இந்த வாரம் கலாரசிகன்

பெரியவர் சீனி.விசுவநாதன் தன்னிடம் இருந்த சில அரிய புத்தகங்களைத் தன்னால் இனிமேலும் பாதுகாக்க முடியாது என்பதால்
இந்த வாரம் கலாரசிகன்

பெரியவர் சீனி.விசுவநாதன் தன்னிடம் இருந்த சில அரிய புத்தகங்களைத் தன்னால் இனிமேலும் பாதுகாக்க முடியாது என்பதால் என்னிடம் தந்ததை முன்பொரு முறை பதிவு செய்திருந்தேன். பல அறிஞர்கள் தாங்கள் மிகவும் ரசித்துப் படித்து, பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்த புத்தகங்களை என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
முனைவர் தெ.ஞானசுந்தரம் தன்னிடம் இருந்த புத்தகங்களை சென்னை கொடுங்கையூரிலுள்ள சாய் விவேகானந்தா பள்ளிக்குக் கொடுத்து விட்டதாகக் கூறினார். இளங்குமரனாரின் புத்தகங்கள் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்துக்கும், இரா. செழியனின் புத்தகங்கள் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்துக்கும் தரப்பட்டிருக்கின்றன.
தினமணி கதிரில் "ஒன்ஸ்மோர்' தொடர் எழுதும் "கேசி' (கே.சிவராமன்), தன்னிடம் சேர்ந்துவிட்ட புத்தகங்களை என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும், மிகவும் ஆசைப்பட்டு, மிகுந்த சிரமத்துக்கு இடையிலும் விலை கொடுத்து வாங்கிப் படித்து, பத்திரப்படுத்திய அந்தப் புத்தகங்களைப் பழைய புத்தகக்காரரிடம் எடைக்குப் போடவும் மனம் ஏற்கவில்லை என்றும் கூறியபோது, என்னிடம் இருக்கும் புத்தகங்களுடன் அதுவும் இருக்கட்டுமே என்று கூறி எடுத்து வந்துவிட்டேன்.
எழுத்தாளர் கேசியின் வீட்டிலிருந்து எடுத்து வந்த புத்தகங்களில் ஒன்று "சென்னையின் வரலாறு படைத்த இல்லங்கள்' என்கிற புத்தகம். இதன் ஆசிரியரான வி.ஸ்ரீராம், "மதராஸ் மியூசிங்க்ஸ்', "ஸ்ருதி' ஆகிய ஆங்கிலப் பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருப்பவர். கலை,
இலக்கியம், கட்டடக்கலை, பாரம்பரிய சங்கீதம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
விசாலமான தோட்டங்களுடன் சென்னை நகரை அழகுபடுத்திய, கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்ட பல பிரம்மாண்டமான கட்டடங்கள், இப்போது தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன. அன்றைய சென்னை நகரின் அடையாளங்களாகவும், அதிசயங்களாகவும் இருந்த அந்த மாளிகைகளை (அப்படித்தான் அந்த வீடுகளை அழைக்க முடியும்), வருங்காலத் தலைமுறையினருக்காக ஆவணப்படுத்தி இருக்கிறார் வி.ஸ்ரீராம். அதைக் கோட்டோவியங்கள் மூலம் ஆவணப்படுத்தி வெளியிட்டிருக்கிறார் திருமதி. சந்திரா சங்கர்.
இன்று "போயஸ் தோட்டம்' என்று பரவலாக அறியப்படும் இடம் "போ' என்பவருக்கு சொந்தமானதாக இருந்தது. ஏறத்தாழ தேனாம்பேட்டை முழுவதுமே அவரது தோட்டம்தான். அதில் 1816-இல் ஒரு வீடு கட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து உருவானதுதான் இன்றைய போயஸ் தோட்டம் குடியிருப்புப் பகுதி. அதேபோல, சிவாஜி கணேசனின் "அன்னை இல்லம்', ஜார்ஜ் போக் என்பவரால் கட்டப்பட்டது. அவர் வசித்த சாலைக்கு அதனால்தான் போக் சாலை என்று பெயரிடப்பட்டது. டாக்டர் ராதாகிருஷ்ணனின் "கிரிஜா', சர் சி.பி.ராமசாமி ஐயரின் "தி க்ரோவ்' உள்ளிட்ட பல பிரமுகர்களின் வீடுகளையும் ஆவணப்படுத்தி இருக்கிறார் ஸ்ரீராம்.
இதில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பல வீடுகள் இப்போது இல்லை. எஞ்சி இருப்பதையும் நாம் இழந்து விடுவதற்கு முன்பு, ஒரு கட்டடச் சுற்றுலா நடத்திவிட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறேன். வி.ஸ்ரீராமுக்கும், திருமதி. சந்திரா சங்கருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள் சென்னைவாசிகள்!


