நூற்றாண்டு விழா கண்ட பேரறிஞர் திருக்குறள்வேள்!

திருக்குறள், திருமந்திரம், திருவாசகம் ஆகிய முப்பெரும் நூல்களுக்கு உரை கண்டவர் லால்குடி ஜி.வரதராஜன்.
நூற்றாண்டு விழா கண்ட பேரறிஞர் திருக்குறள்வேள்!

திருக்குறள், திருமந்திரம், திருவாசகம் ஆகிய முப்பெரும் நூல்களுக்கு உரை கண்டவர் லால்குடி ஜி.வரதராஜன். "திருக்குறள்வேள்' என்று போற்றப்படும் இவர், லால்குடி கூகூரில், எல்.என்.குருநமசிவாயம் பிள்ளை- ருக்மணி அம்மாள் இணையருக்கு 19.1.1911-ஆம் ஆண்டு பிறந்தவர். 

வள்ளலார் கண்ட பிரஸ்தானத் திரயம்

""உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய மூன்றும் "பிரஸ்தானத் திரயம்' என்று வேதாந்த உலகில் வழங்கப்பெறும். தமிழில், சைவத்தில் இதுபோன்ற அமைப்பு இல்லை. எனினும் வள்ளலார் ஓர் அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். திருக்குறள், திருமந்திரம், திருவாசகம் ஆகிய மூன்றையும் வள்ளலார் பிரஸ்தான நூல்களாக, பிரமாண நூல்களாக எடுத்துக் கொண்டுள்ளார். இம்மூன்று நூல்களுக்குமே உரைகண்ட பெருமைக்குரியவர், சிறப்புக்குரியவர் லால்குடி பெரியவர் குரு வரதராஜப்பிள்ளை அவர்கள்'' என்கிறார் ஊரன் அடிகள்.

நடுநிலை நின்று எழுதப்பட்ட திருக்குறள் உரை

திருக்குறளுக்குத்தான் நிரம்ப உரைகள் வந்துள்ளனவே? இந்த உரைக்கு அப்படி என்ன தனிச்சிறப்பு என்று கேட்கலாம். ""அச்சு வாகன சுகம் கண்ட இருபதாம் நூற்றாண்டில் நான் அறிந்தவரை ஒரு நூறு பேர் உரை எழுதிக் குவித்தனர். அவற்றில் பல வெற்றுக் காகிதக் குவியல்களாகவே நின்று தேய்ந்தன. சில, அறிஞர்களின் கேலிக்குரியனவாய் எழுதியவருக்குத் தலைக்குனிவைத் தந்தன. சில, கடவுள் மறுப்புக் கண்ணோட்டத்தோடு வலிந்து எழுதப்பட்டன. சிலர் அதிகாரங்களையே வேண்டியவாறு இடமாற்றம் செய்தனர். செல்வாக்கு மிக்க சிலர் தமக்குத் தோன்றியவாறு அதிகாரத்திற்கு கேலிக்குரிய புதிய தலைப்புகளைத் தந்து பலரின் வெறுப்புக்கு ஆளாயினர். சிலர், காமத்துப் பாலை முன்வைத்து அறத்தைப் பின்னுக்குத் தள்ளினர். வேறு சிலர், முதல் நான்கு இயல்கள் வள்ளுவர் பாடியனவே அன்று என்று சாதித்தனர். சமயவாதிகள் குறளைச் சமண நூலாகக் காட்ட முயன்றனர். சிலர் திருமால் நெறிவந்தவர் வள்ளுவர் என்று சாதிக்க முயன்றனர். சைவ சித்தாந்தமே குறளின் உள்ளீடு என்ற தர்க்க வாதத்தை முன்வைத்துப் பார்த்தனர். ஜி.வரதராஜப் பிள்ளை சிறந்த சைவ அறிஞரும் கூட. இருந்தும் மேற்குறித்த தன் விருப்பம் கலவாத சான்றாண்மையோடு நடுநிலை நின்று எழுதப்பெற்ற நான்கு அல்லது ஐந்து உரைகளில் ஒன்றாக அமரர் ஜி.வரதராஜப் பிள்ளை அவர்கள் உரை நிற்கிறது என்பதே இந்த உரையின் தலைமைப் பண்புக்கு ஒரு சான்றாகும்'' என்கிறார் முனைவர் இரா.செல்வகணபதி.

எளிமையும் தெளிவும் கொண்ட திருவாசக உரை

""திருக்குறளைப் போலவே திருவாசகத்திற்கும் நிரம்ப உரைகள் வந்துள்ளன. இவ்வுரைகளிலிருந்து ஜி.வரதராஜப் பிள்ளை அவர்களின் உரையை வேறுபடுத்திக் காட்டுவன அதில் காணப்படும் எளிமையும், தெளிவுமே ஆகும்'' என்கிறார் முனைவர் தெ.ஞானசுந்தரம்.

