இந்த வாரம் கலாரசிகன்

கடந்த செவ்வாய்க்கிழமை மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட இளந்தமிழர் இலக்கியப் பட்டறையில் உரையாற்றப்போன எனக்குப்
 இந்த வாரம் கலாரசிகன்

கடந்த செவ்வாய்க்கிழமை மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட இளந்தமிழர் இலக்கியப் பட்டறையில் உரையாற்றப்போன எனக்குப் பல இன்ப அதிர்ச்சிகள். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டபோது, நான் இந்த முயற்சி குறித்துப் பதிவு செய்திருக்கிறேன்.
 ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வமும், பேச்சாற்றலுமுள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு அடிப்படை இலக்கியத்திலிருந்து, கதை, கவிதை, கட்டுரை எழுதுவது, மேடையில் உரையாற்றுவது, தமிழ் இலக்கியத்தில் புரிதலை ஏற்படுத்துவது உள்ளிட்ட சீரிய பணிகளைச் செவ்வனே செய்து வருகிறது தமிழ் வளர்ச்சித் துறை. கடந்த ஏழு ஆண்டுகளில் 2,500-க்கும் அதிகமான இளைஞர்கள் இந்த இலக்கியப் பட்டறையில் பயிற்சி பெற்றுத் தமிழகமெங்கும் இலக்கிய மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அசாதாரணமான சாதனை!
 ஏழாவது பயிற்சிப் பட்டறைக்கு அரங்கத்தில் கூடியிருந்த இளைஞர்களில் பாதிக்குப் பாதி பெண்கள் இருந்தனர். அவர்களது கண்களில் காணப்பட்ட ஒளி, இலக்கிய தாகம், தமிழ்ப் பற்று மெய்சிலிர்க்க வைத்தன. பாரதி கனவு கண்ட "ஒளிபடைத்த கண்ணினாய் வா... வா... வா...' என்பதை நனவாக்கிக் கொண்டிருக்கிறது தமிழ் வளர்ச்சித் துறையின் இளந்தமிழர் இலக்கியப் பட்டறை.
 கடந்த மூன்றாண்டுகளில் மதுரைக்குப் பல முறை பயணித்து விட்டிருந்தாலும், இதுவரை உலகத் தமிழ்ச் சங்கத்துக்குப் போனதில்லை. 2015-ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 2016-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டிருக்கிறது. 400 பேர் அமரும் வகையிலான அதிநவீன கலையரங்கம், 200 பேர் அமரும் சிற்றரங்கம், 30 பேர் அமரும் கூட்ட அறை உள்ளிட்ட 20 அறைகளுடன் சுமார் 89 ஆயிரம் சதுர அடியில் எழும்பி நிற்கிறது அந்தக் கட்டடம். உலகத் தமிழ்ச் சங்க நூலகத்தில் ஏறத்தாழ பதினாறாயிரம் நூல்கள் உள்ளன.
 பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூ.6 கோடியில் ஒரு நவீன நூலகமும், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.55 கோடியில் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடமும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. உலக அளவிலான தமிழ்ச் சங்கங்கள், அமைப்புகள், தமிழ் நிறுவனங்களை ஒருங்கிணைப்பது, அவை குறித்த விவரங்களைத் தொகுப்பது, வெளிநாடு வாழ் தமிழர்களுக்குத் தமிழ் இலக்கியங்களைக் கொண்டு சேர்ப்பது, வெளிநாடு வாழ் தமிழறிஞர்களை உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு அழைத்துவந்து கருத்தரங்கம், ஆய்வரங்கம் நடத்துவது, உலக அருங்காட்சியங்களில் உள்ள அரிய தமிழ் ஓலைச்சுவடிகளையும், கலைப் பொருள்களையும் சேகரித்து அவற்றின் தரவுகளைத் திரட்டுவது உள்ளிட்ட உயரிய நோக்கங்களுடன் உலகத் தமிழ்ச் சங்கம் செயல்படுவது பேருவகை அளிக்கிறது.
 பல மூத்த தமிழறிஞர்கள், தங்கள் வாழ்நாளில் மிகுந்த பொருள்செலவில் பல அரிய நூல்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள். தங்களது காலத்துக்குப் பிறகு அவை எடைக்குப் போடப்பட்டு விடுமோ என்கிற கவலையில் கழிகிறது அவர்களது எஞ்சிய வாழ்க்கை. உலகத் தமிழ்ச் சங்கம் அந்த அறிஞர்களின் புத்தகங்களை, "இன்னாருடைய சேகரிப்பு' என்கிற அறிவிப்புடன் உலகத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பாதுகாக்க வழிகோலினால், ஆயிரக்கணக்கான அரிய நூல்கள் அழிந்து விடாமல் காப்பாற்றப்படும். இது தமிழ் வளர்ச்சித் துறைக்கும், உலகத் தமிழ்ச் சங்கத்துக்கும் எமது தாழ்மையான வேண்டுகோள்.
 மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் இயக்குநர் கா.மு. சேகர், தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் இயக்குநர் கோ. விசயராகவன், தமிழ்வளர்ச்சித்துறை (மதுரை மாவட்டம்) துணை இயக்குநர் க.பசும்பொன் ஆகிய மூவர் அணியின் அயராத உழைப்பு தமிழுக்கு உரம் சேர்க்கிறது. அவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுகள்!
 
