பாவம்! கழுதையும் தோளும்...

அக வாழ்க்கை எந்தத் திணையைச் சார்ந்ததாக இருந்தாலும் (களவு-கற்பு) ஏதாவது ஒரு வகையில் பிரிவு நிகழும்.
பாவம்! கழுதையும் தோளும்...

அக வாழ்க்கை எந்தத் திணையைச் சார்ந்ததாக இருந்தாலும் (களவு-கற்பு) ஏதாவது ஒரு வகையில் பிரிவு நிகழும். அந்தப் பிரிவில் பெரும்பாலும் தலைவியே உடலளவிலும், உள்ளத்தளவிலும் பாதிக்கப்படுவாள். தலைவனின் பிரிவுத் துயரால் அவள் உடல் மெலியும்;  பசலை நோயும் உண்டாகும். 

தலைவியின் மேனியில் பசலை படர்வதைப் பற்றிய குறிப்புகள் அகப்பாடல்களில் வெவ்வேறு நிலையில் கூறப்பட்டுள்ளன.  திருவள்ளுவரும் இதைக் குறிப்பிடுகின்றார். பசலை படர்வதற்குக் குறிப்பாகக் கண்களே காரணமானவை எனத் தலைவி நினைக்கிறாள். இந்தக் கண்களால்தான் காதல் நோயை யான் பெற்றேன். ஆனால் அவை அல்லற்படுகின்றன; அழுது அழுது வறண்டு போகின்றன (கண்விதுப்பு அழிதல்-118) என்கிறாள்.

பசலை படர்வது தொடர்பாக இன்னொரு நிகழ்வும் தொல்காப்பியப் பொருளாதிகார உரையில் பதிவாகியுள்ளது. பசலை தொடர்பான செய்திகள் யாவும் நினைக்கத்தக்கவையாக இருந்தாலும், உரைமேற்கோள் மனதிற்குள் படிமமாகக் காட்சிப்படுத்துகின்றது.

நில உரிமையாளர் ஒருவர் வழக்கம்போல சாகுபடி செய்துள்ள உழுத்தம் (உளுந்து) கொல்லையைப் பார்க்க வருகின்றார். அப்பொழுது கழுதை ஒன்று கொல்லையின் ஓரத்தில் தலையைத் தொங்கப் போட்டபடியே நிற்கின்றது. அருகில் வந்து பார்க்கின்றார்; கொல்லையில் மேய்ந்திருப்பது தெரிகின்றது.

நில உரிமையாளருக்கு மூக்கு நுனி சிவந்துவிட்டது. செடியைக் கழுதை மேய்ந்ததில் கூட அவருக்குச் சினம் எழவில்லை. நுனிப்புல் மேய்ந்தது போலத்தான் கடித்திருக்கிறது. மேய்ந்ததும் இல்லாமல் இறுமாப்போடு "நான்தான் மேய்ந்தேன்; என்ன செய்வாய்?' என்று கேட்பதுபோல நிற்கிறது. அதைக் கண்ட அவர்,  கையில் வைத்திருந்த ஆயுதத்தால் அதன் காதை அறுத்தார். மேய்ந்தது வேறு ஒரு கால்நடை.  ஆனால் பாவம் கழுதை! காதறுபட்டது. பாவம் ஓரிடம்; பழி ஓரிடம் என்பார்களே... அதுபோல.

"உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
கழுதை செவிஅரிந் தற்றால் - வழுதியைக்
கண்டன கண்கள் இருப்பப் பெரும்பணைத் தோள்
கொண்டன மன்னோ பசப்பு' (பழமொழி)
தொல்காப்பியர் முதுமொழி என்றால் என்ன என்பதைப் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகின்றார்.
"நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும்
எண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப' (தொல்.பொருள்.489)    

இந்நூற்பாவிற்குத் தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் மேலே கொடுக்கப்பட்டுள்ள உழுத உழுத்தஞ்செய்... எனத் தொடங்கும் பாடலைக் கொடுத்து, பின்வருமாறு உரை எழுதுகின்றார்.

""கூரியதாய்ச்  சுருங்கி, விழுமியதாய் எளிதாகி, இயற்றப்பட்டுக் குறித்த பொருளை முடித்ததற்கு வருமாயின் அங்ஙனம் வந்ததனைப் பொருள் முடித்ததற்குக் காரணமாகிய பொருளைக் கருதுவது முதுமொழி என்ப புலவர் என்றவாறு'' நுட்பமாக ஒரு பொருளை அறிந்து கொள்வதற்குத் தொன்மைக் காலத்திலிருந்து வழக்கிலுள்ள கழுதையின் காது அறுத்த முதுமொழி "பசலை' படர்வதற்குத் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது.

உழுத்தஞ் செடியை மேய்ந்தது ஊர்க் கன்றுக்குட்டி; ஆனால், அரியப்பட்டது கழுதையின் காது. இதே போல வழுதி (பாண்டியன்) எனப்படும் தலைவனைக் கண்டவை கண்கள்; ஆனால், பசலையை ஏற்றுக்கொண்டு மெலிந்தவை தலைவியின் தோள்கள். "பாவம்! கழுதை' என்கின்றது கன்று; "பாவம் தோள்' என்கின்றன கண்கள்.

""ஏதாவது பேசினால் பல்லை உடைத்து விடுவேன்'' என்னும் வழக்காற்றைக்கூட இதற்குச் சான்றாகக் கொள்ளலாம். பேசுவது நாக்கு; உடைபடப் போவது பல். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com