கவி பாடலாம் வாங்க - 49: 12.கொச்சகக் கலிப்பா வகை (1)

கொச்சகக் கலிப்பா ஐந்து வகைப்படும். அவை: தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா, சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என்பன
கவி பாடலாம் வாங்க - 49: 12.கொச்சகக் கலிப்பா வகை (1)

கொச்சகக் கலிப்பா ஐந்து வகைப்படும். அவை: தரவு கொச்சகக் கலிப்பா, தரவிணைக் கொச்சகக் கலிப்பா, சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா, மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா என்பன.

தரவு கொச்சகக் கலிப்பா

ஒத்தாழிசைக் கலிப்பாவில் வரும் "தரவு' என்னும் உறுப்பு மட்டும் தனியாக வந்தாலும், அதனோடு தனிச் சொல்லும் சுரிதகமும் சேர்ந்து வந்தாலும் அது தரவு கொச்சகக் கலிப்பா ஆகும்.

"தினைத்தனை உள்ளதோர்
    பூவினில்தேன் உண்ணாதே 
நினைத்தொறும் காண்டொறும்பே
    சுந்தொறும் எப்பொழுதும்
அனைத்தெலும் புண்ணெக
    ஆனந்தத் தேன்சொரியும்
குனிப்புடை யானுக்கே
    சென்றுதாய்க் கோத்தும்பீ'

இது நாற் சீருடைய நான்கடியால் வந்த தரவு கொச்சகக் கலிப்பா. கவிஞர்கள் நான்கடிகளால் பாடுவதே பெருவழக்காக இருக்கிறது. திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவை முதலியன எட்டடிகளால் வந்த தரவு கொச்சகக் கலிப்பாக்கள். காய்ச்சீரும் விளச்சீரும் விரவி வருவது இது. கலித்தளையும் வெண்டளையும் சிறுபான்மை நிரையொன்றாசிரியத் தளையும் கலந்து வரும். மாச்சீர் வந்தால் இயற்சீர் வெண்டளை அமையும். 

தனிச் சொல்லும் சுரிதகமும் பெற்று வந்த தரவு கொச்சகக் கலிப்பாவுக்கு உதாரணம் வருமாறு:

"குடநிலைத் தண்புறவிற் கோவலர் எடுத்தார்ப்பத்
தடநிலைய பெருந்தொழுவிற் றகையேறு மரம்பாய்ந்து
வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனத் தொன்றப்போய்க்
கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப
                              எனவாங்கு
ஆனொடு புல்லிப் பெரும்புதல் முனையும்
கானுடைத் தவர்தேர் சென்ற வாறே'

இந்தப் பாட்டில் நாற்சீரடியாகிய அளவடிகள் நான்கு முன்பும், பிறகு தனிச் சொல்லும், ஆசிரியச் சுரிதகமும் வந்திருப்பது காண்க.

    தரவிணைக் கொச்சகக் கலிப்பா

இரண்டு தரவுகளும், அவற்றில் இடையிலும் பின்னும் தனிச் சொல்லும், இறுதியில் சுரிதகமும் உடையதாகி வருவது தரவிணைக் கொச்சகக் கலிப்பா. இணை என்பது இரண்டைக் குறிப்பது.

"வடிவுடை நெடுமுடி
    வானவர்க்கும் வெலற்கரிய
கடிபடு நறும்பைந்தார்க்
    காவலர்க்கும் காவலனாம் 
கொடிபடு மணிமாடக்
    கூடலார் கோமானே!'
                                எனவாங்கு
    துணைவளைத்தோள் இவள்மெலியத்
தொன்னலம் தொடர்ப்புண்டாங்
    கிணைமலர்த்தா ரருளுமேல்
இதுவதற்கோர் மாறென்று
    துணைமலர்த் தடங்கண்ணார்
துணையாகக் கருதாரோ,
                              அதனால்
செவ்வாய்ப் பேதை இவள்திறத் 
    தெவ்வாறாங்கொல்இஃ தெண்ணிய வாறே'

இந்தத் தரவிணைக் கொச்சகக் கலிப்பாவில் எனவாங்கு என்றும், அதனால் என்றும் இடையிலும் பின்னும் தனிச் சொல் வந்தது காண்க. சுரிதகம் இன்றியும் தரவிணைக் கொச்சகம் வரும்.

"முந்நான்கு திருக்கரத்து முருகவேள் தனைப்பணிந்தார்
இன்னாங்கு தவிர்ந்தென்று மின்டவாழ் வடைவரெனப்
பன்னாளும் பெரியோர்கள் பாடுவது கேட்டிருப்போம்;
        அதனால்
 பிறவியெனும் பிணிதொலையப் பிணிமுகமேற் கொண்டருளி 
அறவுருவாம் தேவியர்கள் அணைந்திருபா லுஞ்சுடரத்
திறவிதின்நற் பவனிவரும் திருவுருவைப் போற்றுதுமே'

இரண்டு தரவு வர, இடையே தனிச்சொல் வந்த தரவிணைக் கொச்சகக் கலிப்பா இது.

(தொடர்ந்து பாடுவோம்...)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com