இந்த வாரம் கலாரசிகன்

தமிழக விடுதலைப் போர் வரலாற்றிலும், இதழியல் வரலாற்றிலும் சங்கு சுப்பிரமணியத்துக்கு ஒரு தனியிடம் உண்டு.
இந்த வாரம் கலாரசிகன்


தமிழக விடுதலைப் போர் வரலாற்றிலும், இதழியல் வரலாற்றிலும் சங்கு சுப்பிரமணியத்துக்கு ஒரு தனியிடம் உண்டு. ஓரணா, இரண்டணா என்று பத்திரிகைகள் விற்றுக் கொண்டிருந்தபோது, சாமானியர்களுக்கும் விடுதலை வேள்வி குறித்த செய்திகள் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்துடன் 1930-இல் காலணா விலைக்கு சுதந்திரச் சங்கு என்கிற இதழைத் தொடங்கி நடத்த முற்பட்டார் அவர். அதனால், சங்கு சுப்பிரமணியம் என்கிற பெயர் அவருக்கு நிலைத்துவிட்டது.
பாரதியார், பாரதிதாசன் இருவர் மீதும் பெரும் மரியாதை கொண்டிருந்த சங்கு சுப்பிரமணியம், அவர்களுடைய பாடல்களைப் பாடுவதைக் கேட்பதற்கே ஒரு ரசிகர் கூட்டம் அவரைச் சுற்றி எப்போதும் இருக்கும். பாரதிதாசன் தனது கவிதைகளை சங்கு சுப்பிரமணியத்தைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வார் என்று கூறுவார்கள். 
சுதேச மித்திரன் பத்திரிகையில் சில காலம் பணியாற்றிய சங்கு சுப்பிரமணியம் அனுமான், மணிக்கொடி உள்ளிட்ட பத்திரிகைகளின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். தினமணியில் வெளிவந்த அவரது பாகவதக் கதைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஜெமினி அதிபர் வாசனுடன் நெருக்கமாக இருந்த சங்கு சுப்பிரமணியம் சக்ரதாரி, சந்திரலேகா முதலிய படங்களில் பாடல் எழுதியிருக்கிறார். கதை இலாகாவில் பணியாற்றி இருக்கிறார். பாரதிதாசன் வசனம் எழுதிய ஸ்ரீராமானுஜர் திரைப்படத்தில் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
மணிக்கொடி இதழும் சங்கு சுப்பிரமணியமும் இணைபிரிக்க முடியாதவை. தமிழுக்கு அமுதென்று பேர் கவிதை, இன்பத் தமிழ் என்கிற பெயரில் மணிக்கொடியில் வெளிவந்தபோது, மணிக்கொடி அலுவலகத்தின் எழுத்தாள நண்பர்கள் புடைசூழ அமர்ந்திருக்க, சங்கு சுப்பிரமணியம் அதை இசையுடன் பாடியதாக பி.எஸ்.ராமையாவின் குறிப்பு இருக்கிறது. 
நல்ல கவிதைகளை ரசிப்பதுடன், அதை ரசித்து உரக்கப் பாடி மகிழும் ரசிகமணியாகவும், கவிதா ரசிகராகவும் இருந்த சங்கு சுப்பிரமணியம் குறித்து இப்போது நான் பதிவு செய்வதற்கு என்ன காரணம் என்று கேட்பீர்கள். நாளை அவரது பிறந்த நாள். அற்புதமான இதழியலாளரை, தேசபக்தரை நாம் மறந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் பதிவு!


எவரெஸ்ட் உச்சியில் ஹில்லரியுடன் ஏறி வெற்றிக்கொடி நாட்டிய டென்சிங் நோர்கேயின் இமயத்துப் புலி (தி ஹிமாலயன் டைகர்) என்கிற அவரது சுயசரிதையை ஆர்வத்துடன் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். ஜேம்ஸ் ராம்úஸ உல்மென் என்பவரின் உதவியுடன் டென்சிங் விவரித்த அந்தச் சுயசரிதத்தை சக்திதாசன் சுப்பிரமணியன் தமிழாக்கம் செய்திருக்கிறார். டென்சிங்குடன் இமயமலைச் சிகரங்களில் உலாவந்த உணர்வை ஏற்படுத்துகிறது இந்தப் புத்தகம்.
டென்சிங் நோர்கே சிறுவராக இருக்கும் போதே வானளாவி நிற்கும் எவரெஸ்ட் சிகரத்தைப் பார்க்கும் போதெல்லாம் அதன் உச்சியில் ஏற வேண்டும் என்று ஆசைப்படுவாராம். அப்போது, அவருக்கு எவரெஸ்ட் என்கிற பெயர் தெரியாது. சோமுலுங்மா என்கிற திபெத்திய பெயரில்தான் எவரெஸ்டைத் தெரியும். சோமுலுங்மா என்றால் உலக மாதா என்று பொருள். டென்சிங் நோர்கேவுக்கு இளமையிலேயே இருந்த, எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்கிற இளமைக்கால மோகம் அவரை ஷெர்ப்பாவாக மாற்றியதில் வியப்பொன்றுமில்லை.


