இந்த வார கலாரசிகன்

மொழிகாத்தான் சாமி' குறித்தான வாசகர்களின் வரவேற்பும் பாராட்டுகளும் இன்றளவும் குறைந்தபாடில்லை.
இந்த வார கலாரசிகன்

மொழிகாத்தான் சாமி' குறித்தான வாசகர்களின் வரவேற்பும் பாராட்டுகளும் இன்றளவும் குறைந்தபாடில்லை. கல்லூரிப் பேராசிரியர்கள், ஏன், அரசியல் தலைவர்கள் என்று தமிழ்த் தாத்தா உ.வே.சா. கட்டுரைக்கு வந்ததுபோல இதற்கு முன்னால் இத்தனை அழைப்புகள் வந்ததில்லை. இனிமேல் உ.வே.சா.வை "தமிழ்த் தாத்தா' என்று அழைப்பது போய், எங்கள் "மொழிகாத்தான் சாமி' என்று வணங்கத் தொடங்கினாலும் வியப்படைவதற்கில்லை. 
கவிஞர் வைரமுத்து அடுத்தாற்போல எந்த இலக்கிய ஆளுமை குறித்து எப்பொழுது எழுதப்போகிறார் என்கிற பேரார்வம் எல்லா வாசகர்களையும் போல எனக்கும் எழுந்திருப்பதை மறைப்பதற்கில்லை. அது தொடர்பாக, அவரைத் தொலைபேசியில் அழைத்து உரையாடிக் கொண்டிருந்தேன், அடுத்தாற்போல, கவிப்பேரரசின் தமிழால் புகழாரம் சூட்டப்பட இருப்பது திருமூலர் என்பது மட்டும் தெரிந்தது.
எதை எடுத்துக் கொண்டாலும் அதற்காக அவர் செலவிடும் நேரமும் உழைப்பும் அர்ப்பணிப்பும் மலைப்பை ஏற்படுத்துகிறது. திருமந்திரத்தில் மூழ்கி முத்துக்களையும் வைரங்களையும் அள்ளத் தொடங்கியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து என்பதற்கு மேல் உங்களுடன் பகிர்ந்துகொள்ள என்னிடம் வேறு தகவல்கள் இல்லை. உங்களைப் போலவே நானும் எதிர்பார்ப்பில்...


பெங்களூரு சென்றிருந்தபோது, பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தி.கோ. தாமோதரன் என்னைச் சந்திக்க வந்திருந்தார். 1950-இல் தொடங்கப்பட்ட பெங்களூரு தமிழ்ச் சங்கம் தமிழகத்துக்கு வெளியே இயங்கும் இலக்கிய அமைப்புகளில் மிகவும் துடிப்புடனும் முனைப்புடனும் செயல்பட்டு வரும் அமைப்புகளில் ஒன்று. நூலகம், அரங்கம், தமிழ் வகுப்புகள், தமிழ் ஆராய்ச்சி மாணவர்கள் அங்கேயே தங்கி நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான வசதி என்று மிகச் சிறப்பாக செயல்படும் பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு இந்த முறை நேரில் செல்ல முடியாததில் எனக்கு சற்று வருத்தம்தான். 
இந்தச் சந்திப்பின்போது பெங்களூரு தமிழ்ச் சங்கம் ஆற்றிவரும் அரியதொரு பணி குறித்து அதன் தலைவர் தி.கோ. தாமோதரன் தெரிவித்தார். தமிழக அரசில் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் மாஃபா பாண்டியராஜன், இந்தி பிரசார சபா பாணியில் தமிழ் பிரசார சபை அமைக்கப்பட போவது குறித்து அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே அந்தப் பணியை பெங்களூரு தமிழ்ச் சங்கம் அவர்கள் வழியில் நடைமுறைப்படுத்துகிறது.
பெங்களூருவில் 23 இடங்களில் பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வழக்கமான உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து என்பதுபோல அல்லாமல் இவர்கள் கன்னட, ஆங்கில மொழிவழிக் கல்வி பயிலும் குழந்தைகள் தமிழ் கற்றுக்கொள்ள புதியதொரு வழிமுறையைப் பின்பற்றுகிறார்கள். மிகவும் எளிதான முறையில் வார்த்தைகளை அவர்களுக்குப் புரிய வைத்து, அதன் ஒலிவடிவைக் கற்றுக் கொடுத்து அதற்குப் பிறகு தினமணி நாளிதழில் அந்த வார்த்தைகள் எங்கெல்லாம் இடம்பெற்றிருக்கின்றன என்பதை அந்தக் குழந்தைகளை அடையாளம் காண வைக்கிறார்கள். இந்த முறையைப் பின்பற்றி மூன்று மாதங்களில் நாளிதழை எழுத்துக்கூட்டிப் படிக்கும் அளவுக்கு அந்தக் குழந்தைகள் தயார்படுத்தப்பட்டு விடுகின்றன.
தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பது குறித்து தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ. தாமோதரன் கவலை தெரிவித்தார். அதேபோல தமிழக அரசு இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடும் இலக்கிய அமைப்புகளுக்கு உதவித் தொகை வழங்கி உற்சாகப்படுத்தினால், அடுத்த தலைமுறையில் தாய்மொழி தெரியாத தமிழ்க் குழந்தைகள் இருக்க மாட்டார்கள் என்கிற தி.கோ. தாமோதரனின் கருத்தை நானும் வழி
மொழிகிறேன்.

