பசியிலும் நகைச்சுவை!

பசிப்பிணியை "பாவி' என்றார் மணிமேகலை ஆசிரியர். "பத்தும் பசிவந்திடப் பறந்து போம்' (நல்வழி-26) என்பது ஒளவையார்பாடல். பசி மிகுந்த நிலையில் கோபம் வரும்; வேளைக்கு உணவு கிடைக்கவில்லையே என்று ஆத்திரம் வரும்
பசியிலும் நகைச்சுவை!

பசிப்பிணியை "பாவி' என்றார் மணிமேகலை ஆசிரியர். "பத்தும் பசிவந்திடப் பறந்து போம்' (நல்வழி-26) என்பது ஒளவையார்பாடல். பசி மிகுந்த நிலையில் கோபம் வரும்; வேளைக்கு உணவு கிடைக்கவில்லையே என்று ஆத்திரம் வரும்; "ஏற்பது இகழ்ச்சி' எனினும் இரந்தும் உணவு உண்ணத் தோன்றும். மேலும், "இடும்பைக்கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது' என்றும் கூறினார் ஒளவையார். பசியின் கொடுமையிலும் புலவர் ஒருவர் நகைச்சுவை உணர்வோடு பாடிய பாடலைக் காண்போம்.
அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்பவர் பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர். அதனால், ஓர் உதவியாளர் எப்போதும் அவருடன் இருப்பார். அக்காலத்தில் நடந்தே பல ஊர்களுக்கும் செல்வர். வழியில் பசித்தால் உணவு உண்ண கையோடு கட்டுச்சாதம் எடுத்துச் செல்வர்.
ஒரு நாள் வீரராகவரும் உதவியாளரும் வெளியூருக்குச் சென்றனர். பகல் 12 மணி ஆயிற்று. வழியில் ஓர் ஊருணி தென்பட்டது. உதவியாளர் புலவரிடம், ""ஐயா! இந்த மர நிழலில் அமருங்கள். உங்கள் எதிரே கட்டுச் சாத மூட்டையை வைக்கிறேன்; நான் சென்று கை, கால்களைத் சுத்தம் செய்துவிட்டு, பாத்திரத்தில் நீர் கொண்டு வருகிறேன். பின் இருவரும் உணவு உண்ணலாம்'' என்றார்.
புலவரும், ""நல்லது; நீர் சென்று நீர் கொணர்க'' என்றார். உதவியாளர் அவ்விடம் விட்டு அகன்று குளத்தில் இறங்கினார். அந்நிலையில் ஒரு நாய் வேகமாக வந்து கட்டுச் சாத மூட்டையைக் கவ்வி எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தது.
உதவியாளர் வந்து ""ஐயா! உங்கள் எதிரே வைத்துவிட்டுச் சென்ற கட்டுச் சோறு மூட்டை இல்லையே'' என்றார். அது கேட்டு திடுக்கிட்ட புலவர், தம் கைகளால் தரையைச் தடவிப் பார்த்தார். 
தொலைவில் ஒரு நாய் அம்மூட்டையைக் கவ்விக்கொண்டு ஓடுவதை உதவியாளர் பார்த்துவிட்டு, அதைப் புலவரிடம் வருத்தத்துடன் கூறினார். 
உடனே அந்தகக்கவி வீரராகவர், கடும் பசி மிக்க நிலையிலும் தெய்வங்களின் வாகனங்களின் பெயரை அமைத்து நசைச்சுவை உணர்வுடன் ஒரு பாடலைப் பாடினார்.
""சீராடையற்ற வயிரவன் வாகனம் சேரவந்து
பாராரும் நான்முகன் வாகனம் தன்னைமுன் பற்றிகெளவி
நாராயணன் உயர் வாகன மாயிற்று; நம்மை முகம்
பாரான் மைவாகனன் வந்து பற்றினானே''
"வயிரவக் கடவுளின் வாகனமாகிய நாய் வந்து, நான்முகன் வாகனமாகிய அன்னத்தை (அன்னம்-பறவை, உணவு) கெளவிக்கொண்டு, திருமாலின் வாகனமாகிய கருடனைப் போல வேகமாக ஓடிவிட்டது. எனவே, ஆட்டை (மை-ஆடு) வாகனமாக உடைய அக்கினி வந்து வயிற்றில் பற்றிக் கொண்டான். (வயிறு குபுகுபு-எனப் பசியால் எரிந்து துடிக்கிறது). 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com