இந்த வார கலாரசிகன்

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 2011-இல் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒன்றைக் கூட்டியது.
இந்த வார கலாரசிகன்

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் 2011-இல் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒன்றைக் கூட்டியது. அதன் தொடர்ச்சியாக வருகிற ஜுன் 9, 10, 11 தேதிகளில், சென்னையில் 2-ஆவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு, "தினமணி' நாளிதழின் ஊடகத் தோழமையுடன் சென்னையில் நடக்க இருக்கிறது. சென்னை அடையாறு பாலத்தின் அருகில் உள்ள முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற இருக்கும் இந்த இரண்டாவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் கலந்துகொள்ள அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் பலர் வர இருக்கிறார்கள்.
மூன்று நாள் நடைபெற இருக்கும் இந்த மாநாட்டில் 12 அமர்வுகளில் "தாயகம் கடந்த தமிழ்' எனும் புலம் பெயர்ந்த அயலகத் தமிழ் இலக்கியங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தாய்த் தமிழக எழுத்தாளர்களுடன் அயலகத் தமிழ் எழுத்தாளர்கள் ஒன்றுகூடிக் கலந்துரையாட நல்லதொரு வாய்ப்பை இந்த மாநாடு ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நம்பலாம்.
நம்மைவிட அயலகத் தமிழர்கள்தான் அதிகமாக தமிழ் உணர்வுடன் செயல்படுகிறார்கள் என்பதும், கூடியவரை ஆங்கிலக் கலப்பில்லாமல் உரையாடுகிறார்கள் என்பதும் மறுக்க இயலாத உண்மை. ஆனால், அயலகத் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தாய்த் தமிழகத்தில் உரிய அங்கீகாரமோ, வரவேற்போ இல்லாமல் இருக்கும் அவலம் காணப்படுகிறது. இணையத்தில் பரவலாக இணைகின்ற அயலகத் தமிழர்கள், தாய்த்தமிழகத்தின் அச்சு, காட்சி ஊடகங்களில் இடம்பெறுவதே இல்லை.
இந்தக் குறை தீர்க்கப்பட்டு, உலகளாவிய அளவில் பரவிக் கிடக்கும் தமிழ்ச் சமூகத்தினர் ஒருங்கிணைந்து செயல்படும் காலம் விரைவிலேயே கைகூட வேண்டும். குஜராத், பஞ்சாப், வங்காளம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இது சாத்தியமாகிறபோது, நாம் மட்டும் உடலாலும், உணர்வாலும் ஒட்டும் உறவும் இல்லாமல் இருக்கிறோமே, அதற்கு ஒரு விடை தேடும் முயற்சிதான் சென்னையில் இந்த இரண்டாவது உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு கூட்டுவது என்கிற முயற்சி. அயலகத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் தாய்த் தமிழகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை
என்கிற குறையினைத் தீர்க்கும் வகையில் இந்த மாநாடு செயல்படும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த மாநாட்டில் பேராளர்களாகக் கலந்துகொள்ள ஜ்ற்ஜ்ஸ்ரீ2ண்ய்க்ண்ஹஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்கிற இணைய முகவரியில் ரூ.3,000 செலுத்திப் பதிவு செய்து கொள்ளலாம். பார்வையாளர்களுக்குக் கட்டணம் கிடையாது. இந்த முயற்சியில் "தினமணி' தன்னை இணைத்துக் கொள்கிறது என்பது மட்டுமல்ல, இதை சென்னையில் நடத்த வேண்டும் என்று வற்புறுத்தியதிலும் நமது பங்கு அதிகம். தில்லி தமிழ்ச் சங்கத்துடன் "தினமணி' இணைந்து நடத்திய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில், "தமிழால் இணைவோம், தமிழுக்காக இணைவோம்' என்று நாம் எழுப்பிய முழக்கத்தின் நீட்சிதான் இந்த உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு. மாநாட்டில் சந்திப்போம்!

