் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, மிகப்பெரிய தலைவராக ம.பொ.சி. உருவான வரலாறு இன்றைய தலைமுறைக்குத் தெரியாமல் போயிருப்பது தமிழனின் துரதிர்ஷ்டம். வள்ளலாரும், வ.உ.சி.யும், பாரதியும், வீரபாண்டிய கட்டபொம்மனும், சிலப்பதிகாரமும் தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பேசப்படுவதற்கு ஐயா ம.பொ.சி. முக்கியமான காரணம் என்பது எங்களது தலைமுறையினருக்குத்தான் தெரியும்.
"தமிழகத்தில் பிற மொழியினர்' என்றோர் அற்புதமான புத்தகம் எழுதியிருக்கிறார் ம.பொ.சி. சாதிய அரசியலையும், பிற மொழி பேசும் தமிழருக்கு எதிராக எழுப்பப்படும் துவேஷம் குறித்தும் ம.பொ.சி. செய்திருக்கும் அற்புதமான ஆய்வு, அந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்தால் விளங்கும்.
""இந்நூலில் நான் எடுத்துக் காட்டியுள்ள சரித்திரச் சான்றுகளும் புள்ளிவிவரங்களும் அரசு ஆவணங்களிலிருந்தும், அறிஞர் பலர் எழுதிய நூல்களிலிருந்தும் எடுக்கப்பட்டனவாகும். இந்நூல் நடுநிலைமை உள்ளத்துடன் எழுதப்பட்டது என்பதனை மற்றொரு முறையும் வாசகர்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். தமிழ் மக்கள், குறிப்பாக, இளைஞர்கள் இந்நூலை ஒரு முறைக்குப் பலமுறை படித்துப் பார்க்க வேண்டுகிறேன். வாழ்க தமிழினம்! வாழ்க பாரதம்!'' என்று அந்தப் புத்தகத்தை முடித்திருப்பார்.
அவரது வேண்டுகோளை நானும் இப்போது மீண்டும் வலியுறுத்துகிறேன்.


நேற்று கவிக்கோ அப்துல் ரகுமானுக்கு சென்னை மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடந்த கவிதாஞ்சலி நிகழ்ச்சிக்கு வந்திருந்தார் இளம் கவிஞர் உமையவன். ஈரோடு சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ப. ராமசாமி என்கிற கவிஞர் உமையவன் ஏற்கெனவே ஆறு நூல்கள் படைத்தவர். இப்போது "வண்டிமாடு' என்கிற விவசாயம் சார்ந்த ஹைக்கூ நூல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதை அரங்கத்தில் என்னிடம் தந்தார். அதிலிருந்து ஒரு ஹைக்கூ.

அபார மகசூல்
விளைநிலத்தில்
வீடுகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com