இந்த வார கலாரசிகன்

தமிழ்த் தாத்தா உ.வே.சா. குறித்த கவிஞர் வைரமுத்துவின் "மொழிகாத்தான்' சாமி கட்டுரை அரங்கேற்று நிகழ்வில் உரையாற்றியபோது, ரவீந்திரநாத் தாகூர் உ.வே.சா.வை திருவல்லிக்கேணியில் அவரது "தியாகராஜர் விலாசம்'
இந்த வார கலாரசிகன்

தமிழ்த் தாத்தா உ.வே.சா. குறித்த கவிஞர் வைரமுத்துவின் "மொழிகாத்தான்' சாமி கட்டுரை அரங்கேற்று நிகழ்வில் உரையாற்றியபோது, ரவீந்திரநாத் தாகூர் உ.வே.சா.வை திருவல்லிக்கேணியில் அவரது "தியாகராஜர் விலாசம்' இல்லத்தில் சந்தித்தது குறித்தும், பனை ஓலைச் சுவடிகளைப் பார்த்து வியந்தது குறித்தும் குறிப்பிட்டிருந்தேன். உ.வே.சா. குறித்து அவரைப் பாராட்டி ரவீந்திரநாத் தாகூர் கவிதை ஒன்றை எழுதியதாகவும் குறிப்பிட்டேன். கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி கோதனம் உத்திராடம் அவர்கள் தமிழ்மணியில் எழுதிய "தமிழ்த் தாத்தாவும் இரு மகாகவிகளும்' என்ற கட்டுரையில் அந்தக் கவிதை பற்றிய விளக்கம் வெளிவந்திருந்ததை அப்போது நினைவுகூரத் தவறிவிட்டேன்.
ரவீந்திரநாத் தாகூர் உ.வே.சா.வின் பெரும் பணியைப் பார்த்து மலைத்துப்போய் கவிதை ஒன்றை எழுதி அதை அவருடைய நண்பர் டி.எஸ். ராமசாமி ஐயருக்கு அனுப்பியிருந்தார். அந்தக் கவிதையை மஞ்சரி இதழின் முன்னாள் ஆசிரியர் த.நா. சேனாதிபதி வங்கமொழியிலிருந்து தமிழாக்கம் செய்து பொருள் விளக்கம் எழுதியிருந்தார். அந்த வங்க மொழியிலான கவிதையும் அதன் பொருளுரையும் இங்கே தரப்படுகிறது. கோதனம் உத்திராடம் அவர்களுக்கு நன்றி.

ஆதிஜுகேர் ஆந்தாரே தாலபத்ரே ச்சிலோ
த்ராவிட தேசேர் புராதன கீர்த்தி...
úஸ காலேர் அகஸ்த்யேர் மதஏúஸ தோமார்மாகே...
ஆர் பாஞ்ச மஹா காவ்யோ மாஜ்ஜே
சிந்தாமணி, நூபுரகாதா, மணிமேகலா இத்யாதி
ஸம்சோதன கரே தாஹார் பத ஜுகலே
ஸமர்ப்பணகரிலே நா கிதுமி?
ஸங்கே ஸங்கே ஸங்ககால ஸாஹித்யகே
ஜ்யோத்ஸ்னாய் ஃபுடித நித்ய மல்லிகார்மத
சோபித கரிலே நாகிதுமி? தேமாகரிப்ரணாம்.

ஆதிகாலத்தில் பனையோலைச் சுவடியில் இருந்த திராவிட நாட்டின் அந்தப் புராதனப் பெருநிதி பேராசானே! உன்னால் அன்றோ வெளிப்பட்டது; அந்தக் காலத்து அகஸ்தியனைப் போல நீயன்றோ வந்து உன் அன்னையினைச் சிம்மாசனத்தில் பெருமதிப்புடன் வீற்றிருக்க வைத்தாய்; அம்மட்டோ! ஐம்பெருங் காப்பியங்களுள் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலானவற்றைப் பதிப்பித்துத் தமிழன்னையின் இணையடியில் சமர்ப்பித்தவர் நீ அன்றோ; சங்க இலக்கியத்தையும் நிலவில் மலர்ந்த முல்லை என ஒளிர வைத்தவரும் நீ அன்றோ; உன்னை வணங்குகிறேன்!


