புகழொடு சாதல்!

கணியன் பூங்குன்றனார் என்னும் சங்கப் புலவர், "சாவு' என்பது உலகத்திற்குப் புதியது இல்லை என்றார்.  சாதலைவிடத் துன்பமானது இல்லை என்றார் திருவள்ளுவர்.
புகழொடு சாதல்!

கணியன் பூங்குன்றனார் என்னும் சங்கப் புலவர், "சாவு' என்பது உலகத்திற்குப் புதியது இல்லை என்றார்.  சாதலைவிடத் துன்பமானது இல்லை என்றார் திருவள்ளுவர். துன்பமிக்க சாதல் என்னும் நிலைத்த பிரிவில், சான்றோர்க்கு ஒரு நிறைவு தோன்றும். "நாம் வாழ்ந்த வாழ்க்கை புகழ் தந்த வாழ்க்கை. பலர் மனத்திலும் நாம் இடம்பெற்றிருக்கின்றோம்' என்று கருதி மனம் நிறையும் வாழ்க்கைப்பேறு எல்லார்க்கும் கிடைப்பதில்லை.
கடையெழு வள்ளல்களில் ஒருவன் ஆய்அண்டிரன். தன்னை நாடிவந்தவர்க்கு யானைகளைப் பரிசாகத் தந்தவன். "வந்தவர்க்கெல்லாம் இப்படி யானைகளைக் கொடுக்கிறாயே உன் நாட்டில் ஒரு பெண் யானை ஒரு சூலில் (கர்ப்பத்தில்) பத்துக் குட்டிகளைப் பெறுகின்றதா?' என்று கேட்கிறார் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார். அத்தகைய கொடை வள்ளல் இறந்தபோது மன்னுயிரெல்லாம் துன்புறக் கண்டனர். முடமோசியார் உள்ளம் கலங்கினர். அவர் வருந்திப் பாடுகின்றார்.
"தன்னை நாடி வந்த இரவலர்க்குத் தேரைக் கொடுத்த
ஆய்வள்ளல் இறந்துபட்டான் அவன் வான உலகம்
வருவது அறிந்து, இந்திரனின் அரண்மனையில்
உள்ள முரசு முழங்குகின்ற ஓசை கேட்கிறது'
என்று கூறக் காண்கிறோம். அவ்வளவு புகழை அவன் இவ்வுலகத்தில் பெற்றுள்ளான் என்பது பொருள். வீரத்தாலும், கொடையாலும், கல்வியாலும், சான்றாண்மைப் பண்புகளாலும் ஒருவர்க்கு இவ்வுலகில் புகழ் மிகும். வீரத்தாற் புகழ்பெற்றவன் கரிகாலன்; கொடையாற் புகழ்பெற்றவன் குமணன்; கல்வியாற் புகழ்பெற்றவர் கபிலர்; பண்பினாற் புகழ்பெற்றவன் கோப்பெருஞ்சோழன். இவர்களின் பூத உடம்பே செத்தது; புகழ் உடம்பிற்குச் சாவே இல்லாமல் நிலைபெற்றது அவர் பெயர். "ஒருவர் இறந்த பின்னும் இருக்கின்றார் என்று சொல்லத்தக்க சாக்காடு புகழோடு வாழ்ந்தவர்க்கே உரியது' என்கிறார் திருவள்ளுவர்.
புகழொடு வாழ்ந்தவர்கள் இறந்த நாளை நினைத்து ஒவ்வோராண்டும் மனித குலம் அழுகின்றது. புகழ்மிக்க அப்பெருவாழ்வை மானுடம் மறக்கவில்லை. இதைத்தான் பெருந்தலைச் சாத்தனார் போற்றி உரைக்கின்றார்.
"நிலையாத உலகத்தில் நிலைபெறுவதற்காகத் தம்
புகழை நிறுவி மாய்ந்து போனார்கள்'  (புறநா)

