தசாங்கமும் கொடிக்கவியும்!

தமிழ் இலக்கிய மரபில் "கொடிக்கவி' என்பது தனித்த ஓர் இலக்கிய வகையாகும். "தசாங்கம்' எனும் இலக்கிய வகையில் ஓர் உறுப்பாகக் கிளைத்த "கொடி', காலப் பெருவெளியில் கொடிக்கவியாகக் கனிந்தது.
தசாங்கமும் கொடிக்கவியும்!

தமிழ் இலக்கிய மரபில் "கொடிக்கவி' என்பது தனித்த ஓர் இலக்கிய வகையாகும். "தசாங்கம்' எனும் இலக்கிய வகையில் ஓர் உறுப்பாகக் கிளைத்த "கொடி', காலப் பெருவெளியில் கொடிக்கவியாகக் கனிந்தது.
 தசம்-பத்து; அங்கம்-உறுப்பு எனும் பொருளைக் குறிக்கும் தசாங்கம் எனும் தமிழ்ச் சொல் பத்துவிதமான வாசனைப் பொருட் கலவையைக் குறிக்கும். அரசுக்கு உரிய பத்து உறுப்புகளை உள்ளடக்கிய இந்த இலக்கிய வகைக்கு உரிய வித்து, தொல்காப்பிய மரபியலில் (1571) குறிப்பிடப்படும் படை, கொடி, குடை, முரசு, நடை, புரவி, களிறு, தேர், தார்(மாலை), முடி ஆகிய பத்தையும் ஒருங்கிணைத்துப் பாடும் மரபு தமிழ் இலக்கியப் பரப்பில் முளைவிட்டது.
 தசாங்கப்பத்து, தசாங்கத்தயல் என்றெல்லாம் இந்த இலக்கிய வகை அமைகின்றது. நேரிசை வெண்பா, ஆசிரிய விருத்தம் முதலிய யாப்பில் அமைகின்ற இந்த இலக்கிய வகை பற்றி முத்துவீரியம்,
 பிரபந்த தீபிகை முதலிய பின்னைய இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன.
 தசாங்க இலக்கிய வகையில் மணிவாசகரின் "திருத்தசாங்கம்' முதல் இலக்கியப் படைப்பாகிறது. தென்பாண்டி நாட்டையும், உத்தரகோசமங்கை ஊரையும் ஆனந்தமாகிய ஆற்றையும், சூலப்படையையும் உடைய தேவர்பிரானாகிய சிவனது கொடி "ஏறு' எனும் இடபம் என்பார் மணிவாசகர்.
 சொருபானந்தர் மீது தத்துவராயர் 15ஆம் நூற்றாண்டில் பாடிய தசாங்கம், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் திருச்செந்தில் பிரபந்த நூலுள் பாடிய "தசாங்க வகுப்பு' முதலியவற்றுள் "கொடி' பாடப்படுகின்றது.
 மகாகவி பாரதி, பாரத தேவியின் திருத்தசாங்கம் பற்றிப் பாடுகின்றார். பாரத தேவி எனும் நாமம் உடைய தேவியின் கொடியாக "குன்றா வயிரக் கொடி'யைப் பாடுகின்றார்.இவ்வாறு தசாங்கம் எனும் இலக்கிய வகையுள் இடம்பெறும் "கொடி'க்குத் தனித்ததோர் இலக்கிய வகை 13ஆம் நூற்றாண்டின் (1300-1325) தொடக்கத்தில் எழுந்தது.
 "கொடி' பற்றிய வித்து, தசாங்கத்துள் தழைத்து, "கொடிக்கவி' எனும் இலக்கிய வகையாகக் கனிந்தது. அக்கனியை நமக்கு தனித்த இலக்கியமாக அளித்தவர், உமாபதி சிவாச்சாரியார் ஆவார்.
 சிதம்பரத்தில், நடராசப் பெருமானை வழிபாடு செய்யும் தில்லை தீட்சிதர் மரபில் உதித்தவர் உமாபதி சிவம். இவர் தம் குருவான மறைஞான சம்பந்த சிவாச்சாரியார் கைவழி வழிந்த கூழை, குருப்பிரசாதமாக உண்டமையால், தீட்சிதர்களால் விலக்கி வைக்கப்பட்டார்.
 ஒரு முறை நடராசப் பெருமான் திருவிழாவில் கொடியேற்றம் தடைப்படுகிறது. எல்லோரும் தவித்து நிற்க, "உமாபதி வந்தால், கொடி ஏறும்' என்ற திருவாக்கு வானில் எழுந்தது. அங்கு வந்த உமாபதிசிவம் பாடிய நான்கு வெண்பாக்களால் கொடியும் ஏறியது; பிற்காலத்தில் "கொடிக்கவி' என்ற சிறு நூலாக -தனித்த இலக்கிய வகையாகவும் அது திகழ்கிறது.
 சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கினுள் ஒன்றான இந்நூல், தத்துவம் சார்புடையதாகும். ஊரில், கோயிலில் விழா தொடங்குவதை அறிவிக்கக் கொடி ஏற்றுதல் மரபு. மற்றொரு மரபு கொடி நாட்டி விவாதம் செய்வர். மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலை கொடிநாட்டி சமயவாதம் செய்தமையைச் சாத்தனார் எடுத்துரைத்துள்ளார்.
 உமாபதி சிவமோ, கொடிக்கவி பாடி தடைப்பட்ட விழா நிகழக் காரணமாகின்றார். அவர் பாடிய வெண்பாக்கள் நான்கே! ஆனால், அவை சைவ சித்தாந்தத்தின் பிழிவாகத் திகழ்கின்றன.
 கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட கொடிமரத்தின் பகுதி கேவலநிலை; வானளாவி உயர்ந்து நிற்கும் கொடிமரத்தின் பகுதி சகலநிலை; பாதாளத்தை ஊடுருவியும் வானளாவியும் உள்ள சிவனே கொடிமரம்; கொடிமரத்தில் கட்டப்பட்டுள்ள கொடிச்சீலை சிவனின் திருவருள். கொடியில் வரையப்பட்டுள்ள இடபம் உயிர்; அதாவது, அநாதி காலம் தொட்டு உயிர், திருவருளோடு தாங்கப்படுகிறது.
 கொடிமரத்தின் உச்சி சுத்த நிலை. கொடியேற்றுதலில் கொடியில் உள்ள இடபம் மேலேறுகிறது. அதாவது, கேவல நிலையிலிருந்து சகல நிலையில் கிடக்கும் உயிர், திருவருளின் துணையால் சுத்தநிலைக்கு மேலேறிச் செல்கிறது. அதாவது உயிரின் ஈடேற்றம் -ஆன்ம ஈடேற்றம் என்பதுதான் கொடியேறுதல் என்பதன் தத்துவார்த்தம் ஆகும். முதலிரு பாடல்களில், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களில் கட்டுண்ட உயிர்கள் திருவருளில் கூடும்படி கொடி கட்டினேன்; இந்த உலகம் முழுவதும் அறியுமாறு கோபுர வாசலில் கொடி கட்டினேன் என்கிறார். மூன்றாவது வெண்பாவில் கொடியேற்றம் நிகழ்ந்தது என்கிறார்.
 
