நின்னினும் நல்லன் அன்றே!

வெற்றியைப் போற்றுவதே உலக இயல்பு. தோல்வியைத் தூற்றுவது எங்குமுள்ள நடைமுறை. வெற்றியின் பெருமையும் தோல்வியின் சிறுமையும் தெளிவாக
நின்னினும் நல்லன் அன்றே!

வெற்றியைப் போற்றுவதே உலக இயல்பு. தோல்வியைத் தூற்றுவது எங்குமுள்ள நடைமுறை. வெற்றியின் பெருமையும் தோல்வியின் சிறுமையும் தெளிவாக அறிந்திருந்தும் வெண்ணிக்குயத்தியார் எனும் பெண்பாற் புலவர், வெற்றி பெற்ற கரிகாற் பெருவளத்தானைப் பாடி, அப்பாடலில் தோற்ற மன்னனான சேரமான் பெருஞ்சேரலாதனைப் போற்றியுள்ளார்.
சோழன் கரிகாலனுக்கும், சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும் வெண்ணிப் பறந்தலையில் பெரும் போர் நடந்தது. கரிகாலன் வெற்றி பெற்றான். அவன் விட்ட அம்பு, சேர மன்னனின் மார்பைத் துளைத்தது. முதுகை ஊடுருவிச் சென்றது. மார்பில் புண் அமைவது பெருமை சேர்க்கும். முதுகுப்புண் அவமானம் ஏற்கும். தோல்விக்காக வெட்கப்படாத சேரன், முதுகுப்புண் காரணமாக நாணம் கொண்டான், வேதனைப்பட்டான்.
"நாணுடைமை மாந்தன் சிறப்பு' என்றார் திருவள்ளுவர் (குறள்-1012) "நாணால் உயிர் துறப்பர்' என்றும் கூறினார் (குறள்-1017). அவமானம் நேர்ந்தால் உயிர் வாழாத மாந்தரின் ஒளியை (உயிருடன் இருக்கும்போது உள்ள பெருமையை) உலகு தொழும் என்றும் சொன்னார் (குறள்-970). எனவே வெண்ணிகுயத்தியார், நாணி வடக்கிருந்து உயிர் துறந்த சேரனைப் போற்றினார். கரிகாலனின் வெற்றியை உயர்த்திக் கூறி, பரிசு பெற அவர் விரும்பவில்லை. தோற்ற சேரனையே போற்றிப் பாடினார். வெற்றிக் களிப்பில் மிதந்து கொண்டிருந்த கரிகாலனைவிட சேரனே நல்லவன் என்று ஒப்பிட்டுச் சொன்னார்.
""வேந்தே! வெற்றிப் புகழ் ஒன்றே நீ பெற்றாய்; அதனை உனக்குத் தந்து, உன்னால் உண்டாகிய புறப்புண்ணுக்கு நாணி, வடக்கிருந்து பெறும் பெரும்புகழை அவன் எய்தினான்; அவன் நின்னினும் நல்லன் போலும்'' என நயம்படக் கூறியுள்ளது இப்புலவரின் புலமை நலத்தைப் புலப்படுத்துகிறது.
கரிகாலன் தனக்குத் தண்டனை தரக்கூடும் என்பதை உணர்ந்தும் அவர், அவனைத் தாழ்த்திப் பாடினார். தமிழனுக்குக் கள வெற்றியைவிட உள நாணமே - தன்மானமே உயர்ந்தது என்பதை வெளிப்படுத்தும் முறையில் அப்புலவர் பாடிய பாடல் இது:

""நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட உரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ!
சென்றமர்க் கடந்தநின் னாற்றல் தோன்ற
வென்றோய் நின்னினு நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் ணாணி வடக்கிருந் தோனே! (66)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com