நூலறிவும், அனுபவமும் கலந்த திருமந்திர உரை

திருமந்திரத்துக்கு அதிகம் உரைகள் வரவில்லை. திருமந்திர உரை எழுத வெறும் படிப்பறிவு மட்டுமே போதாது. யோக அனுபவமும் வேண்டும். ஏனைய உரைகள் எல்லாம் சைவ சித்தாந்த அடிப்படையில் வெளிவந்தன. திருக்குறள்வேள் சைவ சித்தாந்திதான். அவர் சைவ சித்தாந்த அடிப்படையிலேயே உரை எழுதியிருக்கலாம். ஆனால், அவர் அப்படி எழுதவில்லை. 
பின் எப்படி எழுதினார்? ""உரையாசிரியர் பலர் தம் சொந்த அறிவை நம்பியும், தம்முடைய நூலறிவின் துணை கொண்டும் திருமந்திரத்துக்கு உரை காண முனைகிறார்கள். அனுபூதிமான்களுக்கே திருமந்திரத்தின் பொருளை உணர முடியும் என்று தெளிந்த நூலாசிரியர் ஜி.வரதராஜப் பிளளை அவர்கள் ஒரு புது முறையைக் கையாண்டிருக்கிறார்கள்; தம்முடைய ஆர்வத்தாலும், நிகரற்ற அடக்கத்தாலும் ஸ்வாபானுபவச் செல்வரும் சமய இலக்கியக் கடலுமான சிவயோகி மா.இரத்தின சபாபதி பிள்ளையவர்களின் பரிவையும், அருளையும் பெற்று, சிவயோகி கொடுத்த விளக்கத்தைக் கொண்டு, தம்முடைய திருமந்திர உரையை எழுதி முடித்திருக்கிறார்கள். ஆகவேதான் இவ்வாசிரியர் வெளியிட்டிருக்கும் திருமந்திர உரை தனிச்சிறப்போடு மிளர்கிறது. மற்ற சில உரைகளைப் படித்துவிட்டு இவ்வாசிரியர் எழுதிய உரையைப் படிக்கும்போது, இருட்டுக்குள்ளிருந்து வெளிச்சத்துக்கு வந்தது போன்ற தெளிவும், நன்றியுணர்வும் நமக்கு ஏற்படுகின்றன'' என்கிறார் நீதியரசர் எஸ். மகராஜன்.

நூல்கள் வெளியீடு

1954-இல் திருக்குறள் உரை விளக்கமும், 1971-இல் திருவாசகம் விரிவுரையும், 1971-இல் திருமந்திரம் முதல் மூன்று தந்திரங்கள், 1972-இல் திருமந்திரம் - 4,5,6 தந்திரங்கள், 1974-இல் திருமந்திரம் - 7,8,9 தந்திரங்கள் வெளியாயின. திருக்குறள்வேள் எழுதிய பிற நூல்கள்: சிவஞான போதம் உரை, திருமந்திர நெறி.
இத்துணை அரிய பெரிய உரைகளை எழுதியுள்ள இவர், தமிழில் முனைவர் பட்டம் பெற்றவரில்லை, பி.ஏ. பொருளாதாரம்தான் படித்தவர். பின் எப்படி இத்தனை நூல்கள் எழுதினார் என்றால், தேடல்தான். ஆம், வாழ்நாள் முழுதும் தேடலில் ஈடுபட்டவர். அ.நடேச முதலியார், ஆர்.பஞ்சநதம் பிள்ளை, முத்து சு.மாணிக்கவாசக முதலியார், சி.அருணைவடிவேல் முதலியார், சிவயோகி மா.இரத்தின சபாபதி பிள்ளை போன்ற சைவப் பேரறிஞர்களை வீட்டுக்கு வரவழைத்தும், தாமே நேரில் சென்றும் பன்னிரு திருமுறைகளையும், பதினான்கு சாத்திரங்களையும் கற்றார்.

"திருவள்ளுவர்' இதழ்

திருக்குறள்வேளின் பணிகள் நூல்கள் வெளியீட்டோடு நின்றுவிடவில்லை. திருக்குறளைப் பற்றி மட்டுமே கட்டுரைகள் வெளியிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் "திருவள்ளுவர்' என்ற மாத இதழை 1950-இல் வெளியிட்டு இரண்டாண்டுகள் நடத்தினார். பிறகு அது நின்று போய்விட்டது. அதுமட்டுமல்ல, திருச்சி மாவட்டத் திருக்குறள் கழகம் நிறுவி மாவட்டம் தோறும் திருக்குறள் பரவ ஏற்பாடு செய்தார்.

