குறுங்கோழியூர் கிழார் கூறும் சேரனின் ஆட்சித்திறன்!

ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். 
குறுங்கோழியூர் கிழார் கூறும் சேரனின் ஆட்சித்திறன்!

ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார். 
பசி, பிணி, பகை, அறியாமை இல்லாதிருத்தலே சிறந்த நாடு என்றும், அத்தகைய நாட்டை ஆள்பவனே சிறந்த அரசன் (குறள்.734) என்றும் போற்றப்படுகிறான்.
புறநானூற்றில், குறுங்கோழியூர்கிழார் என்னும் புலவர், யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்ற சேரமன்னனின் குடிச்சிறப்பையும் அவனது ஆட்சித்திறனையும் மிக அருமையாகப் பதிவு செய்துள்ளார். 
வெப்பம்: சேரனின் நாட்டு மக்கள் வெம்மையை (வெப்பத்தை) அறிந்ததில்லை. பகை இருந்தால்தானே வெம்மை வருவதற்கு. அவர்கள் சோறு சமைப்பதற்கான வெம்மை (நெருப்பு)யும் ஞாயிற்றின் வெம்மையும் மட்டுமே அறிந்த
வர்கள். 
ஆயுதங்கள்: சேர நாட்டு மக்கள் ஆயுதங்களுள் ஒன்றான வில்லையே அறியாதவர்கள். ஏனெனில் சேரனுக்குப் பகை அரசனே இல்லை. அவர்கள் அறிந்தது வானில் தோன்றும் வானவில் மட்டுமே. அதேபோல் எந்தப் போர்ப்படையும் அறிந்திலர். அவர்கள் அறிந்த ஒரே படை உழுபடை என்னும் "கலப்பை' மட்டும்தான்.
மண்ணை உண்பவர்: சேரன் மற்ற நாட்டு மண்ணை உண்பான் (மற்ற நாட்டு அரசரை வெற்றி கொண்டு அவர்கள் நாட்டைக் கைப்பற்றுவான்). இவன் நாட்டு மண்ணை யாராலும் உண்ண முடியாது (அதாவது வெற்றி கொள்ள முடியாது); ஒருசிலரால் மட்டுமே உண்ண முடியும். அவர்கள் யார் தெரியுமா? சேர நாட்டிலிருக்கும் கர்ப்பமுற்ற பெண்கள் மட்டுமே அவனது மண்ணை உண்ண முடியும்.
நிமித்தங்கள்: சேரனது குடிமக்கள் எந்த ஒரு மூடநம்பிக்கைகளையும், நிமித்தங்களையும் நம்புவதில்லை. பொதுவாக ஒரு நாட்டிலுள்ள பறவைகள் வேறிடம் சென்றால் தீய நிமித்தம் என்றும், புதிய பறவைகள் அவ்விடம் வந்தால் நல்ல நிமித்தம் என்றும் கூறுவர். ஆனால், சேரனது குடிமக்களுக்குப் பறவைகள் வந்தாலும் போனாலும் அதைப்பற்றி கவலையில்லை. ஏனெனில், மன்னன் அத்தகைய சிறப்புமிக்கவன். மூடநம்பிக்கைகளைக் களைவதற்குப் போராடிவரும் இக்காலத்தில், மூடநம்பிக்கைகளை முற்றிலும் நீக்கிவிட்டு வாழ்ந்த சேரனது குடி, பெருங்குடியாகும். 
ஆதுலர் சாலை: முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள், ஆதரவற்றோர், நோய்வயப்பட்டோர் போன்றோரை பராமரிக்கும் இல்லங்கள் நம் காலத்தில்தான் உள்ளன என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இவையெல்லாம் சேரனது நாட்டிலும் இருந்துள்ளன என்பது ஓர் அரிய இலக்கியப் பதிவாகும். கண் பார்வையற்றோர், காது கேளாதவர், வாய் பேசமுடியாதவர், கால், கை முடமானவர் போன்ற மாற்றுத் திறனாளிகளைப் பராமரிப்பதற்குத் தனியாக இடங்கள் உண்டு. மேலும் முதியோர், ஆதரவற்றோர், நோய்வாய்பட்டோர் போன்றோரும் பராமரிக்கப்பட்டனர். இதற்கான செலவை அரசே ஏற்றது. சேர அரசன் இரும்பொறை அவ்வப்போது அவ்விடங்களுக்கு நேரிலே சென்று, அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்து களைவான். அவ்விடங்களுக்கு "ஆதுலர் சாலை' என்று பெயர். சேரமன்னனின் ஆட்சியில் இத்தகைய ஆதுலர் சாலை இருந்தது என்கிறார் புலவர். 
மக்களின் அச்சம்: சேரனது ஆட்சியில் அறம் கவலையின்றி அரசுக் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தது. ஏனெனில், அறம் வழுவா மன்னன் ஆட்சி செய்தான். குடிமக்களை தன் குழந்தைகளாகக் கருதி ஆட்சி செலுத்தினான் அரசன். எனினும், மக்கள் தம் மனத்தில் அச்சம் கொண்டிருந்தனர். ஏன் தெரியுமா? "நமக்கு எந்தவிதத் துன்பமும் நேராமல் எல்லாச் செல்வங்களையும் நல்கி எதிரிகளிடமிருந்து காத்து வாழ்கிறானே நம் அரசன், அவனுக்கு என்ன நேர்ந்துவிடுமோ?' என்று அச்சம் கொள்கின்றனர். இப்பொழுது குடிமக்கள் தாயாகவும், அரசன் சேயாகவும் மாறிவிடுகிறான். தன் குழந்தைக்கு எந்த ஒரு தீங்கும் நேர்ந்துவிடக்கூடாதே என்று தாய் அச்சப்படுவது இயல்புதானே. அதன் எதிரொலிதான் சேரனது குடிமக்களின் அச்சமும்.
சேரனுக்கு நிகர் சேரனே: இத்தகைய சேரனின் ஆட்சித் திறனையும் அறிவுத் திறனையும் ஈகைத்திறனையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார் புலவர். விரிந்த நிலவுலகையும், அகன்ற ஆகாயத்தையும், ஆழ்ந்த கடலையும், வீசும் காற்றின் வேகத்தையும் எவ்வாறு அளந்தறிய முடியாதோ அதுபோல சேரனின் அன்பையும் அறிவையும் அளந்தறிய முடியாது என்கிறார். பின்னர் ஏதோ நெருடியது போல், "இவற்றை எல்லாம்கூட அளந்துவிட முடியும். ஆனால், சேரனின் ஆற்றலை, மதி நுட்பத்தை, கொடைத்தன்மையை அளந்தறிய முடியாது' என்கிறார். ஒப்புமை கூறவந்ததை முதலில் ஒப்புவித்து, பின்னர் அதனை மறுத்து சேரனுக்கு நிகர் சேரனே என்று கூறுகிறார்.

"இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிது நிலைஇய காயமும், என்றாங்கு
அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியவை.
அறிவும் ஈரமும் பெருங்கண் ணோட்டமும்:
சோறுபடுக்கும் தீயொடு
செஞ்ஞாயிற்றுத் தெறல் அல்லது 
பிறிது தெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே:
திருவில் அல்லது கொலைவில் அறியார்;
நாஞ்சில் அல்லது படையும் அறியார்;
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அப்
பிறர்மண் உண்ணும் செம்மல்! நின் நாட்டு 
வயவுறு மகளிர் வேட்டுஉணின் அல்லது 
பகைவர் உண்ண அருமண் ணினையே:
அம்புதுஞ்சும் கடி அரணால்
அறம் துஞ்சும் செங்கோலையே 
புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை
அனையை ஆகன் மாறே:
மன்னுயிர் எல்லாம் நின்னஞ் சும்மே'' 
(புறம்.20)

இதைத்தான்,

"குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு' (குறள்.544)

என்றார் திருவள்ளுவர். எந்த ஓர் அரசன் குடிமக்களுக்கு எந்தவிதத் தீங்கும் நேராமல் காவல் செய்து, ஆட்சி செய்கிறானோ அத்தகைய அரசனது திருவடிகளை இந்த உலகம் சுற்றிக்கொள்ளும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com