காலத்தை வென்ற கவிஞானி நிஜாமி! 

புவியரசர்களின் நிழலில் கவியரசர்கள் பலர் தொன்று தொட்டு நின்று வந்துள்ளதை இலக்கியச் சுவடுகள் எடுத்துரைக்கின்றன. தமிழிலக்கியச் சூழலில் சங்கப் புலவர்கள் தொடங்கி சமகாலப் புலவர்கள் வரை,
காலத்தை வென்ற கவிஞானி நிஜாமி! 

புவியரசர்களின் நிழலில் கவியரசர்கள் பலர் தொன்று தொட்டு நின்று வந்துள்ளதை இலக்கியச் சுவடுகள் எடுத்துரைக்கின்றன. தமிழிலக்கியச் சூழலில் சங்கப் புலவர்கள் தொடங்கி சமகாலப் புலவர்கள் வரை, ஆட்சியாளர்களின் ஆசிகளை எதிர்பார்த்துக் கவி செய்பவர்களாகவே ஏராளமானோர் உள்ளனர். விதிவிலக்காய்த் திகழ்கின்ற பாவலர்கள் சொற்பமானவர்களே!
பார்வேந்தர்களை மதிக்காத பாவேந்தனாய்த் திகழ்ந்த, பாரசீகக் கவிஞானி நிஜாமியின் வாழ்வையும், படைப்புகளையும் வாசிக்கத் தொடங்கினால், வியப்புக் குளத்தில் விழுந்து மனமே ஒரு மீனாகிவிடும்.
அஜர்பைஜானில், நிஜாமி பிறந்த ஊரின் பெயர் கஞ்சா. ஊர்ப் பெயரோ உள்ளிழுக்கும் போதையாக இருக்கிறது. 
""பழமைமிக்க இந்த வானத்தின் கீழே 
நிஜாமியின் கவிதைக்கு நிரான கவிதையில்லை''
என்று காஜா ஹாஃபீஸ் என்ற ஞானியும்,
""பரிசுத்த பனித்துளியால்
படைத்தவன் உருவாக்கிய கண்ணியமிக்க முத்து
நமது நிஜாமி!
மனித குலத்திற்கு நெடுங்காலம்
ஒளியூட்டியது அந்த முத்து.
அதனை, 
சிப்பிக்குள் மீண்டும் வைத்து விட்டான்
இறைவன்''

என்று நிஜாமி குறித்து இமாம் சா அதியும் நெக்குருகிப் பாடுவது, உயர்வு நவிழ்ச்சியல்ல என்பதை அவரது ஒளிவீசும் கவிதைகளுக்குள் பயணம் செய்தால் உணர்ந்துகொள்ள முடியும்.
அவர் கி.பி.1140-41 காலகட்டத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் இல்யாஸ் அபூ முஹம்மத் நிஜாமுத்தீன். அதன் சுருக்கமே அவரது புனைபெயர் "நிஜாமி' என்றானது. "நிஜாமி கஸ்னவி' என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார். இளம் பருவத்திலேயே தந்தையையும், தாயையும் அடுத்தடுத்து இழந்தவர். அவரது பிள்ளைப் பருவத்து கண்ணீர்த் துளிகளும் கவிதை முத்துக்களாக இறுகி ஒளி வீசின.
தன் தந்தை இறந்தபோது, அவர் எழுதிய இரங்கல் கவிதையே, அவருக்குள் மாபெரும் ஞானம் மறைந்திருப்பதை எடுத்துக் காட்டியது.
""எந்தை "யூசுப் பின் ஸக்கி முஹம்மத்'
எனது மூதாதையர் போலவே 
இளமையில் இறந்தார்.
விதியோடு யார் போராடக் கூடும்?
விதி பேசத் தொடங்கினால்
யாரும் முறையிட முடியாது.
என் முன்னோரிடமே என்
தந்தை சென்றுவிட்ட பின்
என் இதயத்திலிருந்து அவர் வடிவை
கிழித்தெடுத்து விட்டேன்.
கசப்போ, இனிப்போ
நடப்பது எதுவாகினும்
படைத்தவன் முன் நான் பணிந்து விடுகிறேன்''
தமிழில் உள்ள ஐம்பெரும் காப்பியங்கள் ஐந்து பெரும் புலவர்கள் தமிழன்னைக்குப் பூட்டிய அணிகலன்கள். பாரசீகக் கவிஞானி நிஜாமி எழுதிய ஐந்து காப்பியங்களை "பஞ்ச்கஞ்ச்' என்கின்றனர். பாரசீக மொழிக்கு ஒரே கவிஞர் ஐவகை அணிகலனை அணிவித்திருப்பது அவரது 
ஆற்றலைக் காட்டுகிறது.