இமயமலைச் சிகரங்களில் ஏறும் அவரது முயற்சி 1935-இல் தொடங்கியது. கப்ரூ, நந்ததேவி முதலிய பல சிகரங்களில் மூட்டைகளைத் தூக்கிக்கொண்டு மலையேற்றக் குழுவினருடன் செல்லும் ஷெர்ப்பாவாக ஏறி இறங்கிய அனுபவம் டென்சிங் நோர்கேவுக்குக் கிடைத்தது. 1947-ஆம் ஆண்டு கனடாவில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, ஆப்பிரிக்காவில் வாழும் டென்மான் என்பவர் எவரெஸ்டில் ஏறுவதற்கு டார்ஜிலிங் வந்து சேர்ந்தார். அவருடன் மீண்டுமோர் எவரெஸ்ட் முயற்சி. குளிர் தாங்க முடியவில்லை. காற்றும் மேகமும் வதைத்தன. திரும்பி வந்துவிட்டனர். அதன் பிறகு இத்தாலியைச் சேர்ந்த ஜியூசெப் தூசி என்பவருடன் கஞ்சன்ஜங்கா மலையேற்றப் பயணம். இதுபோல எத்தனையோ பயணங்கள், தோல்விமேல் தோல்விகள். கடைசியாகத் தனது 39-ஆவது வயதில், 7-ஆவது முறையாக எப்படியும் எவரெஸ்டில் ஏற வேண்டும் என்கிற தாளாத உறுதியுடன் பிரிட்டிஷ் கோஷ்டி ஒன்றுடன் மலை ஏறத் தயாரானார் டென்சிங்.
1953-ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் தேதி டென்சிங்கும் ஹில்லரியும் எவரெஸ்ட் சிகரத்தை நெருங்கிவிட்டனர். இன்னும் 300 அடி உயரம்தான். செங்குத்தானது, குறுகலானது, இரண்டுபுறமும் பாதாளம், பயங்கரமான பனிச்சரிவு, கரணம் தப்பினால் மரணம். அடி மேல் அடிவைத்து முன்னேறி உச்சிமீது ஏறி நின்றார் எட்மண்ட் ஹில்லரி; தொடர்ந்து டென்சிங்கும். இருவருக்கும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டு கைகுலுக்கினர். தனது அனுபவத்தை டென்சிங் இவ்வாறு பதிவு செய்கிறார்:
பரந்து கிடந்தது இமயமலை. கீழேயிருந்து பார்த்தபோது வானளாவி நின்ற சிகரங்கள் சிறியவைகளாகத் தோன்றின. எவரெஸ்ட் உச்சிமீது நின்று கொண்டிருந்த எனக்கு அவை சிறு சிறு குன்றுகளாகக் காட்சி தந்தன. இதற்காகத்தானே வாழ்நாள் முழுவதும் கனவு கண்டேன். நான் எடுத்துச் சென்ற கொடிகளை யெல்லாம் பறக்க விட்டேன். ஹில்லரி புகைப்படங்கள் எடுத்தார். சுமார் 15 நிமிடங்கள் நாங்கள் அந்த உச்சியில் நின்றோம். 
அதற்குப் பிறகு டென்சிங்கும் ஹில்லரியும் உலக வரலாற்றில் இடம்பெற்ற நாயகர்களாக வலம் வந்தனர். பண்டித நேரு, பாபு ராஜேந்திர பிரசாத், பிரிட்டிஷ் மகாராணி என்று எல்லோரும் அவரது அனுபவத்தை நேரில் கேட்டுப் பரவசமடைந்தனர். அதற்குப் பிறகு டென்சிங் 
நோர்கே என்ன ஆனார்?
1954-ஆம் ஆண்டு மலை பயில் கழகம் உருவாக்கப்பட்டது. மலை ஏறும் கோஷ்டியினருக்கும் குழுவினருக்கும் ஷெர்ப்பாக்களுக்கும் தான் பெற்ற அனுபவங்களைப் பயிற்றுவித்தார் டென்சிங். தனது சுயசரிதையை அவர் இப்படி முடிக்கிறார் - உலகம் பெரிது, மிகப்பெரிது. ஆனால், எவரெஸ்டைப் பார்க்கும்போது உலகம் சிறிது, மிகச்சிறிது. தூஜிசே சோமுலுங்மா!
மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும்; மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். ஒவ்வொரு முறை படிக்கும்போதும் இமய
மலையில் வலம் வந்த பூரிப்பு. நானே எவரெஸ்ட் சிகரத்தின் மேல் ஏறி நின்றபடி, உலகம் சிறிது மிகமிகச் சிறிது என்று டென்சிங்கைப் போல சொல்லத் தோன்றுகிறது. 


கவிதை எழுதியவர் பெயர் ப.செல்வகுமார் என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும். இது அவரது எந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது என்று தெரியாது. கவிதையின் தலைப்பு ஞாநி. சுருக்கென்று தைக்கிறது நறுக்கென்று அவர் எழுதியிருக்கும் மூன்றுவரிக் கவிதை:
வாக்குப் பெட்டியை 
உண்டியலைப் போலச் செய்தவன்
தீர்க்கதரிசி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com