 
 திடீரென்று சுப. உதயகுமாரனின் நினைவு வந்தது. நீண்ட நாள்களாக சுப. உதயகுமாரனின் நடுப்பக்கக் கட்டுரை எதுவும் "தினமணி'யில் வெளிவரவில்லையே என்று நினைத்துக் கொண்டபோது, புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்த "ஒற்றைக் குடும்பந்தனிலே: வீடுதோறும் கலையின் விளக்கம்' என்கிற அவரது புத்தகத்தைப் படிப்பதற்காக எடுத்து வைத்திருந்தது சட்டென ஞாபகம் வந்தது. கோவை - மதுரை பயணத்தின்போது எனக்கு அந்தப் புத்தகம்தான் வழித்துணையாக இருந்தது.
 கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளி என்பது சுப. உதயகுமாரனின் ஒரு முகம். அவ்வளவே. சுற்றுச்சூழல் ஆர்வலர், வருங்காலவியல் குறித்த ஆய்வாளர், சமூக சிந்தனையாளர் என்று இப்படிப் பல பரிமாணங்களைக் கொண்ட ஆளுமை அவர்.
 "அமில வீச்சு, கும்பல் கொலை உள்ளிட்ட சமூக அவலங்களுக்கு என்ன காரணம், யார் பொறுப்பு? நாடாளுமன்றம், சட்டப்பேரவை, நகராட்சி, ஊராட்சி மன்றங்கள், அரசு அலுவலகம், பணியிடம், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், காவல் நிலையம், நீதிமன்றம், சிறைச்சாலை இவை எவையுமே தீர்வாகாது. மகாகவி பாரதியார் சொன்னதுபோல, "வீடுதோறும் கலையின் விளக்கம் ஏற்படுத்துவதுதான் தீர்வு'' - இதுதான் சுப.
 உதயகுமாரனின் புத்தகத்தின் அடிநாதமான செய்தி.
 இடிந்தகரை போராட்டத்தின்போது அவர் முகநூலில் எழுதிய கருத்துகளைத் தொகுத்து கட்டுரையாக்கி இருக்கிறார். வீடு எப்படி இருக்க வேண்டும். அதன் வழி நாடு எப்படி செம்மையாகும் என்கிற சீரிய கருத்தை பாமரனுக்கும் புரியும் விதத்தில் பதிவு செய்திருப்பதுதான் சுப. உதயகுமாரனின் தனித்துவம். "வீடுதோறும் கலையின் விளக்கம்' வீடு தோறும் இருந்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு வீட்டிலுமுள்ள ஒவ்வொருவரும் படிக்கவும் வேண்டும். சுப. உதயகுமாரனின் உயரிய சமூக சிந்தனைக்கும், அக்கறைக்கும் தலைவணங்குகிறேன்.
 
 
 இணையத்தில் உலவிக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் தனது வலைப்பூவில் "பூர்ணா'வின் "அகதி' என்கிற கவிதையைப் பதிவு செய்திருந்தார். ரொம்பவே ரசித்தேன். அதனைப் பகிர்ந்து கொள்கிறேன்.
 
 வீட்டு மாடத்திலும்
 மேற்கூரையிலும்
 பறவைகள் வசிப்பதை
 பெருமையாக நினைக்க
 ஒன்றுமில்லை...
 காடுகளை இழந்து
 அகதியாய் வாழ்வதில்
 என்ன பெருமை இருக்கிறது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com