"மக்ஸானுல் அஸ்ரார் (இரகசியங்களின் பொக்கிஷம்); குஸ்ரூ வஷிரின் (குஸ்ரூனும் ஷீரினும்); லைலா-மஜ்னூன் (லைலா மீது பித்தானவன்); ஹப்தே பைகார் (ஏழு அழகிகள்); சிக்கந்தர் நாமா (அலெக்சாண்டர் வரலாறு) ஆகியவை நிஜாமி எழுதிய ஐம்பெரும் காப்பியங்கள் ஆகும். 
நிஜாமி தனது காப்பியங்களை அரசர்கள் சிலருக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார். மக்ஸானுல் அஸ்ரார் நூலை அஜர்பைஜான் அரசன் இல்திகிஸ் என்பவருக்கும், குஸ்ரூ வஷிரின் என்ற காப்பியத்தை இல்திகிஸின் பிள்ளைகளான முஹம்மது மஜ்னு காஸிம் அர்சலானுக்கும், செல்ஜிக்கிய இறுதி மன்னன் துக்ரல்பின் அர்சலானுக்கும், லைலா-மஜ்னுவை ஷிர்வான் மன்னன் அக்ரிசாக் மினு சிஹ்ரிக்கும், சிக்கந்தர் நாமாவை நஸ்ரூதீன் அபூபக்கருக்கும் அர்ப்பணம் செய்துள்ளார்.
அரசர்களுக்குக் காப்பியங்களை அர்ப்பணித்தாலும், அரசவைப் புலவராக இருக்க நிஜாமி ஒப்பவில்லை. அரசவைக் கவிஞர்கள் பற்றி அவர் வடித்த கவிதை இது:
""தமது மகத்துவமிக்க கவியாற்றலை
பொன்னுக்காக விற்கும் புலவர்கள்
அந்தப் பொன்னைப் போலவே இதயமற்றவர்கள்
ரத்தினங்களைத் தந்துவிட்டு
கற்களைப் பொறுக்குபவர்களே...
தங்கக் கிரீடம் இன்று அவர்கள்
தலையில் வைக்கப்படலாம்
நாளை ஓர் இரும்புச் சங்கிலி இவர்களைத்
தலைகுனியச் செய்யும்''
மதுவின் வாடையைக் கூட நுகர்ந்ததில்லை என்று கூறும் கவி நிஜாமி எழுதிய "லைலா மஜ்னு' காப்பியம் உலகப்புகழ் பெற்றது. காதலர் உலகின் தேசிய நூலாகவே திகழக்கூடியது. 
லைலா மஜ்னூன் கதைச் சுருக்கம் இதுதான். கைஸ் என்ற கவின்மிகு அரபு இளைஞன் அமீரி குடும்பத்தைச் சேர்ந்த லைலா மீது நேசம் கொண்டான். குழந்தைப் பருவத்தில் உண்டான அன்பு, நேசமாகி, பின்பு காதலாகி முதிரும் நிலையில், லைலாவின் தந்தை, கைûஸ நிராகரித்து அதிரும் முடிவை அறிவிக்கின்றார். கைஸ், லைலா மஜ்னூன் (லைலா பித்தன்) ஆனான். காடு, மலைகள் தோறும் தனது காதலை எதிரொலித்தான். 
நெளபல் என்ற அரபுத் தலைவன் கைஸின் நண்பைன். தன் நண்பனுக்காக லைலா கூட்டத்தார் மீது போர் தொடுத்து அடக்குகிறான். ஆனாலும், லைலாவைத் தர அவள் தந்தை சம்மதிக்கவில்லை.
இதனிடையே, இப்னு சலாம் என்ற அரபுத் தலைவன் லைலா மீது ஒருதலைக் காதல் கொண்டு, பெற்றோரிடம் கேட்டு மணமுடிக்கிறான். மஜ்னூனிடம் மனம் பறிகொடுத்த லைலா, மனம் ஒவ்வாதவனுடன் மஞ்சத்தைப் பகிர மறுத்து, கைசின் காதலைப் பகர்கிறாள். 
கடைசியாக ஒருமுறை கைசை சந்திக்க வருகிறாள் லைலா. கைஸ் மெளனத்தில் உறைந்திருக்கிறான். லைலாவின் கவிச் சொற்கள் அவனை உருக்குகின்றன. ""கைஸ்! என்னைச் சந்திக்கும் ஏக்கத்தில் உனது குரல் வானில் எதிரொலித்ததே... இப்போது, நான் உன்னருகில். உன் காதலும், குரலும் போய்விட்டதா?'' என்கிறாள். அதற்கு கைஸ் கவித்துவம் ததும்ப பதிலளிக்கிறான்.
தன் வீடு திரும்பிய லைலா, சிறிது காலத்திலேயே இறந்து போகிறாள். கைஸிடம் அவள் இறந்த செய்தி தெரிவிக்கப்பட, அதைக் கேட்ட உடனேயே அவனும் இறந்து போகிறான். லைலாவும், மஜ்னுவும் ஒரே குழியில் அடக்கம் செய்யப்படுவதாகக் கதை முடிகிறது. இக்காப்பியத்தின் இடையிடையே இடம்பெறும் வசீகர வசனங்களே இதன் தனிச்சிறப்பு. 
நிஜாமியின் ஏனைய படைப்புகளும் இதயங்களை ஈர்க்கும் வல்லமை கொண்டவை. அவை குறித்து அடுத்த வாரம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com