கவி பாடலாம் வாங்க: வெண்பா இறுதிச் சீர்  - 15

வெண்பாவின் ஈற்றுச் சீர் நாள், மலர், காசு பிறப்பு என்ற வாய்பாட்டில் வரவேண்டும். நேர் என்னும் ஓர் அசையே சீராக வருவதுண்டு; அப்படியே நிரை என்பதும் வரும்.
கவி பாடலாம் வாங்க: வெண்பா இறுதிச் சீர்  - 15

வெண்பாவின் ஈற்றுச் சீர் நாள், மலர், காசு பிறப்பு என்ற வாய்பாட்டில் வரவேண்டும். நேர் என்னும் ஓர் அசையே சீராக வருவதுண்டு; அப்படியே நிரை என்பதும் வரும். நேர் என்ற அசைச்சீரின் வாய்பாடு நாள்; நிரை என்ற அசைச்சீரின் வாய்பாடு மலர்.

""மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்''

என்ற குறளின் ஈற்றுச்சீர் வார் என்பது; அது நேர் என்னும் ஓரசைச்சீர்; ஆகவே, இந்தக் குறள் நாள் என்னும் வாய்பாட்டில் முடிந்தது.

""கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின்''

என்பதில் "ரெனின்' என்பது ஈற்றுச்சீர். இரண்டு குறிலும் ஓர் ஒற்றும் வந்த நிரையசையே சீராக நிற்கிறது; மலர் என்பது அதற்கு வாய்பாடு. ஆகவே இந்தக் குறள் மலர் என்ற வாய்பாட்டில் முடிந்திருக்கிறது.
வெண்பாவில் ஈரசைச் சீரும், மூவசைச் சீருள் காய்ச் சீரும், ஈற்றில் மட்டும் ஓரசைச் சீரும் வரும். ஈற்றில் ஈரசைச் சீரூம் வரும்; மூவசைச் சீர் வராது.
ஓரசைச் சீர்களுக்கு இயல்பாக உள்ள வாய்பாடுகளே நாள், மலர் என்பன. ஆனால், வெண்பாவில் ஈற்றில் வரும் ஈரசைச் சீர்களுக்கு, அவற்றின் இயல்பான வாய்பாடுகள் இருக்கவும் வேறு வாய்பாடுகளை வகுத்திருக்கிறார்கள். அதைக் கவனிக்கலாம்.
வெண்பாக்களின் இறுதியில் வரும் ஓரசைச் சீர்களின் வாய்பாட்டைப் பார்த்தோம். வெண்பா இறுதிச் சீராக ஈரசைச் சீர்கள் யாவும் வருவதில்லை. மாச்சீர் மட்டுமே வரும்; தேமா, புளிமா என்னும் இரண்டும் வரும். ஆனால் அவை இரண்டும் குற்றியலுகரத்தில் முடிவனவாக இருக்க வேண்டும்; அதனால்தான் தேமா, புளிமா என்ற வாய்பாடுகள் இருந்தாலும், தனியே குற்றியலுகரத்தில் முடியும் காசு, பிறப்பு என்ற வேறு வாய்பாடுகளை இலக்கணம் கூறுகிறது. முற்றுகரமும் சிறுபான்மை வரும். உகரம் அல்லாததை ஈறாக உடைய சொல் ஈரசைச் சீராக வெண்பா ஈற்றில் வராது.

""இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு''

இந்தக் குறளின் ஈற்றுச் சீர் மாட்டு என்பது; இது தேமா என்னும் வாய்பாடுடைய ஈரசைச்சீர்தான்; ஆனாலும் உகர இறுதியோடு வந்திருக்கிறதைக் கவனிக்க வேண்டும். ஆகையால் இது காசு என்னும் வாய்பாட்டைப் பெறும். இப்படியே,

""அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு''

என்னும் குறளில் உள்ள ஈற்றுச் சீர் "யுலகு' என்பது. அது புளிமா என்னும் வாய்பாட்டையுடைய ஈரசைச் சீரே ஆனாலும், உகர இறுதியை உடைமையால் பிறப்பு என்ற வாய்பாட்டை உடையதாயிற்று. காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளை ஈற்றுச் சீருக்கு மட்டும் கொள்ள வேண்டுமேயன்றி, இடையில் வரும் உகர இறுதி மாச்சீருக்குக் கொள்ளக்கூடாது.

""தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது''

இந்தக் குறளுக்கு வாய்பாடு சொல்லிப் பாருங்கள்

கருவிளங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமா
கருவிளங்காய் தேமா பிறப்பு.

இப்படி வாய்பாடு அமைக்கும்பொழுது இறுதிச் சீரைப் புளிமா என்று அமைக்கக் கூடாது. நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளை வெண்பா இறுதிச் சீருக்கு அமைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் யாவருக்கும் தெரிந்த சொற்களாக இருந்தால் வாய்பாடாக வழங்க எளிதாக இருக்கும். இந்தச் சொற்களும், இவற்றால் குறிக்கப்பெறும் பொருள்களும் தமிழ் மக்கள் நன்றாக அறிந்தவை.
நாள் - மலர் என்பவை ஓர் இனம்; காசு - பிறப்பு என்பவை ஓர் இனம். நாள் என்பது தினத்தைக் குறிக்கும் பெயர். காலைக்கும் பெயர். காலையில் மலரும் மலரை நாள் மலர் என்று சொல்கிறோம். ஆதலின், நாளுக்கும் மலருக்கும் தொடர்பு உண்டு. அது பற்றி அந்த இரண்டையும் வாய்பாடாக அமைத்தார்கள். அது மட்டும் அன்று; நாள் என்பதற்கே மலர் என்று ஒரு பொருள் உண்டு; தக்கயாகப்பரணி உரைகாரர் இந்தப் பொருளைச் சொல்கிறார். இதனாலும் நாளும் மலரும் இனமான சொற்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் காசு, பிறப்பு என்ற இரண்டுக்கும் என்ன தொடர்பு? இந்த இரண்டும் யாவருக்கும் தெரிந்த இனமான பொருள்களைக் குறிக்கும் பெயர்களாக இருக்க வேண்டும். அதனால்தான் இந்த இரண்டையும் ஒன்றாக வைத்து வாய்பாடாகக் கொண்டார்கள். பழங்காலத்தில் பெண்கள் அணியும் கலன்களில் காசு, பிறப்பு என்பவை இரண்டு. 
""கீசுகீசென்னும்'' (7) என வரும் திருப்பாவைப் பாசுரத்தில், ""காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து'' என்ற அடி வருகிறது. அங்கே காசு, பிறப்பு இரண்டும் ஒரு சேர வருகின்றன. காசு என்பதற்கு அச்சுத் தாலி என்றும், பிறப்பு என்பதற்கு ஆமைத் தாலி என்றும் பொருள் எழுதியிருக்கிறார்கள். 
தாலி என்பது கழுத்தில் தொங்கவிடும் அணிகலன். கழுத்தில் தொங்க அணிவதனால் திருமங்கலியத்துக்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலிகள் அந்த அந்த வகுப்புக்கு ஏற்றபடி வெவ்வேறு உருவம் உடையனவாக இருக்கும். தமிழ்நாட்டில் பெரும்பாலும் இரண்டு வகைத் தாலிகள் வழக்கில் இருக்கின்றன. ஒன்று புலிப்பல்லைப் போலவும் சீப்புப் போலவும் ஒரு பக்கம் பற்களை உடையதாய்த் தட்டையாய்ச் சில அடையாளங்களைப் பொறித்ததாய் இருக்கும். அதுதான் அச்சுத் தாலி. வேறு ஒரு வகைத் தாலி கரண்டி முட்டையைக் கவிழ்த்தாற் போல அரைக்குமிழாக இருக்கும்; ஆமையின் முதுகு ஓடு போலப் புடைத்திருக்கும்; அதைப் பொட்டு என்றும் சொல்வார்கள். அது ஆமைத் தாலி. கோயிலில் அம்பிகைக்கு அதை அணிந்திருப்பார்கள். பழங்காலத்தில் உருத்திரகணிகையருக்குப் பொட்டுக் கட்டும் வழக்கம் இருந்தது. அந்தப் பொட்டு ஆமைத் தாலியாகும்.
ஆகையால், இருவகைத் தாலிகளாகிய இனப் பொருளைக் குறிக்கும் சொற்களாகிய காசு, பிறப்பு என்னும் இரண்டையும் வெண்பா ஈற்றடியில் வரும் மார்ச்சீர்களுக்கு வாய்பாடாக வைத்தார்கள்.
(தொடர்ந்து பாடுவோம்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com