நூற்றெட்டுத் திருப்பதிப்ரபாவ கீர்த்தனைகள்

'தமிழ்த் தாத்தா' உ.வே.சா. முதன்முதலாக வெளியிட்ட சங்கத்தொகை நூல் பத்துப்பாட்டு. அது வெளியானது 1889-இல்.
நூற்றெட்டுத் திருப்பதிப்ரபாவ கீர்த்தனைகள்

'தமிழ்த் தாத்தா' உ.வே.சா. முதன்முதலாக வெளியிட்ட சங்கத்தொகை நூல் பத்துப்பாட்டு. அது வெளியானது 1889-இல். அதற்குப் பொருள் கொடுத்து உதவிய கனவான்களைப் பற்றி அதன் முன்றுரையில், "திருவாவடுதுறை யாதீனத்து அம்பலவாண தேசிகர், மதுரை டெப்டி கலெக்டர் தில்லை நாயகம் பிள்ளை, தஞ்சாவூர் வக்கீல் சீனிவாச பிள்ளை, சிறுவயல் ஜமீன்தார் முத்துராமலிங்கத் தேவர்' எனப் பட்டியலிட்டுள்ளார். முற்பதிப்பில் வெளியாகியுள்ள இத்தகவல் இன்றைய பதிப்புகளில் இடம்பெறவில்லை.

பத்துப்பாட்டு வெளியாவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் 1884-இல் ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்தருளிய "நூற்றெட்டுத் திருப்பதிப்ரபாவ கீர்த்தனைகள்' என்ற வேலூர் - அருகந்தம்பூண்டி கிருஷ்ணஸ்வாமிதாஸரால் பாடப்பெற்ற நூல் அச்சாகியுள்ளது. அதன் பின்னர் இணைப்பாக அந்த நூல் வெளியாக ஒரு ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை பொருளுதவி செய்த 60 பேரின் பட்டியல் வெளியாகியுள்ளது. அவர்கள், உ.வே.சா.வுக்கு உதவியவர்களைப் போல செல்வவளம் படைத்தவர், கனவான்கள் அல்லர் என்பதன் மாதிரிக்கான சில பெயர்கள் வருமாறு:

1. காரை பென்ஷன் திரகர் எத்திராஜ் முதலியார் ரூ.3
2. 14ஆவது பட்டாளம் சுபேதார் சுப்பைய நாய்க்கர் ரூ.2
3. காட்பாடி உப்பு மண்டி கோவிந்து முதலியார் ரூ.1
4. திருப்பத்தூர் ஸ்டேசன் மாஸ்டர் நாராயணசாமி பிள்ளை ரூ.1
5. திருவல்லிக்கேணி பெரியாழ்வார் சபை பார்த்தசாரதி நாய்க்கர் ரூ.1
6. திரிசிரபுரம் உறையூர் பென்ஸன் சுபேதார் கபிஸிராய பிள்ளை ரூ.5
அந்தக் காலகட்டத்தில் பொதுமக்களிடம் சிறிய தொகையை நன்கொடையாகப் பெற்று இதுபோன்று சில நூல்கள் வெளியாகி உள்ளதை இது தெரிவிக்கிறது. தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் இடம்பெற, ஆய்வாளர்கள் மேலும் முயற்சி மேற்கொண்டால், புதைந்து கிடக்கும் பல உண்மைகள் வெளிவரலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com