இந்த வார கலாரசிகன்

மதுரை மணிமொழியாரின் நினைவேந்தல் கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது, சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் கோ.விசயராகவன் டாக்டர் கே.கே.பிள்ளை எழுதிய
இந்த வார கலாரசிகன்

மதுரை மணிமொழியாரின் நினைவேந்தல் கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது, சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் கோ.விசயராகவன் டாக்டர் கே.கே.பிள்ளை எழுதிய "தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்' என்கிற புத்தகத்தை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். முன்பு எப்போதோ படித்திருந்த அந்தப் புத்தகத்தை மற்றொருமுறை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
1972-ஆம் ஆண்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்திற்காக வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் கே.கே.பிள்ளையால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், இதுவரை 13 பதிப்புகள் கண்டிருக்கின்றன என்றால், அந்தப் புத்தகத்தின் அருமையைப் புரிந்து கொள்ளலாம். அகழாய்வுகள் மூலம் கிடைத்த வரலாற்றுச் சான்றுகளுடன், தமிழக வரலாற்றுக்கான அடிப்படைத் தரவுகளை ஒருங்கே திரட்டி, வரலாற்றுக்கு முந்தைய தமிழகம், சங்க காலத்திய வரலாறு, இடைக்காலத் தமிழக வரலாறு, அயலகத்தார் குறிப்புகள், அந்நியர் ஆட்சியில் தமிழக வரலாறு எனக் கால வரிசைப்படி வரையறுத்து, டாக்டர் கே.கே.பிள்ளை இந்நூலை எழுதியிருக்கிறார் என்பதுதான் தனிச்சிறப்பு.
தமிழக வரலாறு குறித்த இந்நூலைத் தொகுத்திருக்கும் டாக்டர் கே.கே.பிள்ளை சில அடிப்படை உண்மைகளைத் தனது முன்னுரையில் தெரிவிக்கிறார். பழந்தமிழரின் வாழ்க்கை முறைகளையும் பண்பாட்டையும் அறிந்து கொள்வதற்குச் சங்க இலக்கியம் நமக்குப் பெரிதும் பயன்படுகின்றது என்றும், 
சங்காலத் தமிழர் பண்பாடுகளே தமிழரின் வரலாறு முழுவதிலும் தொடர்ந்து வந்து அவர்களுடைய வாழ்க்கையின் வளர்ச்சிக்கு அடிகோலி வந்துள்ளன என்பதும் அவரது கருத்து. அதேபோல, கல்வெட்டுச் செய்திகள் அனைத்தையும் நம்பிவிட முடியாது என்றும், கல்வெட்டில் கூறப்பட்டுள்ளவற்றை இலக்கியச் சான்றுகளுடனும் வேறு குறிப்புகளாலும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.
தமிழக வரலாறு குறித்துத் தெரிந்துகொள்ள விழைபவர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய, தங்களது சேகரிப்பில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய அரிய தகவல் பெட்டகம் "தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்' என்கிற இந்தப் புத்தகம்.

நேற்று சென்னை அம்பத்தூர் மண்ணூர்பேட்டையில் நடந்த தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின் விழாவில் பெரியவர் கரு.பேச்சிமுத்துவை சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. தமிழ் மீது தாளாப்பற்றுகொண்ட கரு.பேச்சிமுத்து "பிழை தவிர்' என்கிற புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார்.
தன்னுடைய ஓய்வூதியப் பணத்தில் இந்தப் புத்தகத்தை வெளியிட்டு பரப்புரை செய்கிறார் அவர். தமிழில் புழக்கத்தில் இருக்கும் பிழைகளை எல்லாம் சுட்டிக்காட்டி எப்படி அவை சரியாகக் கையாளப்பட வேண்டும் என்று தொகுத்துப் பட்டியலிட்டிருக்கிறார். மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஆசிரியர்களுக்கேகூட இந்தக் கையேடு தேவைப்படுகிறது என்று 
தோன்றுகிறது, பத்திரிகையாளர் உட்பட!

