இந்த வார கலாரசிகன்

மறைந்தும் வாழ்வது என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில பேருக்குத்தான் வாய்க்கும். சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் அரங்கில் கடந்த புதன்கிழமை நடந்த "சுகி' சுப்பிரமணியனின் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டபோது "மறைந்தும் வாழ்வது' என்பதற்கான பொருள் எனக்கு முழுமையாகப் புலப்பட்டது.
இந்த வார கலாரசிகன்

மறைந்தும் வாழ்வது என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில பேருக்குத்தான் வாய்க்கும். சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் அரங்கில் கடந்த புதன்கிழமை நடந்த "சுகி' சுப்பிரமணியனின் நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டபோது "மறைந்தும் வாழ்வது' என்பதற்கான பொருள் எனக்கு முழுமையாகப் புலப்பட்டது.
வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்து ஓய்வுபெற்ற எழுத்தாளர் சுகி சுப்பிரமணியன் மறைந்து 31 ஆண்டுகள் பறந்தோடிவிட்டன.
அவரது நூற்றாண்டு விழாவை அவருடைய வழித்தோன்றல்கள் நடத்தினார்கள். அதற்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து அப்படியே மலைத்துப் போய்விட்டேன். அரங்கம் நிரம்பி வழிந்து வெளியிலும் பலர் நின்று கொண்டிருந்தார்கள் என்றால், அதைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை.
இந்தக் கூட்டம் சுகி சுப்பிரமணியனுக்காக வரவில்லை, அவருடைய மகன் சுகி சிவத்துக்காக வந்திருந்தது என்று யாராவது சொன்னால், அது அதைவிடச் சிறப்பு. "தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது'. "முக்தா' சீனிவாசன் வியந்ததுபோல, சுகி சுப்பிரமணியன் அமரராகாமல் நூறாண்டு வாழ்ந்திருந்து இந்தக் காட்சியைப் பார்த்திருந்தால் புளகாங்கிதம் அடைந்திருப்பார் -
"சுகி' என்கிற தனது புனைப்பெயரைத் தன் மகன் தக்கவைத்து சிகரம் தொட வைத்திருப்பதற்காக!
"சுகி' சுப்பிரமணியனின் பங்களிப்பு
மயக்கம்போட வைத்துவிடும். இரண்டா யிரத்துக்கும் அதிகமான வானொலி நாடகங்கள், 32 நாவல்கள், 8 சிறுகதைத் தொகுப்புகள், 8 நாடகங்கள், சிறுவருக்கான 9 நூல்கள் என்று பட்டியல் நீளும். வானொலி நாடகம் என்பது கடினமானது. முகபாவம், அங்க அசைவு எதுவும் இல்லாமல் கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளைக் குரலில் வெளிப்படுத்தி, வானொலியில் கேட்பவர்களின் மனத்திரையில் நாடகத்தைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. அந்த வித்தகத்தைக் கற்றுத் தேர்ந்தவர் சுகி சுப்பிரமணியன்.
அன்றைய நிகழ்ச்சியில் அரங்கத்தில் இருந்தவர்களில் அநேகம் பேர் குழந்தைகளாக, சிறுவர்களாக, இளைஞர்களாக சுகி சுப்பிரமணியத்தின் காட்டுப்பட்டிச் சத்திரம், சுபாஷ் வீடு உள்ளிட்ட நாடகங்களை வானொலியில் கேட்டு மகிழ்ந்த நினைவுகளைச் சுமந்து கொண்டிருந்தனர். மகன்கள் எம்.எஸ். பெருமாள், நம்பிராஜன், சுகி சிவம் ஆகியோரும், குடும்பத்தினரும் இப்படியொரு விழா எடுத்து நூற்றாண்டு கொண்டாடித் தங்கள் தந்தையைப் பெருமைப்படுத்திய பண்புக்கு நாம் தலை வணங்கியாக வேண்டும்.
விழாவின் நிறைவில் ராஜபாளையம் உமாசங்கர் இசையமைத்துப் பாடிய, கண்மணி ராசா எழுதிய "அப்பாவைப் பற்றிய பாடலும், அதைத் தொடர்ந்து "அப்பா' என்கிற தலைப்பில் சுகி சிவம் ஆற்றிய உரையும் மெய்சிலிர்க்க வைத்தன. அந்தப் பாடலையும், உரையையும் குறுந்தகடாக்கி எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் மாணவர்களுக்குப் போட்டுக் காட்ட வேண்டும். அப்பாவின் அருமை என்னவென்று இதைவிடச் சிறப்பாக யாரும் அடுத்த தலைமுறைக்கு விளக்கிவிட முடியாது.