நீண்டநாள் "தினமணி' வாசகர்களுக்குப் புலவர் மா.சின்னுவை நன்றாகவே தெரிந்திருக்கும். ஐராவதம் மகாதேவன் "தினமணி' நாளிதழின் ஆசிரியராக இருந்த காலம் தொட்டு, தொடர்ந்து தன்னை "தினமணி'யுடன் இணைத்துக் கொண்டிருப்பவர். அகவை 85 ஆனாலும்கூட இன்னும் இவரது இலக்கிய தாகம் தீர்ந்தபாடில்லை. நடமாடும் பல்கலைக்கழகமாக இருந்த தி.வே.கோபாலையரின் மாணவர் எனும்போது, புலவர் மா. சின்னுவின் ஆழங்காற்பட்ட தமிழ்ப்புலமை குறித்து வேறு எதுவும் சொல்ல வேண்டியதில்லை.
தமிழக அரசின் "தமிழ்ச் செம்மல்' விருது பெற்றிருக்கும் புலவர் மா.சின்னு கடந்த மே மாதம் எனக்கு மூன்று புத்தகங்களை அனுப்பித் தந்திருந்தார். அவற்றில் "சங்கப்பலகை' என்கிற புத்தகமும் இருந்தது. அதில் பெரும்பாலானவை தினமணி, தமிழ்மணி, தினமணி கதிர், தினமணி சுடர் ஆகியவற்றில் வெளிவந்தவை. தினமணி நாளிதழில் வெளிவந்த அவருடைய ஆசிரியர் பகுதிக் கடிதங்களும் அடக்கம்.
16-ஆம் நூற்றாண்டுக்குப் பின் தமிழ் இலக்கியம் தேங்கிவிட்டதா? என்ற கேள்விக்குத் "தமிழ்மணி'யில் இவர் செய்திருக்கும் பதிவும், "மாதவி பொருள் பறித்தாளா?' என்கிற கட்டுரையும் ஆழ்ந்த புரிதலை ஏற்படுத்துகின்றன.
"இளைஞர்களே! கேளுங்கள்', "சந்ததிக்குச் சரியான வாழ்வு', "சிலம்பில் சங்கத் தமிழ்', "குறளில் கலியின் மணம்' ஆகிய கட்டுரைகள், ஒருமுறைக்கு இருமுறை படிக்கத் தூண்டின. "சிலம்பில் சங்கத் தமிழ்' என்கிற கட்டுரையைச் சிறு நூலாகவே வெளியிடலாம்.
புலவர் மா. சின்னுவிடம் எனக்கு வியப்பை ஏற்படுத்திய தனித்துவம், இவருக்கு மேலைநாட்டு இலக்கியங்களிலும் புலமை இருக்கிறது என்பதுதான். "ஹோமர் காட்டும் சகுனங்கள்' என்றொரு கட்டுரை. ஷேக்ஸ்பியரின் "ஜூலியஸ் சீசர்' நாடகத்திலும், ஹோமரின் "ஒடிஸி' காவியத்திலும் "நிமித்திகன்' குறித்த பதிவுகளை எடுத்துக் காட்டுகிறார் புலவர் சின்னு.
அடுத்த முறை நாமக்கல் சென்றால் புலவர் சின்னுவை நேரில் சந்தித்து உரையாட வேண்டும் என்று எனது நாட்குறிப்பில் பதிவு செய்து கொண்டேன்.


எப்படித்தான் இவர்களால் இப்படி எழுதிக் குவிக்க முடிகிறதோ என்று என்னை வியக்க வைப்பவர்களில் வெ.இறையன்புவும் ஒருவர். அவர் எழுதிய புத்தகங்கள் சிலவற்றை எனக்கு அனுப்பியிருந்தார். ஒரே மூச்சில் ஒரு புத்தகத்தைப் படித்துவிட முடியும். அத்தனை புத்தகங்களையும் அப்படிப் படிக்க முடியாதே...
"பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்' என்பது அவரது கவிதைத் தொகுப்பு. அதிலிருந்த ஒரு கவிதை என்னைக் கவர்ந்தது. பகுத்தறிவு பேசுபவர்கள், சிலைகளை நிறுவுவது ஏன் என்கிற கேள்வி என்னை நீண்ட நாள்களாகவே உறுத்திக் கொண்டிருந்தது. அதைப் பிரதிபலிப்பதாக இருந்தது, "ஆத்திகமும் நாத்திகமும்' என்கிற கவிதை.

இங்கே
கற்கள் ஒன்றுதான்
உருவங்கள் மட்டும்
வெவ்வேறாக...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com