சில புத்தகங்கள் நம்மைத் தொடர்ந்து சிந்திக்கும்படி செய்துவிடுகின்றன. அப்படிப்பட்ட புத்தகம் அனுபம் மிசுரா என்பவர் எழுதியிருக்கும் "குளங்கள் இன்றும் உயிர் வாழ்கின்றன'. சரவணா இராசேந்திரனால் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கும் இந்தப் புத்தகம் அற்புதமான ஆவணப்பதிவு. குளங்கள் குறித்த சில பதிவுகள், தகவல்கள் நமது கண்களைக் குளமாக்கி விடுகின்றன.
""உலகில் 1,234,000,000,000,000,000,000 லிட்டர் தண்ணீர் உள்ளது. இவ்வளவு நீர் இருந்தும்கூட இதில் 96.5 சதவீதம் கடல்நீர், உப்புநீர். ஏறத்தாழ இன்னுமொரு விழுக்காடு நிலத்தடி உப்புநீரும் உப்புநீரேரி முதலானவையும். ஆக வெறும் 2.5 சதவீதம் மட்டுமே நன்னீர், இந்த நன்னீரிலும் பெரும்பகுதி பனிக்கட்டியாய் உறைந்திருப்பது வெறும் 0.07 சதவீதம் தண்ணீர்தான் உலகில் வாழும் மனிதர்கள் உள்ளிட்ட அத்தனை உயிரினங்களுக்கும் பயன்படுகிறது'' - இந்தப் புள்ளிவிவரங்களைப் படிக்கும்போது "பகீர்' என்று இருக்கிறது.
இதை நமது மூதாதையர்கள் உணர்ந்திருந்தார்கள். அவர்களுக்குத் தண்ணீரின் அருமை தெரிந்திருந்தது. 17ஆம் நூற்றாண்டு வரை குளங்கள் வெட்டும் பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன. அசோகர் காலத்திலிருந்து வெட்டப்பட்டுக் கொண்டிருந்த குளத்துப் பணிகள் எல்லாம் 17ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மெல்ல மெல்லக் குறையத் தொடங்கின. ஆனாலும்கூட, குளங்களைத் தூர்வாரும் பணி முறையாக நடந்து வந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகுதான் வளர்ச்சி என்கிற பெயரில் குளங்களும், ஏரிகளும் குடியிருப்புகளாக மாற்றப்படத் தொடங்கின.
குளங்கள் குறித்த நீண்டதொரு ஆய்வை மேற்கொண்டவர் அனுபம் மிசுரா. இவர் கலப்படமில்லாத காந்தியவாதி, எழுத்தாளர், சூழலியல் ஆர்வலர். காந்தியடிகளின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அனுபம் மிசுரா, இந்தியா முழுவதும் பயணம் செய்து நடத்திய ஆய்வுதான் (ஆஜ்பி ரஹே ஹை தாலாப்) '"குளங்கள் இன்றும் உயிர் வாழ்கின்றன' என்கிற அமரத்துவமான புத்தமாக உருவாகி இருக்கிறது.
இதைத் தமிழில் மொழிபெயர்த்த சரவணா இராசேந்திரனை எத்துணை பாராட்டினாலும் தகும். ஏதோ மொழிபெயர்த்திருக்கிறோமே என்றில்லாமல், உணர்வுப்பூர்வமாக மொழிபெயர்ப்பு செய்திருக்கும் அவரது முயற்சிக்கு வாழ்த்துகள். நிறைய நிறைய செய்திகள், நல்ல நல்ல தகவல்கள், ஏராளமான புள்ளிவிவரங்கள்.

கட்செவி அஞ்சலில் எனக்கு அனுப்பித் தரப்பட்டிருந்தது கவிஞர் கந்தர்வன் எழுதிய "வர்க்கச் சண்டை' என்கிற கவிதை. பிடித்திருந்தது, அதனால் அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

பழைய சோறும்
பாதாம் கீரும்
ஒரு வயிற்றுணவாய்
ஒரு நாளும் ஆவதில்லை.
அப்படியே போனாலும்
வர்க்கச் சண்டை
வயிற்றுக்குள்ளும் நடக்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com