இந்த வார கலாரசிகன்

இந்த வார கலாரசிகன்

இது அண்ணல் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த ஆண்டு. இதையொட்டி சேலம் ஆத்தூரில் "பாரதி - மகாத்மா பண்பாட்டு அறக்கட்டளை', நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் நான்கு நாள் நிகழ்ச்சியை வெகு விமர்சையாக

இது அண்ணல் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த ஆண்டு. இதையொட்டி சேலம் ஆத்தூரில் "பாரதி - மகாத்மா பண்பாட்டு அறக்கட்டளை', நகராட்சி அண்ணா கலையரங்கத்தில் நான்கு நாள் நிகழ்ச்சியை வெகு விமர்சையாக ஏற்பாடு செய்திருந்தது. கடந்த 50 ஆண்டுகளாக "பாரதி - மகாத்மா பண்பாட்டு அறக்கட்டளை' அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறது என்பது மட்டுமல்லாமல், அண்ணலின் பிறந்த நாளையொட்டி கடந்த 25 ஆண்டுகளாகப்  பைந்தமிழ்ப் பெருவிழாவும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு அந்த அமைப்பின் பொன்விழா ஆண்டு என்பதால், அக்டோபர் 2-ஆம் தேதி நிகழ்வில்  நான் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்புக் கட்டளை இட்டிருந்தார் அறக்கட்டளையின் தலைவர் பே.செ.சுந்தரம்.

நான்கு நாள் நிகழ்ச்சியை நடத்துவதற்குப் பே.செ.சுந்தரமும் அறக்கட்டளை நிர்வாகிகளும் எந்த அளவுக்குப் பாடுபட்டிருப்பார்கள் என்பதை அழைப்பிதழ் வெளிப்படுத்தியது. இத்தனை ஆளுமைகளையும் வரவழைத்து, ஆத்தூரில் நிகழ்ச்சி நடத்துவது என்பது  சாதாரணமான ஒன்றல்ல.  அண்ணல் காந்தியடிகளின் மீது மக்கள் வைத்திருக்கும் ஈடுபாட்டையும், மரியாதையையும் ஆத்தூரில் நடைபெற்ற அரங்கம் நிறைந்த விழாவில் கூடியிருந்த  மக்கள் வெள்ளம் உணர்த்தியது.

மகாத்மாவை இழித்தும், பழித்தும் பேசும் சிறுபான்மைக் கூட்டம் ஒன்று சமூக ஊடகங்களில் நாக்கில் நரம்பில்லாமல் வசைபாடினாலும் கூட, மக்கள் மன்றத்தின் மனசாட்சியாகக் காந்தியடிகள்  மட்டும்தான் திகழ்கிறார் என்பது மேடை ஏறியபோது எனக்குப் புரிந்தது. மகாகவி பாரதியின் "வாழ்க நீ எம்மான்' என்ற பாடலை மனதிற்குள் ஒரு முறை சொல்லிக்கொண்டு எனது உரையை நிகழ்த்தினேன். 

இதேபோல அண்ணலின் 150-ஆவது பிறந்த ஆண்டு தமிழகத்தின் ஒவ்வோர் ஊரிலும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டு, காந்தியத்தின் அருமை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.


ஆத்தூர் பத்திரிகையாளர்கள் "தமிழ் ஊடக எழுத்தாளர்கள் நலச்சங்கம்' என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பை எனக்கு வழங்கினர்.  பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த ஆத்தூர், கெங்கவல்லி, வாழப்பாடி வட்டாரத்தைச் சேர்ந்த செய்தியாளர்கள் ஒற்றுமையாகவும், நட்புறவோடும் செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. இதற்கு முன்பு இதேபோல ஊத்தங்கரையிலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, அவர்களுடன் அளவளாவக் கிடைத்த அந்த வாய்ப்பை இப்போதும் நினைவுகூர்ந்து மகிழ்கிறேன்.

ஆத்தூருக்குச் சென்றிருந்தபோது,  பத்திரிகையாளர் பெ.சிவசுப்பிரமணியன் அவர் எழுதிய "பொய் வழக்கும் போராட்டமும்' என்கிற புத்தகத்தை அந்த நிகழ்ச்சியின்போது எனக்கு வழங்கினார்.  