தமிழக வரலாற்றில் மாயவரம் என்று அழைக்கப்படும் மயிலாடுதுறைக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் பகுதியாக இருந்தபோதும் சரி, மயிலாடுதுறை தனித்துவத்துடன் விளங்கிய பகுதியாகத்தான் இருந்தது. தஞ்சை மாவட்டம் பிரிக்கப்பட்டபோது நியாயமாகப் பார்த்தால், மயிலாடுதுறையைத் தலைநகராகக் கொண்டுதான் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். திருவாரூரை மாவட்டத் தலைநகரமாக்க வேண்டும் என்பதற்காகவே துண்டாடப்பட்டதுபோல, இப்போது திருவாரூர், நாகப்பட்டினம் என்று இரண்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
இதில் சோகம் என்னவென்றால், மயிலாடுதுறை பகுதி மக்கள், மாவட்டத் தலைநகரான நாகப்பட்டினத்துக்குச் செல்வதென்றால், புதுச்சேரிக்குட்பட்ட காரைக்கால் வழியாகவோ, அல்லது திருவாரூர் மாவட்டம் வழியாகவோதான் சென்றடைய முடியும். "தினமணி' நாளிதழின் நாகப்பட்டினம் பதிப்பு தொடங்கியபோது, இதுகுறித்து நான் குறிப்பிட்டு எழுதியிருந்தேன். தவறு திருத்தப்படாமல் தொடர்கிறது. மக்களின் அவதி கவனிக்கப்படாமல் உதாசீனப்படுத்தப்படுகிறது.
மயிலாடுதுறையைத் தலைநகராகக் கொண்டு மாவட்டம் உருவாக வேண்டும் என்று நீண்ட நாள்களாகப் போராடிக் கொண்டிருப்பவர் நண்பர் எழுத்தாளர் கோமல் அன்பரசன். என்னைச் சந்திக்க ஒருமுறை அலுவலகம் வந்தபோது எனக்குத் தந்த புத்தகம் "மாயூர யுத்தம்'. மயிலாடுதுறை குறித்த அத்தனை செய்திகளும், தகவல்களும் கட்டுரைகளாகத் தொகுக்கப்பட்டிருக்கும் அரிய ஆவணப் பதிவு இது. "காவிரி' என்கிற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் காவிரி டெல்டா பகுதிகளில் இவர் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்தும் பல மக்கள் நலப்பணிகளுக்கு, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இவருக்குப் பின்புலமாக இருந்து வருகின்றனர்.
"காவிரிக்கதிர்' என்கிற இதழில் நண்பர் கோமல் அன்பரசன் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். இதுபோல ஒவ்வோர் ஊருக்கும் ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டால், எவ்வளவு அற்புதமான ஆவணப் பதிவாக இருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கிறேன். (காவிரி குறித்த தொடர் கட்டுரை ஒன்றை "தினமணி' நாளிதழில் வெளியிட கோமல் அன்பரசன் என்னிடம் தந்திருக்கிறார். அது விரைவில் தொடராக வரவிருக்கிறது.)

ம.வளர்மதியை
ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் "பாவையர் மலர்' மாத இதழில் வெளிவந்திருக்கும் கவிதைகளில் ஒன்று தர்மபுரி சுபி.முருகன் (90951 67007) என்பவர் எழுதியிருக்கும் "தலையணை' என்கிற கவிதை.
"இந்த வாரம்' பகுதியில் வெளிவரும் கவிதைகளை எழுதிய கவிஞர்களின் தொடர்பு எண்ணையும் வெளியிட்டால் உடனே அழைத்துப் பாராட்ட முடியுமே என்று நிருபர் ஜெயபாண்டி மூலம் சொல்லி அனுப்பி இருக்கிறார் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மூத்த மார்க்சிஸ்ட் தலைவருமான மதுரை நன்மாறன். முடிந்தவரை முயற்சி செய்கிறேன்.

கிழிந்தும்
தைத்து தைத்து
வைத்திருந்த
அம்மாவின் ரேசன் சேலை

சுத்துப் பக்கம்
ஓட்டை விழுந்த
அண்ணாவின் கால் டவுசர்.

காலம் வந்ததும்
நடு வீட்டில்
குத்த வைச்ச போது
தாய்மாமன்
எடுத்துக்கொடுத்த
என் முதற் பாவாடை சட்டை

நைந்து போன
அப்பாவின் வேட்டி
என எதையும்
வெளியில்
போட மனமில்லாமல்
மனதிற்குள் மூட்டை கட்டி
தலையணையாக வைத்திருக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com