கவி பாடலாம் வாங்க - 28: யாப்பிலக்கணம் - 3

யாப்பிலக்கணத்தில் இரண்டு வகையான முறைகள் இருந்தன என்று தெரிகிறது. அசைகளை நேர்-நிரை-நேர்பு-நிரைபு என்று பிரித்தும், அடிக்கு எழுத்தெண்ணிக் கணக்குப் பண்ணிக் கட்டளையடி என்று வகுத்துப் பெயரிட்டும்
கவி பாடலாம் வாங்க - 28: யாப்பிலக்கணம் - 3

யாப்பிலக்கணத்தில் இரண்டு வகையான முறைகள் இருந்தன என்று தெரிகிறது. அசைகளை நேர்-நிரை-நேர்பு-நிரைபு என்று பிரித்தும், அடிக்கு எழுத்தெண்ணிக் கணக்குப் பண்ணிக் கட்டளையடி என்று வகுத்துப் பெயரிட்டும், தளைக்கு இலக்கணம் கூறாமல் விட்டும், பாவினம் என்ற பிரிவைக் கொள்ளாமலும் இலக்கணம் வகுத்தவர் ஒரு சாரார். தொல்காப்பியத்தில் இந்த முறையைக் காணலாம். அந்நூலின் உரையில் தளை வகுத்தல் தொல்காப்பியருக்கும் அவரைப் பின்பற்றி நூல் இயற்றிய ஆசிரியர்களுக்கும் உடம்பாடு அன்று என்று பேராசிரியர் வற்புறுத்திக் கூறுவார். விருத்தம் போன்ற பாடல்களைக் கொச்சகம் என்ற வகையில் பழைய ஆசிரியர்கள் அடக்குவர் என்பதைச் சிலப்பதிகார உரையினால் அறியலாம்.
ஆனால், இந்த முறை நீண்ட காலத்துக்கு முன்பே வழக்கு இழந்திருக்க வேண்டும். சீர்வகைப்படி அடிவரையறை செய்தலும், தளையை வகுத்தலும், பாவினங்களை ஏற்பதுமாகிய முறையை மயேச்சுவரர் என்பவர் விரிவாகத் தம் இலக்கணத்தில் உரைத்திருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. அந்த முறைப்படி நூல்களை இயற்றினார் அமுதசாகரர். வெண்பா முதலியவற்றுக்குச் செப்பலோசை முதலிய ஓசைகள் உண்டு என்று இலக்கணம் கூறினாலும், அவற்றைத் தளையினாலும் அடியினாலும் தெரிந்து கொள்ளும்படி யாப்பருங்கலக்காரிகை வழிகாட்டுகிறது. தொல்காப்பியரின் வழியைப் பின்பற்றினவர்கள், ஓசையை அந்தத் துறையில் பழக்கமுடையவர்கள் கேட்ட மாத்திரத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று கூறுவர். "பா என்பது சேட்புலத்தில் இருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமற் பாடம் ஓதுங்கால், அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற்கு ஏதுவாகிப் பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை' (தொல்.செய்யுளியல், 1 உரை) என்பார் பேராசிரியர்.
எழுத்தை எண்ணி அடி வகுக்கும் முறையைக் கட்டளைக் கலிப்பா, கட்டளைக் கலித்துறை என்னும் இருவகைச் செய்யுட்களில் மட்டும் இப்போது காண்கிறோம். இவற்றுக்கு இலக்கணம் யாப்பருங்கலக்காரிகையில் இல்லை; அதன் உரையாசிரியர் உரையிடையே வகுத்துரைக்கிறார். யாப்பருங்கலக்காரிகை யென்னும் நூலே கட்டளைக் கலித்துறையால் ஆனது. அதற்கு அந்நூலில் இலக்கணம் இல்லாதது வியப்பாகத் தோன்றுகிறது அல்லவா?
இப்போது காரிகையே புலவர்களிடையே பெருவழக்காக இருக்கிறது. தொல்காப்பியச் செய்யுளியல் இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் என்னும் ஆசிரியர்களுடைய உரையுடன் இருந்தும் அதனை ஆராய்கிறவர்கள் இல்லை. எளிதாக மனனம் பண்ணும் வகையில் சுருக்கமாய் அமைந்திருப்பதால் யாப்பருங்கலக்காரிகை புலவர் உலகில் இன்று விளக்கத்துடன் நின்று நிலவுகிறது. காரிகை என்பது கட்டளைக் கலித்துறைக்குரிய பெயர். ஆனால், காரிகையென்றவுடன் யாப்பருங்கலக்காரிகையே தமிழ் படித்தவர்களின் நினைவுக்கு வரும். யாப்பருங்கலக்காரிகை என்ற நீண்ட பெயர் சுருங்கிக் காரிகை என்று சொன்ன அளவிலே இன்ன நூல் என்று தெரிந்து கொள்ளும்படி அந்நூலின் பெருமை இருக்கிறது. இந்த நூலை இயற்றியதற்காக அமுதசாகரருக்குக் குளத்தூர் என்ற ஊரை அரசன் வழங்கினான். அதற்குக் "காரிகைக் குளத்தூர்' என்ற பெயர் அமைந்தது.
