இந்த வாரம் கலாரசிகன் 

தோழர் தங்கப்பனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஏப்ரல் 24-ஆம் தேதி எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த நாளையொட்டி சென்னையிலுள்ள
இந்த வாரம் கலாரசிகன் 

தோழர் தங்கப்பனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. ஏப்ரல் 24-ஆம் தேதி எழுத்தாளர் ஜெயகாந்தனின் பிறந்த நாளையொட்டி சென்னையிலுள்ள ரஷ்ய கலாசார மையத்தில் விழா ஏற்பாடு செய்திருப்பதாகச் சொன்னார். அதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற எனக்கு அழைப்பு விடுத்தார். 
ஜெயகாந்தன் குறித்த தரவுகளுக்காக புத்தக அலமாரியில் தேட முற்பட்டபோது, கிருங்கை சேதுபதி தொகுத்த "ஜெயகாந்தனின் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய சாசனங்கள்' என்கிற புத்தகம் கண்ணில் பட்டது. ஜெயகாந்தன் குறித்து அவரிடம் நெருங்கிப் பழகிய பலரும் செய்திருக்கும் பதிவுகளுடன், மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுதிய ஜெயகாந்தன் குறித்த "சமுதாயத்தின் மனசாட்சிக் காவலர்' என்கின்ற கட்டுரையும் இதில் இடம்பெற்றிருக்கிறது. ஜெயகாந்தன் குறித்த மேலெழுந்த பார்வையாக இல்லாமல், அவர் குறித்த ஆழமான பல செய்திகளும், அவரின் தனித்துவங்களும் பதிவு செய்யப்பட்டிருப்பதுதான் இந்தத் தொகுப்பின் சிறப்பு.
ஜெயகாந்தனின் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கதைகள், கட்டுரைகள், பேட்டிகள், கவிதைகள் ஆகியவற்றின் வெளியீட்டு விழா உரைகள் அவரது பன்முக ஆளுமையைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. 
""நான் உங்களிடம் விடைபெற்றுக்கொள்ளும்போது, நான் எழுதாத எவ்வளவோ பாத்திரங்கள் என்னோடு சேர்ந்து உங்களுடன் விடைபெற்றுக் கொள்வார்கள். இதை நீங்கள் அறிய மாட்டீர்கள் என்பதால் உங்களுக்கு வருத்தமில்லை. இதை அறிந்திருக்கிற நான் இதன் பொருட்டு, சில சமயம் வருந்துவதுண்டு. இவர்களை நான் உருவாக்கிவிட்டுவிடுவேனேயானால் இவர்கள் உங்களுடன் நிரந்தரம் கொண்டு விடுவார்கள். அப்படி இல்லையென்றால், அது அவர்களின் பொறுப்பே ஆகும்'' என்று சிறுகதைகளின் தொகுப்பு நூலின் நிறைவு பக்க ஜெ.கே.யின் வாசகம் என்னை அடிக்கடி இம்சிக்கும். ஜெ.கே. விடைபெற்றுக் கொண்டாலும்கூட, அவருடைய பாத்திரங்கள் நம்மிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளவில்லை என்பது நிதர்சன உண்மை.
ஜெ.கே.யின் மிக நெருங்கிய நண்பராகத் தொடர்ந்தவர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். "ஜெயகாந்தன் பிரமிப்பூட்டும் நிறப்பிரிகை' என்கிற அவரது கட்டுரையில், ஜெயகாந்தனின் சொல்லாட்சி குறித்து இந்தப் பதிவை அவர் செய்கிறார். ""கூடுவிட்டுக் கூடு பாயும் ஆற்றலின் வேறொரு பரிமாணம் அவரது உயிர்த்துடிப்புள்ள சொல்லாட்சி. தமிழின் பல்வேறு கிளைமொழிகள், பரிபாஷைகள்-பிராமணக் கிளைமொழி, சென்னைச் சேரி கிளைமொழி என்று பல கிளைமொழிகள் அவருக்குக் கைக்கட்டி சேவகம் புரிகின்றன. கூர்மையான பார்வையும், நுண்ணிய செவிப்புலமையும் இயைந்து, அலைவரிசையில் இயங்கும் பாங்கும் இச்சொல்லாட்சி லாவகத்தின் அடிப்படை.'' இதுவும் நிஜம்!
ஜெயகாந்தனின் படைப்புகளைப் படிக்கத் தொடங்குவதற்கு முன்பும், படித்து முடித்த பின்பும், இரண்டு முறை "ஜெயகாந்தனின் இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய சாசனங்கள்' என்கிற இந்தத் தொகுப்பைப் படிக்க வேண்டும். படிப்பதற்கு முன்னால், படிக்கும்போது ஜெயகாந்தன் என்கிற ஆளுமையின் மீது ஏற்படும் பிரமிப்பு, அவருடைய படைப்புகளைப் படித்த பிறகு, மீண்டும் படிக்கும்போது பன்மடங்கு அதிகரித்திருக்கும்! 

