சோழன் நல்லுருத்திரன் கூடும் உயர்ந்த குறிக்கோளார்!

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஒரு குறிக்கோள் வேண்டும். குறிக்கோள் இல்லா மனிதனின் வாழ்க்கை வீணே! அக்குறிக்கோள் உயர்வானதாக இருக்க வேண்டும். மலையளவு இருக்க வேண்டுமே தவிர மடுவளவு இருக்கக் கூடாது.
சோழன் நல்லுருத்திரன் கூடும் உயர்ந்த குறிக்கோளார்!

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஒரு குறிக்கோள் வேண்டும். குறிக்கோள் இல்லா மனிதனின் வாழ்க்கை வீணே! அக்குறிக்கோள் உயர்வானதாக இருக்க வேண்டும். மலையளவு இருக்க வேண்டுமே தவிர மடுவளவு இருக்கக் கூடாது. அவ்வுயர்வுக்கு தேவை ஊக்கமும் உழைப்பும் ஆகும். அயராது உழைப்பவனுக்கு தெய்வம் உதவ முன்வரும். அத்தகைய உழைப்புக்கு ஊக்கம் தேவை. ஊக்கம் என்பது முயற்சி "முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்' என்பது வள்ளுவர் வாய்மொழி; அம்முயற்சிக்கு உயர்ந்த எண்ணம் வேண்டும்.
தாமரைத் தண்டினது உயர்வும் தாழ்வும் குளத்திலுள்ள நீர்மட்டத்தினைப் பொறுத்தது. அதுபோல மனிதர்கள் தம் வாழ்வில் பெறும் ஏற்றமும் இறக்கமும் அவர்களது எண்ணத்தைப் பொறுத்தே அமையும் (குறள்.595). எனவேதான், உள்ளுவதெல்லாம் உயர்ந்தனவாக இருத்தல் வேண்டும் (596) என்றார் வள்ளுவர். 
உயர்ந்த குறிக்கோளுடையார் நட்பே தமக்கு வேண்டும் என்றான் ஓர் அரசன். அவன்தான் சோழன் நல்லுருத்திரன். கலித்தொகையில் முல்லைக்கலி பாடிய மூதறிவாளன்! புலவர் வரிசையில் இடம்பெறும் புரவலன்! அவ்வரசன், உயர்ந்த குறிக்கோளினைக் கொண்ட முயற்சியுடையார் நட்பே தமக்குக் கூட வேண்டும் என்றும், உயர்ந்த குறிக்கோள் அற்றவர் நட்பு தம்மோடு கூட வேண்டாம் என்றும் கூறுகிறான்.
எளிய முயற்சி: நன்றாக விளைந்து அறுவடைக்குத் தயாராகவிருக்கும் நெல் வயலில் கதிர்களைக் கவர்ந்து சென்று தன் வளையில் நிறைத்து வைக்கும் இயல்பு எலிக்கு உண்டு. எலி பிறர் உழைப்பைக் கவர்ந்து மறைத்து வைக்கிறது. 
இது சிறு முயற்சி; தான் மட்டும் வாழ நினைக்கும் எண்ணம்! இவ்வெலி போன்ற முயற்சியுடைய மனிதர்கள் உலகில் உள்ளனர். அவர்கள் சிறு முயற்சி உடையவர்கள். ஆனால், எலி மறைத்து வைத்த பொருளோ அதற்குப் பயன்படவில்லை. வளையைத் தோண்டுபவர் எடுத்துச் சென்று விடுகின்றனர். இவ்வாறே பிறர் உழைப்பில் வாழ விரும்பி, பிறர் பொருளைக் கவருகின்ற சிறு மனிதர்களும் உலகில் உள்ளனர். கடைசியில் அவர்கள் தாமும் உண்ணாது பறிகொடுக்கின்றனர்; இது புன்மையானது; இழிவு தருவது. இவர்கள் உறவு எனக்குக் கூடாது போகட்டும்! என்கிறான்.
உயர்ந்த முயற்சி: உயர்ந்த நோக்கத்துடன் காட்டில் வேட்டைமேற்சென்ற வரிப்புலியானது தனது வலிமையால் திண்ணிய பன்றியை அடித்து வீழ்த்தியது. ஆனால், பன்றி அப்புலியின் இடப்பக்கம் வீழ்ந்தமையால், அதனை உண்ணாது வெறுத்து பசியுடன் தனது குகை சென்று தங்குகிறது (புலி தனது இரையை வலப்பக்கம் வீழ்த்தியே உண்ணும் இயல்புடையது). மறுநாள் மிகப்பசியுடனும், வீரத்துடனும் குகையிலிருந்து வெளியேறுகிறது.
முன்னிலும் பெரிய வலிய ஆண் யானையை அடித்து வலத்திலே வீழ்த்தியது; வயிறு நிறைய உண்டது; தன் வழிமேற் சென்றது. மீந்து கிடந்த யானையின் தசைகள் வேறு பல விலங்கு, பறவைகளுக்கு இரையாயின. 
அதாவது, புலியின் முயற்சியால் வீழ்த்திய பெரிய யானை காட்டிலுள்ள பல உயிர்களுக்கும் உணவாகிறது. இவ்வாறு தாளாற்றித்தந்த (தன் முயற்சியால்) பொருளைத் தானும் உண்டு, தக்கார்க்கும் அளிக்கும் வேளாண்மை மிகுந்தோரும் இவ்வுலகில் உள்ளனர். அதாவது, புலியின் உயர்ந்த குறிக்கோளுக்கு உழவனின் உயர்வு உவமையாகக் காட்டப்பட்டது. இது இன்றையளவில் நாம் நினைவுகூரத்தக்கது. இத்தகைய உயர்ந்த குறிக்கோளுடைய குன்றனைய முயற்சியுடையார் நட்பே கூடுவது உயர்வு தரும். இத்தகையோர் நட்பு எனக்கு நாளும் பெருக வேண்டும் என்கிறான் இவ்வரசன். 
எனவே, புறப்பட்ட இடமும் தெரியாமல், போகும் இடமும் தெரியாமல் "நீர் வழிபடூஉம் புணை போல' தடுமாறிக்கொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறைக்குத் தேவை உயர்ந்த குறிக்கோளுடையார் நட்பேயாகும்!
"விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்
வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்
எலி முயன் றனையர் ஆகிஉள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளமி லாளரொடு
இயைந்த கேண்மை இல்லாகியரோ
கருங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்று அவண் உண்ணா தாகி வருநாள்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும் 
புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து 
உரனுடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள ஆகியரோ' (புறம் 190.)

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com