காந்திஜி, முதன்முதலாக 1896-ஆம் ஆண்டு தமிழகத்திற்கு வந்தார். அவர்
கடைசி முறையாகத் தமிழகத்திற்கு விஜயம் செய்தது 1946-ஆம் ஆண்டு. இடைப்பட்ட அரைநூற்றாண்டு காலத்தில் பல முறை அவர் தமிழகம் வந்திருக்கிறார். எந்தெந்த ஆண்டுகளில் அவர் தமிழகத்திற்கு வந்தார்? எந்தெந்த ஊர்களுக்குப் பயணித்தார்? அங்கே அவர் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் என்னவெல்லாம் கூறினார் என்பதையெல்லாம் தெளிவாக, தேதிக் குறிப்புகளுடன் தமிழ்நாட்டில் காந்தி' என்கிற புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார் அ. ராமசாமி.
""இந்தியா முழுவதற்கும் பொதுவான ஒரு போராட்டத்தை எவ்வாறு தொடங்குவது என்பதில் விடை காண முடியாது குழம்பிக் கொண்டிருந்த அகிம்சை வீரருக்குத் தமிழகத்தில் ஒரு கனவு மூலம் விடை கிடைத்தது; மேல் அங்கியைக் கழற்றி எறிந்துவிட்டு அரை ஆடை உடுத்துத் தரித்திர நாராயணர்களுடன் அவர் முழு ஐக்கியமடைந்தது தமிழகத்தில்தான்; பிரிட்டனில் இருந்து வந்திருந்த பாராளுமன்றத் தூதுக்குழுவுடன் இந்திய சுதந்திரம் குறித்து காந்தியடிகள் பேச்சு நடத்தியது தமிழகத்தில்; முதன்முதலாக அவருக்கு தேசப்பிதா என்ற பட்டத்தை சூட்டியவர்கள் தமிழக மாணவர்கள். இவ்வாறு பல முதன்மைகள் நமக்கு உண்டு'' என்று தனது முன்னுரையில் ஆசிரியர் அ. ராமசாமி குறிப்பிட்டிருப்பதை மறுபதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.
1916-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் நாள் சென்னை கிறிஸ்துவக் கல்லூரி ஆண்டர்சன் மண்டபத்தில் "நமது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் தாய்மொழி பாட மொழியாக இருக்கலாமா?' என்பது பற்றி நடந்த விவாத அரங்குக்கு தலைமை வகித்தார் அண்ணல் காந்தியடிகள். "தாய்மொழி மூலம் கல்வி புகட்டுவதற்கு எதிராகக் கூறப்படும் வாதங்கள் எல்லாம் ஆதாரமோ அடிப்படையோ இல்லாதவை. நமது தாய்மொழி, ஆங்கிலத்தை போல முன்னேற்றமான நிலையில் இல்லையென்றால் அதில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது நமது கடமையல்லவா? தாய்மொழி வளராத வரை நாம் விரும்பும் சுயாட்சி ஒரு நாளும் கிட்டாது, என்று அவர் அன்று கூறிய கருத்து ஒரு நூற்றாண்டு காலத்திற்குப் பிறகு இன்றைக்கும் பொருத்தமாகவே இருக்கிறது. 
இதுபோன்று காந்திஜியுடன் தொடர்புகொண்ட அனைத்துத் தமிழ்நாட்டு நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்கிறார் அ.ராமசாமி. பல அரிய புகைப்படங்கள் இணைக்கப்பட்ட "தமிழ்நாட்டில் காந்தி' என்ற இந்த அரிய புத்தகம் ஒரு பொக்கிஷம். அக்டோபர் 2 வரும்போது அண்ணல் காந்தியடிகளின் நினைவும் வந்துவிடுகிறது.


இது யார் எழுதிய கவிதை என்று தெரியவில்லை. ஆனால், இன்றைய அவசர நகர வாழ்க்கையில் வேலைக்குப் போகும் தாய்மார்கள் பலருடைய அந்தரங்க அலறலை அழகாக வெளிப்படுத்துகிறது இந்தக் கவிதை.

ரசிக்க நேரமில்லையே.....
துள்ளி விளையாடும் மழலை,
அலுவலக அவசரத்தில் அம்மா!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com