சுயமுன்னேற்றம், ஆளுமைத்திறன், தன்னம்பிக்கைக் கட்டுரைகள் ஆகியவை குறித்து எழுதப்படும் அளவுக்கு முதுமை குறித்து புத்தகங்களும், கட்டுரைகளும் அதிகம் வெளிவருவதில்லை என்பது வேதனைக்குரியது.
இந்தியாவில் ஏறத்தாழ எட்டு கோடிக்கும் அதிகமான முதியோர் இருக்கிறார்கள். அவர்களில் ஏறத்தாழ 40 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் மிகுந்த மன உளைச்சலுடன்தான் தத்தம் குடும்பங்களில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்குப் போதிய மரியாதையோ, கவனிப்போ இல்லாமல் இருந்தும்கூட, தங்களது வயோதிகம் கருதியும், தனித்தியங்க முடியாமை கருதியும், குழந்தைகள், பெயரக் குழந்தைகள் மீதான பாசத்தினாலும், தங்களுக்கு இழைக்கப்படும் அவமானங்களையும், புறக்கணிப்புகளையும் சகித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். 
"முதுமையே உன்னை ஆராதிக்கிறேன்' என்பது, 94 வயது வரை வாழ்ந்த வேதாத்ரி மகஷிரியால் "அருள் நிதி' என பட்டம் அளித்துப் போற்றப்பட்ட, அகவை 85 ஐ கடந்த எஸ்.சதானந்தம் என்பவரால் எழுதப்பட்டிருக்கும் புத்தகம். இந்தப் புத்தகம் முதியோரைப் பேணும்படி இளைஞர்களுக்கு அறிவுரை கூறுவதைத் தவிர்த்து, முதுமையை எப்படி எதிர்கொள்வது என்கிற வழிமுறைகளை முதியோருக்கு எடுத்துரைக்கிறது. வயோதிகத்தை இளமைப்படுத்தும் உடற்பயிற்சிகளில் தொடங்கி, வயோதிகத்தைத் தாங்கும் முத்திரைப் பயிற்சிகள், முதியோர் கடைப்பிடிக்க வேண்டிய பழக்க வழக்கங்கள் என்று முதுமையை வித்தியாசமாக அணுகியிருக்கிறது. 
முதுமையிலும் சாதனை படைத்த பலரை அடையாளம் காட்டி, அவர்களை முன்னுதாரணங்களாக சித்திரித்திருக்கிறார் எஸ்.சதானந்தம். உலகப் புகழ்பெற்ற ஓவியர் பிகாசோ தன் 90-ஆவது வயதில்தான் பிரபலமான ஓவியங்களை வரைந்தார்; பெட்ரான்ட் ரஸ்ùஸல், தாமஸ் ஹாப்ஸ் இருவரும் தங்களது 90-ஆவது வயதில்தான் தத்துவப் புத்தகங்களை எழுதித் தள்ளினார்கள்; உலக அதிசயமான ஈஃபில் கோபுரம் கட்டிய கஸ்டேவ் ஈஃபில், நாவலாசிரியர் சாமர்செட் மாம், நாடகாசிரியர் பெர்னாட்ஷா என 90 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிய சாதனையாளர்களை அவர் பட்டியலிடும்போது, எஸ்.சதானந்தம் கூறுவதுபோல முதுமையை நிஜமாகவே ஆராதிக்கத் தோன்றுகிறது.

கடந்த வாரம் "முதியோர் இல்லம்' என்கிற தலைப்பில் வெளியான கவிதை, கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் "திணை மயக்கம்' என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற "கண்ணீர்த் தீவுகள்' என்கிற கவிதையிலுள்ள வரிகள் என்று தெரிவிக்கிறார் எழுத்தாளர் அமுதா பாலகிருஷ்ணன். நன்றி!

முன்பெல்லாம் நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது சாலையின் இருபுறங்களிலும் புளிய மரங்களும், மாமரங்களும், வேப்ப மரங்களும் தார்ச் சாலையில் வெயில் படாமல் நிழல் கொடுத்துக் கொண்டிருக்கும். இப்போது நான்குவழிச் சாலைகள், ஆறுவழிச் சாலைகள் என்று மாறிவிட்ட நிலையில், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பொட்டல் காடாகத்தான் இருக்கிறது. இருபுறங்களிலும் இருந்த மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுவிட்டன. 
இதை, கவிஞர் செங்கவின் தனது "களையெடுப்பின் இசைக்குறிப்பு' என்கிற கவிதை நூலில், "வளர்ச்சியின் பெயரால்' என்கிற கவிதையில் அற்புதமாக வெளிப்படுத்துகிறார்.
நிறைமாத பிள்ளைத்தாய்ச்சியைக்
காவு கொடுப்பார்கள்
எனும் பழங்கதையை
நான் நம்பவேயில்லை
சூல்கொண்ட அப்பெருமரத்தை
அவர்கள் வெட்டிச் சாய்க்கும்
வரையிலும்...!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com