சைவ சித்தாந்த வளர்ச்சிப் பணிகள்

சைவ சித்தாந்த வளர்ச்சிக்கு திருக்குறள்வேள் செய்த பணிகள் மாணப்பெரியன. 1966-இல் திருச்சியில் சைவ சித்தாந்த மகா சமாஜ ஆண்டு விழாவைச் சிறப்பாக நடத்தினார். 1970-களில் பத்தாண்டுகள், லால்குடியில் ஆண்டுதோறும் 15 நாள் சைவ சித்தாந்த வகுப்புகள் நடத்தி வந்தார். தான் படித்த தேசியக் கல்லூரியில் சைவ சித்தாந்தத் துறை நிறுவ பத்தாயிரம் ரூபாயும், தன் நூலகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சைவ நூல்களையும் வழங்கினார். 

திருக்குறள்வேளின் இக்கொடை இல்லாது போயிருந்தால், தேசியக் கல்லூரியில் சைவ சித்தாந்தமே பாடத்திட்டத்தில் வந்திருக்காது. மேலும், பெண்ணாகடத்தில் உள்ள மெய்கண்டார் கோயில் திருப்பணி செய்யவும், ஆண்டு முழுவதும் பூஜை நடத்தவும் இவர் பெருநிதி வழங்கினார்.

திருவானைக்கா அறங்காவலர் குழுத் தலைவராக ஐந்து ஐந்தாண்டுகள் பணியாற்றி, 5.7.1970 அன்று குடமுழுக்கு நடத்தினார். அதனையொட்டி "திருவானைக்கா புராணத்திற்கு' உரையும் எழுதி வெளியிட்டார்.

மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்

இத்துணை பணிகளைச் செய்தவர் ஆரம்ப காலத்தல் ஓர் அரசியல்வாதி (காங்கிரஸ்காரர்) என்று சொன்னால் வியப்பாக இருக்கும். காங்கிரஸ் பேரியக்கத்தில் இலக்கியவாதிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். பெருந்தலைவர் காமராஜரை இவர் தன் தலைவராக ஏற்றார். அவர் கட்டளைக்கேற்ப திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராகி, 1946 முதல் 1952 வரை பணியாற்றினார். நாட்டு விடுதலை இயக்கத்தில் பெரும்பங்கு கொண்ட திருக்குறள்வேள், 1945-இல் காந்தியடிகள் தென்னாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது, லால்குடி புகைவண்டி நிலையத்தில் காந்தியடிகளைக் காணும் பேற்றினை அங்குள்ள மக்களுக்கு உருவாக்கித் தந்தார். 

கூட்டுறவு இயக்க வழிகாட்டி

தன் சொந்த வாழ்க்கையில் திருச்சி மாவட்ட கூட்டுறவு வங்கிச் செயலாளராக நாற்பது ஆண்டுகள் பணியாற்றினார். வங்கிப் பணியில் மிகச் சிறப்பாக ஒளிவீசி கூட்டுறவு இயக்கத்திற்கும், பணியாற்றிய வங்கிக்கும் மங்காப்புகழ் பெற்றுத் தந்தார். வங்கியில் பயன்படுத்தப்பட்டு வரும் ஆங்கிலச் சொற்கள் பலவற்றுக்குத் தக்க தமிழ் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டார்.

விருது

இவருடைய பணிகளைப் பாராட்டி தருமை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ 25-ஆவது குருமகா சந்நிதானம் 24.1.1960-இல் "திருக்குறள்வேள்' என்ற விருதினை வழங்கினார். லால்குடி பெரும்புலவர் ப.அரங்கசாமி "திருக்குறள்வேள் வரதராசன் தமிழ்விடு தூது' என்ற தனியொரு நூலே இயற்றியுள்ளார்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த திருக்குறள்வேள் 1976-ஆம் ஆண்டு, ஏப்ரல் 19-ஆம் தேதி இறைவனடி சேர்ந்தார். இவரது நூற்றாண்டு விழா 15.8.2011 -ஆம் ஆண்டு சென்னை, வீனஸ்காலனியில் உள்ள ஆஸ்திக சமாஜத்தில் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பன்முக வித்தகரான திருக்குறள்வேள் ஜி.வரதராஜனை அனைவரும் நினைவுகூரவேண்டிய தருணம் இது.

ஏப்ரல் 19, "திருக்குறள்வேள்' ஜி.வரதராஜனின் நினைவு நாள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com