சென்னை தமிழ் இசைச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ரசிகமணி டி.கே.சி.யின் நெருங்கிய நண்பரும், தமிழ் இலக்கியத்தில் ஆழங்காற்பட்ட பண்டிதரும், கம்பனில் தோய்ந்து தோய்ந்து ரசிக்கும் ஆர்வலரும், சிறந்த பேச்சாளருமான நீதிபதி எஸ். மகராஜன் குறித்துப் புத்தகமல்ல, புத்தகங்களே எழுதலாம். தமிழ்நாடு சட்டத்துறை ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவராக இருந்து ஆங்கிலத்திலுள்ள நுட்பமான சட்டச் சொற்களுக்கெல்லாம் தமிழ்ச் சொற்களை உருவாக்கித் தந்த பெருமை அவருக்கு உண்டு.
நீதியரசர் மகராஜன் சட்டத்தை இலக்கியமாக்கியவர். இலக்கியத்தை சட்டமாக்கியவர் என்று, "ஆடத் தெரியாத கடவுள்' என்கிற புத்தகத்தின் அணிந்துரையில் கவிஞர் வைரமுத்து கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மை.
நீதிபதி எஸ். மகராஜனின் திருமகனார் எம். சந்திரசேகரன் எனக்கு மருத்துவர் மட்டுமல்ல, குடும்ப நண்பரும்கூட. பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் தன் தந்தையார் எஸ். மகராஜனின் படைப்புகளை எனக்குத் தந்து உதவியிருக்கிறார்.
நீதிபதி மகராஜன் எழுதியதைவிட உரையாற்றியதே அதிகம். வானொலியிலும் கம்பன் விழா மேடைகளிலும் அவர் ஆற்றிய உரைகள் பலவும் தொகுக்கப்பட்டுப் புத்தகமாகி இருக்கின்றன. அவருடைய கட்டுரைகளும் அதேபோல புத்தகமாக்கப்பட்டிருக்கின்றன.
"ஆடத் தெரியாத கடவுள்' என்கிற பெயரில் நீதிபதி எஸ். மகராஜனின் நூற்றாண்டு விழாவையொட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பட்ட அவருடைய படைப்புகளின் தொகுப்பு நான் இதற்கு முன்பு படித்ததுதான் என்றாலும் மீண்டும் ஒருமுறை படித்தேன். நீதிபதி எஸ். மகராஜனின் மேதைமை என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அவரது தனிப்பெருமை, ஷேக்ஸ்பியரின் கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்துத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதும், கம்பனை மொழிபெயர்த்து ஆங்கிலத்துக்கு அறிமுகப்படுத்தியதும்தான்.
நீதிபதி எஸ். மகராஜன் தமிழ்நாடு சட்டத்துறை ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவராக பணிபுரிந்த காலத்தில், "குற்ற விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சட்டச் சொல் அகராதி' ஆகிய நூல்கள் அவரது மேற்பார்வையில் வெளியிடப்பட்டன. அந்தப் பெரும் பணிக்காக அவரை எத்தனை பாராட்டினாலும் தகும்.


என்னை சந்திக்க வந்திருந்தார் வழக்குரைஞர் ப. பிச்சை. பிற்படுத்தப்பட்ட மீனவக் குடும்பத்தில் பிறந்த பிச்சை, முதுகலைப் பட்டமும் சட்டப் படிப்பும் படித்து மீன்வளத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி, ஓய்வுபெற்று, வழக்குரைஞராகவும் பணியாற்றி வருகிறார் என்று சொன்னால், அதற்குப் பின்னால் அந்த மனிதர் கடந்து வந்த சோதனைகளும் அனுபவித்த வேதனைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.
அரசுப் பணியில் இருந்தாலும்கூட அவர் ஆற்றிய சமுதாயப் பணிகள் அசாதாரணமானவை. தான் சார்ந்த மீனவ சமுதாயத்தினரின் மேம்பாட்டுக்கு அவர் தனது படிப்பையும் உழைப்பையும் செலவிட்டிருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அவர் பிறந்து, வளர்ந்து, வாழும் சென்னை, பட்டினப்பாக்கம் பகுதி ஆழிப்பேரலையால் தாக்கப்பட்டபோது அந்த மக்களுக்கு அவர் ஆற்றிய தொண்டுகள் ஏராளம் ஏராளம். "எனது வாழ்க்கைப் பயணம்' என்கிற அவரது தன் வரலாற்று நூலை படித்துப் பார்த்தபோது, வழக்குரைஞர் ப. பிச்சை இலக்கியத்திலும் ஆன்மிகத்திலும் ஆழங்காற்பட்டிருப்பது தெரிந்தது.
ப.பிச்சைக்கு திரு.வி.க.வின் பிறந்த நாளையொட்டிஷெனாய் நகர் திரு.வி.க. பேச்சுப் பயிலரங்கம், 2017-க்கான "தமிழ்ப் பெரியார்' விருது வழங்கி கெளரவித்திருக்கிறது. வாழ்த்துகள்.


முகநூலில் படித்து ரசித்த கவிதை இது:

மரங்களை வெட்டி
கதவு செய்துவிட்டு
இப்போது அதை
திறந்து வைத்து
காத்திருக்கிறோம்
காற்றுக்காக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com