பெ.சிவசுப்பிரமணியன்  சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தின் மூலம் எனக்கு அறிமுகமானவர்தான் என்றாலும், அவரை நேரில் சந்தித்தது இதுதான் முதல் முறை.

"பொய் வழக்கும் போராட்டமும்' 

தமிழக   - கர்நாடக அதிரடிப் படையின் அடக்குமுறைகளை எதிர்கொண்ட செய்தியாளரின் சிறைக்குறிப்புகள் என்று கூறுவதைவிட,  ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளரின் இதழியல் பயணம் என்று குறிப்பிடுவதுதான் பொருத்தமாக இருக்கும்.  தமிழக - கர்நாடகக் காவல் படையினரால் தேடப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பன் எனும் கதாபாத்திரம் உண்மையா? பொய்யா? என்கிற ஐயப்பாடு நீண்ட காலம் இருந்து வந்தது. காட்டுக்குள் மறைந்திருந்த அந்த மர்மத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவர, தன்னையே பணயமாக வைத்து சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழும் அடர்ந்த காட்டுக்குள் நுழைந்தவர் "நக்கீரன்' இதழின் நிருபர் சிவசுப்பிரமணியன். 

1993-லிருந்து ஆண்டுக்கு இரண்டு நேர்காணல்கள் வீதம் ஏழு ஆண்டுகள் 56 நாள்கள் வீரப்பனுடன் காட்டிலேயே தங்கியிருந்தவர் அவர். 

சித்திரவதை, சிறை, உறவுகளைச் சந்திக்க முடியாத நிலை, சிறையில் இருக்கும்போது தந்தையின் மரணச் செய்தி என்று பல உண்மைச் சம்பவங்கள் சிவசுப்பிரமணியனால் பதிவு செய்யப்படும்போது, படிப்பவர்களும் அவருடைய அனுபவங்களில் ஒன்றிவிடுவதுதான்  "பொய் வழக்கும் போராட்டமும்' என்கிற இந்தப் புத்தகத்தின் தனிச்சிறப்பு. கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதும், அவருடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதும், அவர் மீட்கப்பட்டதும்  முழுமையாகவும், தெளிவாகவும்  "பொய் வழக்கும் போராட்டமும்'  புத்தகத்தில்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

நிருபராக இருந்த சிவசுப்பிரமணியனுக்கு நக்கீரன் இதழியல் ஆசிரியர் கோபால் அளித்த ஊக்கமும், துணிவும், பாதுகாப்பும் பல இடங்களில் மெய்சிலிர்க்க வைக்கின்றன. தமிழக இதழியல் வரலாற்றில்  இன்னொரு பத்திரிகை ஆசிரியர் தன் நிருபர் ஒருவருக்காக இந்த அளவுக்குத் துணை நின்றிருப்பாரா என்பது  சந்தேகம்தான்.

""என்னுடைய இந்தப் பத்தாண்டுகால அனுபவம் என்னைப் போன்ற மற்ற செய்தியாளர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்வுகளை நூலாக எழுதியுள்ளேன். எதிர்கால ஊடகவியல் சமூகம் இதைவிடவும் பல மோசமான சிக்கல்களையும், சவால்களையும், பொய் வழக்குகளையும், அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும். அதை எதிர்கொள்ளத் தயார் செய்து கொள்ளுங்கள்'' என்கிற பெ.சிவசுப்பிரமணியனின் "என்னுரை'தான் இந்தப் புத்தகம் குறித்த  என் கணிப்பும்.


கடந்த ஆண்டு ஜூலை-டிசம்பர் 

"தொடரும்' இதழில்  வெளிவந்திருக்கிறது "கூடானாலும் கூண்டானாலும்...' என்கிற கவிதை. அருணன் கபிலனை "தினமணி'யின் நடுப்பக்கக் கட்டுரையாளராகத்தான் இதுவரை நான் அறிந்திருக்கிறேன். அவர் ஒரு கவிஞரும் கூட என்பதை இந்தக் கவிதை வெளிப்படுத்துகிறது. 

கூடுவிட்டுக் கூடுபாயும்
வித்தைகள் தெரிந்தாலும்
உன் கூடு விட்டு
இன்னொரு கூடு பாய
என் மனம் ஒப்பவில்லை
கூடு
கூண்டானாலும்
சம்மதந்தான்
நீ 
கூடவே இருப்பதென்றால்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com