கவி பாடலாம் வாங்க - 34

இரண்டாம் எழுத்து ஒன்றி வரும் எதுகையும் முதலெழுத்து ஒன்றிவரும் மோனையும் இன்னபடி இருந்தால் ஓசையின்பம் மிகுதியாகும் என்பதை முதல் பாகத்திலே பார்த்தோம்.
கவி பாடலாம் வாங்க - 34

5- சிறப்பில்லாத எதுகை மோனைகள் (1)
 இரண்டாம் எழுத்து ஒன்றி வரும் எதுகையும் முதலெழுத்து ஒன்றிவரும் மோனையும் இன்னபடி இருந்தால் ஓசையின்பம் மிகுதியாகும் என்பதை முதல் பாகத்திலே பார்த்தோம். முன் அத்தியாயத்தில் நாற்சீரடியில் வரும் எதுகை மோனைகளின் வகையைப் பார்த்தோம்.
 சிறப்பில்லாத எதுகை மோனை வகைகள் சில உண்டு. முந்தையோர் செய்யுட்களில் அவை இருந்தால் அவற்றிற்கு வகை இன்னதென்று தெரிந்து கொள்ளவே இவற்றை வகுத்திருக்கிறார்கள். ஆதலின், நாம் புதியதாகப் பாடும் பாட்டில் எதுகை மோனை இந்த அளவில் அமைந்தால் போதும் என்று எண்ணக் கூடாது.
 வருக்க எதுகை: ஒரு மெய்யோடு வந்த உயிர்கள் வருக்கமாகும். க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ என்பன ககர வருக்க எழுத்துக்கள். இவை எதுகை வரும் இடத்தில் வந்தால் வருக்க எதுகை ஆகும்.
 "நீடுபுகழ்க் காந்தி நினைவை மறந்ததனால்
 வாடித் தவித்து வருந்துகிறோம்-நாடதனில்
 கூடாரைக் கூடிக் குதர்க்கத்தில் நாள்போக்கிப்
 பாடறியேம் பெற்றேம்துன் பம்'
 இந்தப் பாடலில் டு, டி, ட, டா, ட என்பன ஒன்றற் கொன்று எதுகையாக வந்தன. இது வருக்க எதுகை.
 வருக்க மோனை: மேலே சொன்ன வகையில் மோனை அமைந்தால் அது வருக்க மோனையாம்.
 "பண்புறச் சொற்கள் பாங்காய் அமையப்
 பாடல் பாடும் பழக்கம் வேண்டும்;
 பிழையிலா தெழுதும் பெற்றியங் கின்றேல்
 பீடெங் கிருந்து பெறுதல் கூடும்?
 புதுமைக் கருத்தும் பொற்புறு சந்தமும்
 பூணும் அணியெனப் பொருந்தலங் காரமும்
 பெரியோர் போற்றும் அரிய கருத்தும்
 பேணி அமையப் பெட்புறும் கவிதை;
 பையப் பைய இயற்றிற் பனுவலைப்
 பொருத்த மாகவே பூர்த்திசெய் திடலாம்;
 போனக மனைய இனிமையும் பொருளிற்
 பௌவமென் ஆழமும் அமைந்து படருமே'
 இந்தப் பாடலில் அடியின் முதலெழுத்துக்கள் பகர வருக்கமாகவே வந்திருத்தலின், இது பகர மெய் வருக்க மோனை.
 நெடில் எதுகை:
 "ஆவா எனவேங்கி அல்லாந்து சோகாத்துப்
 பாகா யுருகிப் படர்ந்தார் சிலமாதம்'
 இதில் இரண்டாம் எழுத்துக்கள் நெடிலாக அமைந்தன. இது நெடில் எதுகை.
 நெடில் மோனை:
 "ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
 ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை'
 இதில் முதல் எழுத்துக்கள் ஒன்றி வராவிட்டாலும் அவை நெடிலாக இருப்பதனால் நெடில் மோனை ஆயிற்று.
 இன எதுகை: இன எழுத்துக்கள் ஒன்றிவரத் தொடுத்தால் இன எதுகை. அது வல்லின எதுகை, மெல்லின எதுகை, இடையின எதுகை என்று மூன்று வகைப்படும்.
 "தக்கார் தகவில ரென்ப தவரவர்
 எச்சத்தாற் காணப்படும்'
 இந்தக் குறளில் இரண்டாம் எழுத்துக்கள் ஒன்றி வராவிடினும் அவை வல்லினமாக அமைந்துள்ளன. இது வல்லின எதுகை.
 "அச்சத் தாலே ஆழ்ந்திடு கின்றேன் அண்ணாஎன்
 பக்கத் தேவந் தின்ப மளித்தாற் பாங்கின்றோ?'
 இதிலும் வல்லின எதுகை வந்தது.
 "அன்பீனு மார்வ முடைமை யதுவீனும்
 நண்பென்னு நாடாச் சிறப்பு'
 இந்தக் குறளில் இரண்டாம் எழுத்துக்கள் ஒன்றி வராவிடினும் அவை மெல்லினமாக வந்தமையின், இது மெல்லின எதுகை.
 "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
 பொய்யா விளக்கே விளக்கு'
 இதில் இரண்டாம் எழுத்தாக லகர யகரங்கள் வந்தமையால் இது இடையின எதுகை.
 இன மோனை: இன எதுகைக்குச் சொன்னபடியே மோனை வரும் இடங்களில் இன எழுத்துக்கள் வந்தால் அது இன மோனை ஆகும்.
 "கருத்துச் செறிவும் கவினார் ஓசையும்
 சிறப்பச் சேரும் திறமுறின் கவியாம்;
 திருத்த மின்றிச் சீரிற் சிதைவுறப்
 பொருத்த மில்லாச் சொற்கள் புகுத்திச்
 செய்யும் கவியைச் செய்யுளாக் கொள்ளார்
 தண்டமிழ் நெறியின் தகையுணர்ந் தோரே'
 இந்தப் பாட்டில் ஒவ்வோர் அடியின் முதலிலும் வல்லின எழுத்துக்கள் வந்தன. இது வல்லின மோனை.
 "நட்டாரை வாழ்த்தி நலஞ்செய்வார் தம்பாலே
 மெச்சிப் புகுவார் பலர்'
 இதில் மெல்லின மோனை வந்தது.
 "யானை யனையார் எலியனையார் என்றிருவர்
 வாழ்வார்இவ் வையகத்து'
 இதில் இடையின மோனை வந்தது.
 (தொடர்ந்து பாடுவோம்...)
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com