என்று கூறுகின்றார்.   இந்தப் புகழைப் பொருள் கொடுத்து வாங்க முடியுமா? விலைக்குட்படும் பெருமையா அது? அது தானே சிலர் முகவரியைக் கேட்டுக் கொண்டு வந்து கதவைத் தட்டும். தன்னைத் தேடி வருபவரை அது பொருட்படுத்துவதில்லை.
நன்னன் வழிவந்த அரசர்கள் இருவர். அவருள் மூத்தவன் இளங்கண்டீரக்கோ; இளையவன் இளவிச்சிக்கோ இருவரும் ஒன்றாக அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த போது, பெருந்தலைச் சாத்தனார் அங்கு வந்து மூத்தவனாகிய இளங்கண்டீரக்கோவைத் தழுவி வாழ்த்தினார். இளவிச்சிக்கோவை தழுவவும் இல்லை; பாராட்டவும் இல்லை. அது குறித்து விச்சிக்கோ கேட்டபோது அவர் கூறுகின்றார்.
""விச்சிக்கோவே! கண்டீரக்கோ, தன்னை நாடிவரும் பாணர்க்கும் விறலியர்க்கும் புலவர்க்கும் யானைகளையும், அணிகலன்களையும், பிற பரிசிலையும் தருபவன். ஆதலின் அவனை நான் தழுவினேன். நீயும் நன்னன் மரபில் வந்தவன்தான்.  ஆனால், நீ உன்னை நாடி வருவோர்க்குக் கதவை அடைத்துக் காணாது மறுப்பவன். எனவே, என்னை ஒத்த புலவர்கள் உன்னைப் பாடுவதில்லை'' (151) எனக் கூறினார்.  புகழொடு வாழ்ந்தவர்கள் மானுட மதிப்பில் என்றும் இருப்பவர்களாக இருக்கின்றனர்.
பாலைக்கலியில், தோழி தலைவனை நோக்கிக் கூறும் போது, ""கடைநாள் இதுவென அறிந்தாரும் இல்லை'' என்று கூறக்காண்கிறோம்.
சாவு என்னும் இறுதி எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்பது இதற்குப் பொருள். மருத்துவத்தால் சாவைத் தவிர்க்க முடியவில்லை. நேற்று இருந்தார், இன்று வெந்து நீறானார் என்று பட்டினத்தார் கூறுவது போல வாழ்க்கைக் கயிறு திடுமென அறுந்துபோவதையே பலரும் குறிக்கக் காணலாம். இத்தகைய நிலையாமை இருள் சூழ்ந்த வாழ்வில், மனிதன் அறிந்துகொள்ள வேண்டியது தனக்கு இந்த உலகில் நிலையான இடமில்லை என்பதுதான். அவ்வாறிருக்கும் போது வேர்க்க வேர்க்கக் காடு கழனி மாடு மனை, மக்கள் செல்வமெனச் சேர்த்துச் சேர்த்துத் தானும் துய்க்காமல், பிறர்க்கும் உதவாமல் போனால் புகழ் எப்படி அவர்களுக்கு உரியதாகும்? ஒன்றை இழந்தால் ஒன்றைப் பெறலாம் என்பது உலக நியதி. ஈட்டிய பொருளை வறியோர்க்குக் கொடுத்து வான்புகழைப் பெற்றவர்கள் இறந்த பிறகும் வாழ்பவர்களாகப் போற்றப்படுகின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்களின் பெயர்களை நாம் இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். இவர்கள் ஈட்டிய புகழ் எத்தகையது? மலைபடுகடாம் இதனைத் "தொலையா நல்லிசை' என்று குறிக்கக் காண்கிறோம். காலப் பேராறு இவர்களின் பெயரை அழிக்காதவாறு கல்லில் வெட்டிய எழுத்துகளாய் மக்கள் மனம் பேணிக் கொண்டிருக்கின்றது. தானே வரும் புகழ், சாவினால் மறைக்கப்படாது; சரித்திரத்தால் புறக்கணிக்கப்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com