மதுரையில் நடந்த கவிஞர் வைரமுத்துவின் "வள்ளுவர் முதற்றே அறிவு' நிகழ்ச்சியில் அவருக்கு வள்ளுவர் சிலை ஒன்றை அன்பளிப்பாகத் தரவேண்டும் என்று எனக்கு ஆசை மேலிட்டது. அதற்காகப் பூம்புகார், காதிபவன் என்று கைவினைப் பொருள் விற்பனை நிலையங்கள் ஒன்றுவிடாமல் ஏறி இறங்கினோம். மதுரையில் உள்ள காதிபவனத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கே நா.பெருமாள் எழுதிய "வாழும் தெய்வம் மகாத்மா' என்கிற புத்தகம் இருந்தது.
ஆச்சரியம் என்னவென்றால், யாருக்கு அன்பளிப்பு வாங்குவதற்காக நாங்கள் காதிபவனத்திற்குச் சென்றிருந்தோமோ, அவரே அந்தப் புத்தகத்துக்கு வாழ்த்துரை வழங்கியிருப்பதுதான். ""இன்றைய இளைஞர்கள் எந்தவொரு செய்தியையும் சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிய விரும்புகின்றனர். அவர்கள் இந்த நூலைப் படிப்பதன் மூலம் காந்தியின் கொள்கைகள், நம்பிக்கைகள், தத்துவங்கள் யாவற்றையும் எளிமையாகப் புரிந்துகொள்ள முடியும். அவ்வகையில் இந்நூலாசிரியரின் பணி பெரிதும் போற்றுதற்குரியது'' என்கிற கவிஞர் வைரமுத்துவின் பதிவு நறுக்குத் தெரித்தாற்போல இந்தப் புத்தகத்தின் சிறப்பை எடுத்துரைக்கிறது.
""அதிகாரத்திடம் எச்சரிக்கையாக இருங்கள். அதிகாரம் லஞ்ச ஊழலை உருவாக்குகிறது. அதன் ஆடம்பரத்திலும், பகட்டிலும் அகப்பட்டுக் கொள்ளாதீர்கள். இந்தியாவில் கிராமங்களில் உள்ள ஏழைகளுக்குச் சேவை செய்ய அதிகாரத்துக்கு வந்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்''...
""இந்தியா உண்மையான சுதந்திரம் அடைய வேண்டுமென்றால், இந்தியாவின் மூலமாக உலகமும் உண்மையான சுதந்திரம் அடைய வேண்டுமென்றால், இன்றோ நாளையோ ஓர் உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியதாக இருக்கும். அதாவது மக்கள் கிராமங்களில் வாழ வேண்டியிருக்குமேயொழிய மாடமாளிகைகளில் அல்ல. நகரங்களிலும், மாளிகைகளிலும் கோடிக்கணக்கான மக்கள், ஒருவரோடு ஒருவர் அமைதியாக வாழ முடியாது. அப்போது இவர்கள் இம்சையிலும், அசத்தியத்திலும் இடிபடுவதைத் தவிர வேறு வழி இருக்காது''...
""எனக்கு அதிகாரம் இருக்குமானால், மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் வாடிக்கொண்டிருக்கும்போது அரசாங்க மாளிகையில் விருந்துகள் நடத்தும் பழக்கத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பேன். அமைச்சர்களுக்கு அடக்கமான, சிறிய, ஆடம்பரம் இல்லாத வீடுகளை அளிப்பேன். அமைச்சர்களுக்கோ அல்லது காங்கிரஸ் ஆளுநர்களுக்கோ ஆயுதம் தாங்கிய மெய்க்காப்பாளர்களை நியமிக்க மாட்டேன். ஏனென்றால், இவர்கள் அஹிம்சையைக் கொள்கையாகக் கொண்டவர்கள். இதன் காரணமாக இவர்களில் சிலர் கொல்லப்பட்டாலும் அதற்காக நான் கவலைப்பட மாட்டேன்''
மேலே குறிப்பிட்டவற்றைக் கூறியிருப்பது அண்ணல் காந்தியடிகள். அதனால்தான் அவர் வாழும் தெய்வமாக இன்றும் உலகின் மனசாட்சியை உலுக்கிக் கொண்டிருக்கிறார். காந்திஜியின் அத்தனை பரிமாணங்களையும், அவர் குறித்த செய்திகளையும் எளிமையாக அனைவருக்கும் புரியும் விதத்தில் பதிவு செய்கிறது நா.பெருமாள் எழுதியிருக்கும் "வாழும் தெய்வம் மகாத்மா'!

தங்க நாற்கரச் சாலை வளர்ச்சியின் அறிகுறி என்பதையும், தேசத்திற்கு வாஜ்பாய் அரசின் மிகப்பெரிய கொடை என்பதையும் மறுப்பதற்கில்லை. ஒரு காலத்தில் ரயில் பாதைக்காகவும் மரங்கள் வெட்டப்பட்டிருக்கும்தான். ஆனாலும் கூட, நெடுஞ்சாலைகளில் காரில் பயணிக்கும் போதெல்லாம் இதற்காக எத்தனை மரங்கள் வெட்டப்பட்டிருக்கும் என்பதை நினைக்கும்போது மனது சங்கடப்படும். நாள்குறிப்பில் சக்தி இளங்கோ என்கிற கவிஞர் எழுதிய கவிதை ஒன்றைக் குறித்து வைத்திருந்தது நினைவுக்கு வருகிறது.

அனைத்து மரங்களையும்
வெட்டிச் சாய்த்துவிட்டு
அஞ்சலி செலுத்துவதற்காக
நான்குவழிச் சாலைகளின்
நடுவில்
அரளிப்பூச் செடிகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com