நெஞ்சப் பூசல்

தேரைத் திருப்புக என்றும், தேய்புரி பழங்கயிறு என்றும் பலவாறாகப் பிரிவுத்துயர் பேசப்படுவதை இலக்கிய ஆர்வலர்கள் அறிவர்.

தேரைத் திருப்புக என்றும், தேய்புரி பழங்கயிறு என்றும் பலவாறாகப் பிரிவுத்துயர் பேசப்படுவதை இலக்கிய ஆர்வலர்கள் அறிவர். பிரிவு ஏன் ஏற்படுகிறது? ஆறு காரணம் பற்றித் தலைவன் தலைவியைப் பிரிவதாக சங்க இலக்கியங்கள் சுட்டும். கல்வி, நாடு காவல், சந்து(தூது)செய்தல், வேந்தர்க்குத் துணை, பொருள் தேடல், பரத்தை நாட்டம் ஆகிய இன்றியமையாக் காரணங்களை இலக்கியங்கள் பட்டியலிடுகின்றன. இவை அனைத்துமே பெண்மையின் பாற்பட்டதாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், தொல்காப்பியம், ஆடவன் ஒருவனின் பிரிவுத் தவிப்பை இப்படிக் கூறுகிறது. 

ஆண்மையின் நெறிகளாக, "பெருமையும் உரனும் ஆடூஉ மேன' என தொல்காப்பியம் மொழிகிறது. பிரிவின் துயரால் தவிக்கும் இளைய ஆடவன் ஒருவனின் மனப்போராட்டத்தை, அதாவது, இன்பத்துக்கும் பொருளுக்கும் இடைப்பட்ட நெஞ்சப் பூசலை தொல்காப்பியம் பின்வருமாறு கூறுகிறது.

நாளது சின்மையும் இளமையது அருமையும் 
தாளான் பக்கமும் தகுதியது அமைதியும்
இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் 
அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் 
ஒன்றாப் பொருள்வரின் ஊர்கிய பாலினும் 

இந்த நெஞ்சப் பூசலை அனுபவித்த ஆரியங்காவல் என்ற இளைஞர் ஒருவர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க வந்தார். நல்ல தமிழ்ப் புலமையுடைய அவருக்கு தன் இளம் மனைவியைப் பிரிந்திருக்க மனமில்லை.பாடமும் கேட்டாக வேண்டும். என்ன செய்வது? இரவு நேரங்களில் கண்விழித்து ஒரு கவியை இயற்றியவாறே புலம்பினார். அது இவ்வாறு அமைந்தது.

விடவாளை வென்ற விழியாளை பூமியின் மேலதிர
நடவாளைப் பெண்கள்தம் நாயக மாமொரு நாயகத்தை 
மடவாளை என்னுள் வதிவாளை யின்ப வடிவைஎன் சொற்
கடவாளை யான் தெய்வ மேயென்று போயினிக் காண்பதுவே! 

இதையறிந்த பிள்ளையவர்கள் மாணவனின் நாட்டமறிந்து, அவரின் குடும்பத்தை வரவழைத்து, அவருக்கு ஏதுவாக நடந்து கொண்டாராம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com