நாட்டுப்புற இலக்கியத்தில் "இரக்கம்'!

ஒரு கர்ண பரம்பரைக் கதை. கர்ண மகாராஜாவைப் பற்றியதுதான். உலக இலக்கியத்திலேயே இரக்க குணத்திற்கு முன்னோடி அவர்தானே!
நாட்டுப்புற இலக்கியத்தில் "இரக்கம்'!

ஒரு கர்ண பரம்பரைக் கதை. கர்ண மகாராஜாவைப் பற்றியதுதான். உலக இலக்கியத்திலேயே இரக்க குணத்திற்கு முன்னோடி அவர்தானே!
துரியோதனன் தன் நண்பன் கர்ணனுக்குத் தானமாகக் கொடுத்த ஒரு சிறிய நாடுதான் அங்கதேசம். இருந்தும் கர்ணனின் புகழ் உலகையே அளந்தது. கர்ணனது புகழுக்குக் காரணம் அவனது இரக்க குணமே. யார் எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்பவனில்லை அவன். அவனது இரக்க குணத்தின், வள்ளல் தன்மையின் மாண்பை மகாபாரதத்தில் வரும் ஒரு நிகழ்ச்சி (இரக்க குணத்தில் சிறந்தவன் யார் என்பதை உலகுக்குக் காட்ட, கண்ணன், துரியோதனனைச் சோதித்த நிகழ்ச்சி).
இரக்க குணமோ, அரக்க குணமோ அதெல்லாம் பிறவிக் குணம்தானே. தானம் கொடுக்கிற மனம் தானாகவா வந்துவிடும்?
ஈவு, இரக்கம், தயை, கருணை, தயவு, தாட்சண்யம், பச்சாதாபம், பரிதாபம், பரிவு இன்னும் அன்பு என்ற ஒரு சொல்லுக்கு வேறு என்னென்ன பொருள்கள் உண்டோ, அவை அனைத்தும் நம் உடன் பிறந்தவையாக இருந்தால் அன்றி இந்த நற்செயலில் ஈடுபட முடியாது.
துரியோதனனால் முடியாத ஒரு செயல், எப்படி கர்ணனுக்குச் சாத்தியம் ஆயிற்று? இருவரிடமுமே செல்வம் இருந்தது, பலம் பல ரூபத்தில். ஆனால், அதை வாரிக் கொடுக்கும் மனம் கர்ணனுக்கு மட்டும்தான் இருந்தது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்கிறது நமது பழமொழிகளில் ஒன்று.
செல்வம் இருக்க வேண்டும். அதை வாரி வழங்க மனம் இருக்க வேண்டும். அதையும் காலத்தே செய்ய வேண்டும். இதுவே இரக்கம்.
தனக்கு மிஞ்சியதுதான் தர்மம் என்றால் அது இரக்கம் ஆகாது. என்னைவிட உனக்குத்தான் அது இப்போது தேவை என்று நினைத்து எவன் செயல்படுகிறானோ அவனே இரக்க குணம் கொண்டவன். இதனால்தான் கர்ணன் இன்றும் பேசப்படுகின்றான்.
கர்ணனைப் போல் கருணை உள்ளம் கொண்டவர்கள் யாரும் கேட்காமலேயே பலருக்கும் உதவும் வகையிலே பல செயல்களைச் செய்வர். அவற்றைப் பற்றிப் பட்டியலிடுகிறது ஒரு தாலாட்டுப் பாடல்:
சாலைகள் போட்டுவைப்பார்
சத்திரங்கள் கட்டிவைப்பார்
நடைவாவித் திருக்குளங்கள்
நல்ல தண்ணீர்க் கிணறெடுப்பார்
தவித்து வருபவர்க்குப்
தண்ணீர்ப் பந்தல் இட்டுவைப்பார்
பசித்து வருபவர்க்குப்
பாலமுதம் செய்துவைப்பார்
ஆலயங்கள் தோறும்
அணிமதில் கட்டிவைப்பார்
காணாத கோயிலுக்குக்
காணிக்கை அனுப்பிவைப்பார்.
கொப்பரையில் சோறும்
குடத்தில் இளநீரும்
பந்தம் கொளுத்திப்
பசித்தார் முகம் பார்த்து
அந்த நகர்ச் சோலையிலே
அமுதிடுவார் பாலகனே!
"தாயிற் சிறந்ததொரு கோயிலுமில்லை' என்கிறது ஒரு பழமொழி. கோயில் கட்டிக் கும்பிடப்பட வேண்டியவள் தாய் என்கிறது இன்னொரு பழமொழி.
ஏன் தாய்க்கு மட்டும் இவ்வளவு சிறப்பு? அவளைப்போல் ஓர் ஆசிரியர் இந்த ஈரேழு உலகத்திலும் கிடைக்க மாட்டாள் என்பதால்தான். தாய் தன் சேய்க்குத் தன் முலைப்பாலோடு பெரிதும் பாராட்டப்பட வேண்டிய இரக்க குணத்தையும் அல்லவா ஊட்டுகின்றாள்.