பழங்காலத்தில் நான்கு வகைப் பாக்களோடு பரிபாடல் என்ற பாவும் புலவர்களால் பாடப்பெற்றது. அகத்துறைக்குச் சிறந்தவை கலிப்பாவும் பரிபாடலும் என்று தொல்காப்பியர் சொல்கிறார். ஆதலின் அவ்வகைப் பாடல்கள் தொல்காப்பியர் காலத்திலும் அவருக்கு முன்பும் மிகுதியாக உண்டாயின என்று தோன்றுகிறது. நாளடைவில் பரிபாடûலைப் பாடுபவர் குறைந்தனர். எட்டுத்தொகை நூல்களில் ஒன்று பரிபாடல் என்ற பெயரோடே இருக்கிறது. கடைச்சங்க காலத்தில் ஆசிரியப் பாக்களே மிகுதியாக இருந்தன. வெண்பாக்களும் உண்டு. ஆனால், தேவாரத் திருமுறைகளும் திவ்யப் பிரபந்தங்களும் எழுந்த பிறகு பாவினங்களே மிகுதியாகத் தோன்றின.
அவற்றிலும் விருத்தங்கள் மல்கின. சீவகசிந்தாமணி முதலிய பெருங்காப்பியங்கள் முழுவதும் விருத்தங்களால் அமைந்தன. "விருத்த மென்னும் ஒண்பாவுக்குயர் கம்பன்' தோன்றிப் பதினாயிரம் விருத்தங்களால் இராமாயணத்தைப் பாடினான். நான்கு சீர்களால் வரும் கொச்சகக் கலிப்பாவும், ஐந்து சீர்களால் வரும் கலித்துறையும் விருத்தங்களின் வகைகளைப் போலவே அமைந்தன. ஆகவே, விருத்தங்களே பிற்காலக் கவியுலகில் வீறுநடை போட்டன என்று சொல்லலாம். ஒரு புலவர் விருத்தப் பாவியல் என்று தனியே ஒரு நூலாக விருத்தத்துக்குரிய இலக்கணத்தை எழுதினார்.
இப்போது இசைப் பாட்டுக்களும் இயற்பாக்களோடு சேர்ந்து கலந்து வழங்குகின்றன. பழங்காலத்தில் இசைப் பாக்களாகிய உருப்படிகளுக்குரிய இலக்கணம் இருந்திருக்க வேண்டும். கட்டளை என்ற கணக்கு இசைப்பாக்களிலும் உண்டென்று திருமுறை கண்ட புராணத்தால் புலனாகின்றது.
இப்போது இசைப் பாக்களாகிய உருப்படிகளுக்கு வரையறையான இலக்கணம் ஏதும் இல்லை. எதுகை, மோனைகளை அமைத்தும், தாளத்தைக் கொண்டு ஓசையை வரையறுத்தும் புலவர்கள் சாகித்யங்களைப் பாடுகிறார்கள். ஆயினும், அவற்றுக்குரிய இலக்கணத்தை வரையறுத்து நூல் செய்தவர் யாரும் இல்லை.
கண்ணி, சிந்து, கந்தருவ மார்க்கச் செய்யுள் என்பன இலக்கியங்களிடையே வருகின்றன. இப்போது கீர்த்தனங்களும் வேறு வகையான இசைப் பாடல்களும் வந்துவிட்டன. எல்லாவற்றுக்கும் ஏற்ற இலக்கணங்களை வரையறுக்க வேண்டியது அவசியம். இயற்பாவுக்கும், இசைப்பாவுக்கும் பொதுவான உறுப்புக்கள் எழுத்து, அசை, சீர், தொடை என்பவை. இவற்றையன்றி, அடி, பாட்டின் உறுப்பு (பல்லவி போன்றவை) ஆகியவைகளைப் பற்றியும் பாட்டின் வகைகளைப் பற்றியும் ஆராய்ந்து, பொதுவான இயல்புகளைத் தெரிந்து, வகுத்து இலக்கணம் அமைக்க வேண்டும். இயலும் இசையும் தெரிந்த புலவர்கள் இந்தத் துறையில் புகுந்து ஆராய்ந்து முடிவுகட்டினால் ஒரு புதிய யாப்பிலக்கணத்தை இயற்ற முடியும்.

(தொடர்ந்து பாடுவோம்...)

-முதல் பாகம் நிறைவுற்றது-

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com