மகாகவி பாரதியாரின் ஆங்கிலப் படைப்புகள்! 

மகாகவி பாரதியார் தமிழில் கவிதை, கட்டுரைகள் எழுதியுள்ளது எல்லோரும் அறிந்தது. ஆனால், அவர் ஆங்கிலத்திலும் கவிதை, கட்டுரைகள் எழுதினார் என்பது பலருக்கும் தெரியாது
மகாகவி பாரதியாரின் ஆங்கிலப் படைப்புகள்! 

மகாகவி பாரதியார் தமிழில் கவிதை, கட்டுரைகள் எழுதியுள்ளது எல்லோரும் அறிந்தது. ஆனால், அவர் ஆங்கிலத்திலும் கவிதை, கட்டுரைகள் எழுதினார் என்பது பலருக்கும் தெரியாது. "அக்னி முதலிய பாடல்கள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள்' என்ற தலைப்பில் பாரதியின் ஆங்கிலப் படைப்புகள் தொகுக்கப்பெற்று, 1937-ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. நூறு பக்கங்களே கொண்ட அந்நூலைப் படிப்போர், "பாரதி இன்னும் நிறைய ஆங்கிலத்தில் எழுதவில்லையே' என்று வருந்துவர்.
பாரதியார், ரவீந்திரநாத் தாகூரைத் தமக்கு முன்மாதிரியாகக் கொண்டார். தாகூர் தமது தாய்மொழியில் - வங்காளத்தில் கதை, கவிதை, கட்டுரைகளை முதலில் எழுதினார். பிறகு, அவற்றில் பலவற்றைத் தாமே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அவ்வாறு செய்ய வேண்டும் என்ற ஆசை பாரதிக்கும் எழுந்திருக்கிறது. எனவே, அவர் இயற்றிய தமிழ்ப் பாடல்கள் சிலவற்றை ஆங்கிலப் பாடல்களாக மொழிபெயர்த்தார்.
அவருடைய ஆங்கிலப் படைப்புகளை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்.
1. அவர் பாடிய தமிழ்க் கவிதைகளின் மொழிபெயர்ப்பு.
2. வேதங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஸ்தோத்திரங்கள், ஆழ்வார்களின் சில பாடல்கள் ஆகியவற்றின் மொழிபெயர்ப்பு.
3. அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் அவருடைய கருத்துகளை வெளியிடும் கட்டுரைகள்.
4. அவருடைய குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள்.
5. தமிழ்ச் சொற்களைப் பற்றி ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை.
வேதங்களிலுள்ள சில ஸ்தோத்திரங்களை ஆங்கிலப் பாடல்களாகப் பெயர்த்திருக்கிறார். அதேபோன்று ஆழ்வார்களின் பாடல்கள் சிலவற்றையும் ஆங்கிலத்தில் வசனக் கவிதைகளாக ஆக்கித் தந்துள்ளார். அவர்கள் கருத்துகளுடன் ஒன்றி, அவற்றைத் தமதாக்கிக் கொண்டு, பின்னர் அவற்றைத் தமக்கே உரிய நடையில் அவர் வெளியிடும்போது, அவை புதுப் பாடல்களாகவே தோன்றுகின்றன. இதுதானே நல்ல மொழிபெயர்ப்பாளன் செய்யும் ரசவாதம்!
பாரதி எழுதியுள்ள ஆங்கிலக் கட்டுரைகள் அவ்வப்போது இருந்த அவருடைய மனநிலைகளைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. தேசியம், அரசியல், சமூகம், தத்துவம், சமயம் முதலிய பல துறைகளில் அந்த நாளில் நிலவி வந்த கருத்துகளில் பாரதி எதை ஏற்று ஆதரித்தார் என்பதையும் இந்தக் கட்டுரைகளிலிருந்து நாம் அறியலாம்.
பாரதியாரின் குறிப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கருத்துகளை ஒரு தனிப் பகுதியில் காண முடிகிறது. சுருக்கமாகச் சொல்லி ஆழ்ந்த கருத்துகளைப் புலப்படுத்துவதால், பாரதி அரிய ஆற்றல் பெற்றிருந்தார் என்பதற்கு இப்பகுதி நல்ல சான்றாகும். அதில் சில வரிகள்:
He is slave Who receiver favours.
He sells himself who asks.
If you want to die soon talk about yourself.
முரண்பாடு போலத் தோன்றும் வகையில் சொல்லி, கருத்துகளை எளிதில் விளக்கும் முறையை மேற்கொள்கிறார், பாரதி. "மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. ஆனால், இறைவா! மனம் உண்டாவதற்கு என்ன வழி?'' என்று கேட்கிறார், தெளிவான ஆங்கில நடையில்!
கடைசிக் கட்டுரை தமிழ்ச் சொற்களைப் பற்றிய ஆராய்ச்சி. ஒவ்வொரு தமிழ்ச் சொல்லுக்கும் மேம்போக்கான, நேரடியான பொருள் ஒன்று இருக்கும். அதோடு, மறைபொருளாக அல்லது உள்ளுறைப் பொருளாக ஒன்றோ பலவோ இருக்கும் என்பது பாரதியாரின் அபிப்பிராயம். அதற்கென சில சொற்களைச் சான்றாகத் தந்து, தம் கருத்தை விளக்க முற்படுகிறார். ஆனால், எல்லாத் தமிழ்ச் சொற்களுக்கும் பொருந்தும் வகையில் விதி ஒன்றையும் அவர் உருவாக்கவில்லை.
பாரதியின் ஆங்கில நடை எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறது. என்றாலும் அவரது கொள்கையை சில தமிழறிஞர்கள் ஏற்க மறுக்கின்றனர். "இலக்கியம் படைத்த மொழிகள் எல்லாவற்றிலும் சொற்கள் பலதரப்பட்ட பொருளை அடுக்கடுக்காகப் பெற்றுள்ளன. இதற்கு, பாரதி மேற்கொண்ட ஆங்கிலச் சொற்களே சான்று. எனவே, இதைத் தமிழின் தனிச்சிறப்பு என்று கொள்ள முடியாது'. இது பற்றிக் தமது கருத்துகளை விளக்கி பல கட்டுரைகளை எழுதப் போவதாக பாரதியே அறிவித்திருக்கிறார். ஆனால், நமது துரதிருஷ்டம், அந்தக் கட்டுரைகள் வெளிவராமலேயே போயின.
மொத்தத்தில் இந்த ஆங்கில நூல் பாரதியாரின் ஆங்கிலப் புலமையை நன்கு புலப்படுத்துகிறது. அவருடைய ஆங்கில எழுத்துக்கு உயிரூட்டுவது நகைச்சுவைதான். உயர்ந்த இலக்கியங்களை பாரதி ஆங்கிலத்தில் படைத்தார் என்பதில் வியப்பொன்றுமில்லை.
"கண்ணம்மா என் காதலி' என்னும் தலைப்பில் "பாயுமொளி நீ எனக்கு' என்று தொடங்கும் பாடலை கீழ்வருமாறு பாரதி மொழிபெயர்த்திருக்கிறார்:
Thou to me the flowing light
And I to thee discerning Sight ;
Honied blossom thou to me,
Bee enchanted I to thee ;
O Heavenly Lamp with Shining ray,
O krishna, Love, O nectar-Spray
With falt'ring tongue and words that pant
Thy glories here, I strive to Chant.
- ஆர். சி. சம்பத்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com