 "வாக்காலும் மிக்க மனத்தாலும் எக்காலும்
 தாக்காது உணர்வரிய தன்மையனை- நேக்கிப்
 பிறித்தறிவு தம்மிற் பிரியாமை தானே
 குறிக்கும் அருள் நல்கக் கொடி'
 
 என்ற செய்யுளில், சித்தாந்த அடிப்படையைச் சுட்டுகிறார். தான் பெற்ற அருள் அனுபவத்தை உலகத்தோர் பெறுதற்கு வழிகாட்டும் உமாபதிசிவத்தின் இந்த அனுபவ நூல், தமிழ் இலக்கிய மரபில் தனித்த இலக்கிய வகையைப் பெற்றது. இதன் நீட்சியாக, மகாகவி பாரதியின் "மாதாவின் துவஜம்' அமைகிறது. தாயுமானவரின் ஆனந்தக் களிப்பு, வர்ணமெட்டு எனும் சந்தத்தில் அமையும் கொடிப்பாட்டாகிறது.
 ஓங்கி வளர்ந்த கம்பத்தின் உச்சியில் வந்தே மாதரம் எனும் வாசகம் துலங்கும் கொடியின் கீழ் இந்தியர்கள் வேறுபாடின்றி சேர்ந்து நிற்பதனை பாரதி போற்றுகிறார். அரசர்க்கு உரிய உறுப்பு ஒன்று இறைவனுக்கு ஆகி, தேசத்திற்கு உரியதாக உயர்ந்தமை, விரிந்த தமிழ் இலக்கியப் பரப்பு மட்டுமன்று, தமிழ்ச் சமூகம் அடைந்த வளர்ச்சியும் அன்றோ?
 -முனைவர் யாழ்.சு.சந்திரா
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com