வில்லாப் பூக்கள்

இறை வழிபாடு மற்றும் மாந்தர்கள் அணிந்து கொள்ளுதல் என்னும் நிலைகளில் பலவிதமான பூக்கள் இலக்கியங்களில் பேசப் பெறுகின்றன. பூக்களில் பெரும்பாலானவை 'பண்டமாற்று முறையில்' தேவை கருதி விற்பனை

இறை வழிபாடு மற்றும் மாந்தர்கள் அணிந்து கொள்ளுதல் என்னும் நிலைகளில் பலவிதமான பூக்கள் இலக்கியங்களில் பேசப் பெறுகின்றன. பூக்களில் பெரும்பாலானவை 'பண்டமாற்று முறையில்' தேவை கருதி விற்பனை செய்யப்பட்டன. பயன்பாட்டிற்கு ஆகாத பூக்கள் விற்பனை செய்யப்பட மாட்டா. இப்படி, விலைக்கு விற்க இயலாத பூக்களை சங்க இலக்கியங்கள் 'வில்லாப் பூக்கள்' எனக் குறிக்கின்றன. அவ்வாறு, வில்லாப் பூக்களாகப் பேசப்பட்டன பூளைப் பூ, ஆவிரைப் பூ, உழிஞைப் பூ, எருக்கம் பூ எனப் போல்வன ஆகும்.
வில்லாப் பூக்களாகிய இவற்றை, மனம் பித்துப் பிடித்தவர்கள் சூடிக்கொள்வர் எனக் கூறப்படுகிறது. வில்லாப் பூச் சூடிய ஆடவன் ஒருவனின் செயலை, நற்றிணைப் பாடலொன்று காட்சிப் படுத்துகின்றது.
தலைவன் ஒருவன், தன் தலைவி தனக்குக் கிடைக்காததை அறிந்து வருந்தி, வேறு வழியின்றி, பனங் கருக்கினால் செய்யப்பட்ட குதிரையிலேறி, அவளைக் காண வருகிறான். அப்பொழுது அவன், 'முன்னிலைப் புறமொழியாகத் தோழிக்குக் கேட்குமாறு தனது நெஞ்சிற்குக் கூறுவான் போலச் சொல்லுகிறான்.
'நல்ல ஓவியனொருவன் தீட்டிய சித்திரம் போன்று அழகுடைய தலைவியின் பொருட்டு வருத்தமடைந்துள்ள நெஞ்சே! விலைக்கு விற்கவியலாத 'பூளை மலரையும், உழிஞைப் பூவையும், எருக்கம் பூவையும் ஆவிரம் பூவோடு கலந்து கட்டிய மாலையைச் சூடி, 'நான் பித்துப் பிடித்துள்ளேன்' என்று சொல்லுமளவிற்கு, பல ஊர்களிலும் சென்று திரிகின்ற, நெடியதும் கரியதுமான பனை மடலாலே கட்டிய குதிரையைப் பெற்றுள்ளாய்!
நீ என் சொல்லைக் கேட்க விரும்புவாய் என்றால், ஒளிவீசிக் கொண்டிருக்கும் ஞாயிற்றின் வெம்மை ஒடுங்கும் வரையிலும், நல்ல அரசனின் வெண் கொற்றக் குடையின் நிழலிலிருந்து மக்கள் இன்புறுவது போல, குளிர்ச்சியான இம்மரத்தின் கீழ் சிறிது நேரம் தங்கியிருந்து, பின் செல்வாயாக' என்கிறான். உதவாப் பூச்சூடித் திரியும் இரங்கத்தக்க பித்தனைக் கண்முன் நிறுத்துகிறது பின்வரும் பாடல்:

''வில்லாப் பூவின் கண்ணி சூடி
நல்லே முறுவலெனப் பல்லூர் திரிதரும்
நெடுமாப் பெண்ணை மடல்மா னோயே
கடனறி மன்னர் குடைநிழல் போலப்
பெருந்தண் என்ற மரன் நிழல் சிறி திழிந்து
இருந்தனை சென்மோ வழங்குக சுடரென
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள்
நல்லேம் என்னுங் கிளவி வல்லோன்
எழுதி யன்ன காண் டகு வனப் பின்
ஐயள் மாயோள் அணங்கிய
மையல் நெஞ்சம் என்மொழிக் கொளினே'' (146) 

கலித்தொகையிலும் (பா. 139) 'வில்லாப் பூ'ப் பற்றிய குறிப்பு உண்டு! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com