வேண்மாள் விளம்பிய விழுமிய கருத்து

சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் அறிவாற்றல்மிக்க தன் துணைவி வேண்மாளுடன் மலைவளம் காணச் செல்கிறான்.
வேண்மாள் விளம்பிய விழுமிய கருத்து

சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் அறிவாற்றல்மிக்க தன் துணைவி வேண்மாளுடன் மலைவளம் காணச் செல்கிறான்.
 அப்போது புலவர் ஒருவர் ஓடிவந்து மன்னனை வணங்கி ""மன்னரே! நமது மலைப் பகுதியில் உள்ள வேங்கை மரத்தடியில் கண்ணீர் வழிய ஓர் இளம் பெண் நின்றாள். அவள் எந்நாட்டவளோ, யார் மகளோ தெரியவில்லை. சிறிது நேரத்தில் வானிலிருந்து வந்த தேரில் அவள் வானகம் செல்லக் கண்டோம்'' என்கிறான்.
 இதைக் கேட்ட மன்னன் திகைப்பும், வியப்பும் அடைந்ததோடு அங்கிருந்த அருந்தமிழ்ப் புலவராம் சாத்தனாரிடம் அப்பெண்ணின் (கண்ணகி) வரலாற்றை விரித்துரைக்குமாறு வேண்டிக் கொள்கிறான்.
 சாத்தனார், அக்கதையை உணர்ச்சியோடு எடுத்துரைக்கிறார். கண்ணகி அவலத்தையும் கோப்பெருந்தேவியின் குன்றாத அன்பினையும் எண்ணி மன்னன் நெகிழ்ந்தான்.
 மகளிர் இருவரையும் மனதுக்குள் பாராட்டுகிறான். ஆனால் இருவருள் யாரேனும் ஒருவருக்குத்தான் சிலையெடுத்து, கோயில் கட்டி வழிபாடு செய்ய விழைகிறான்.
 தன்னருகில் இருக்கும் தன் அருமைத் துணைவியான வேண்மாளை நோக்கி, ""கண்ணகி, கோப்பெருந்தேவி ஆகிய இருவருள் யாருக்கு நாம் சிலையெடுக்க வேண்டும்?'' என்று வினவுகிறான்.
 இதற்கு வேண்மாள், தன் நுண்ணறிவுத் திறனால் அனைவரும் மகிழ்ந்து போற்றும் சீர்மிகுந்த கருத்தை மொழிகின்றாள்.
 "அன்புத் துணைவனின் துயரத்தை ஆற்றாது உயிர் நீத்த கோப்பெருந்தேவி விண்ணுலகத்தில் நற்பேறு அடைவாளாக! அவ்வாறு இருக்க, நமது நாட்டின் எல்லையில் அடியெடுத்து வைத்த அப்பத்தினி தெய்வமாம் கண்ணகியை நாம் வணங்கி வாழ்த்தி, வழிபாடு செய்தல் வேண்டும்'' என்கிறாள்.
 சேர மன்னன் செங்குட்டுவனோ, நற்பண்பும், நாவன்மையும் மிக்க தன் துணைவியின் அறிவுரைப்படியே கற்பரசி கண்ணகிக்கு இமயத்திலே கல்லெடுத்து, கங்கையிலே நீராட்டி, வஞ்சி மாநகரிலே கோயில் அமைத்து, அனைவரும் வழிபடும் கோயில் அமைத்தான் என்பது வரலாறு.
 இங்கு வேண்மாள் வெறும் சோலை வளம் காண வந்த அரசமா தேவியாக இல்லாமல், அனைவரும் மகிழ்ந்து போற்றும் அரிய பெரிய கருத்தையும் மொழிந்துள்ளார். கோப்பெருந்தேவி வானுலகில் இயற்கையான நற்பேற்றை அடைந்தே தீருவார் என்பதை வேண்மாள் திண்ணமாக அறிந்துள்ளதை இத்தொடர் விளக்குகிறது.
 தன்நாட்டு எல்லையிலே காலடி எடுத்து வைத்த கண்ணகியாகிய வீரச்செல்வியை நாம் வழிபட வேண்டும் என்றுரைக்கும் வேண்மாளின் ஆழ்ந்த சிந்தனை, அருகே இருந்த புலவர் பெருந்தகையும் ஏற்கத்தக்கதாக அமைகிறது.
 வேண்மாள், சாதாரண அரசியாக இல்லாமல் மாட்சிமைமிக்க கருத்தினைப் பொழியும் உயர்ந்த பெண்ணரசியாகவும் திகழ்ந்திருக்கிறாள்! அப்பெருமாட்டி என்றென்றும் நம் சிந்தையில் நிறைந்திருக்கிறாள்.
 - ஆர். ராஜேஸ்வரி ஸ்ரீதர்
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com