இரக்க குணம் மட்டும் இருந்தால் போதாது... அந்தக் குணத்தை எப்படியெல்லாம் காட்டலாம் என்று உபதேசிப்பதோடு, யாரிடம் அதைக் காட்ட வேண்டும் என்றல்லவா கூறுகிறாள். பந்தம் கொளுத்திப் பசித்தார் முகம் பார்த்து.... அமுதிடுவார் என்று சொல்லி, பாத்திரம் அறிந்து கொடுக்கும் கலையையும் அல்லவா அழகாகச் சொல்லிக் கொடுக்கிறாள்.
கொடுக்க வேண்டும்; பாத்திரம் அறிந்து கொடுக்க வேண்டும். அதையும் உடனே கொடுக்க வேண்டும் என்பதே இரக்கம் என்ற சொல்லுக்கு எழுதப்படாத இலக்கணம்.
ஒரு நாள் கர்ண மகாராஜா தன் அரண்மனைத் தோட்டத்தில் உட்கார்ந்து எண்ணெய்த் தேய்த்துத் தலை குளிக்கத் தயாரானார். வேலையாள் ஒருவன் ஒரு தங்கக் கிண்ணத்தில் எண்ணெய் கொண்டு வந்து கொடுக்க, அதைத் தனது இடது கையில் ஏந்தியபடி குளிப்பதற்குமுன் சொல்லப்பட வேண்டிய மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். சொல்லி முடிப்பதற்குள் இன்னொரு வேலையாள் ஓடி வந்து மகாராஜாவிடம், பஞ்சத்தில் அடிபட்ட பரதேசி போல் தோற்றமளிக்கும் ஒருவர் தங்களை உடனே காண வேண்டும் என்கிறார் என்று சொல்ல, கர்ணன் அவரை அழைத்து வரச் சொன்னார்.
பரதேசியும் வந்து சொல்லிமாளாத தன் துயரங்களையெல்லாம் சொல்லி அழ, கர்ணனும் தனது இடது கையில் இருந்த தங்கக் கிண்ணத்தை எண்ணெயோடு கொடுத்து, பெரியவரே இதை விற்று உங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ளுங்கள், என்றார்.
அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக நின்றிருந்த பரதேசி உள்ளம் குளிர்ந்துபோய், கர்ணனின் புகழ்பாடிப் பாராட்டு மழையில் நனைத்துவிட்டுப் போய்விட்டார்.
உள்ளே சென்று வேறொரு கிண்ணத்தில் எண்ணெய் எடுத்து வந்த வேலையாள் கர்ணனிடம், ""ஐயா! கருணை குணத்தின் மறு உருவே! கொடை கொடுப்பதற்கு நம் வழக்கப்படி வலது கையை அல்லவா உபயோகிப்போம். நீங்களோ அந்தப் பரதேசிக்கு இடது கையால் அல்லவோ கொடுத்தீர்கள். காரணத்தை அடியேன் அறிந்து கொள்ளலாமா?'' என்று வினவினான்.
கர்ண மகாராஜாவும் சிரித்துக்கொண்டே, ""அந்தப் பரதேசி இரக்கத்திற்கு உரியவன். கொடைக்குத் தகுதியானவன் என்று என் மனம் எனக்குச் சொன்ன உடனே இடது கையில் இருந்த தங்கக் கிண்ணத்தை எண்ணெய்யோடு அப்படியே கொடுத்தது உண்மைதான். அப்படி நான் கொடுத்தது நம் வழக்கத்துக்கு மாறானதுதான். இருந்தும் கிண்ணத்தை இடது கையிலிருந்து வலது கைக்கு மாற்றும் நேரத்தில் என் மனம் தடுமாறிப் போய்த் தங்கக் கிண்ணத்திற்குப் பதிலாகத் தரம் குறைந்த வேறு எதையாவது கொடுக்கச் சொல்லி விடுமோ என்ற எண்ணம் எழுந்து விட்டால், பாவம் அந்தப் பரதேசி... கடைசி காலத்திலாவது சற்று வசதியாக வாழ்ந்து விட்டுப் போகட்டுமே'' என்று பதிலளித்தார்.
மனம் ஒரு கள்ளுண்ட குரங்கு அல்லவா? இலக்கியமே மனித
மனத்தின் பிரதிபலிப்புத்தானே. ஏட்டில் எழுதப்படாத இலக்கியம் மனித மனத்தைப் பல்வேறு கோணங்களில் காட்டத்தானே செய்யும். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது என்கிறதே ஒரு பழமொழி. இதற்குக் காரணகர்த்தா இந்தக் கர்ணனின் கதையாகவும் இருக்கலாம்.
எது எப்படியோ கர்ண பரம்பரைக் கதைகள் பல இரக்க குணத்தைக் கண்ணாடிக் குடுவையில் இட்டு வண்ணம் எதுவும் பூசாமல் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com